Published:Updated:

``நாளைக்கான நேரம் என்னிடம் இல்லை. ஏனென்றால் என் வாழ்க்கையே பெரும்போதை!"- மீண்டும் சந்திப்போம் ரிஷி கபூர்!

நீண்டநாள்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ரிஷிகபூரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. ரிஷி கபூரின் நினைவுகள் இங்கே!

பாலிவுட்டின் பளபள ஸ்டார் ரிஷி கபூர் தனது 67-வது வயதில் இன்று மரணமடைந்திருக்கிறார். நீண்டநாள்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ரிஷிகபூரின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. ரிஷி கபூரின் நினைவுகள் இங்கே!

"பலர் நினைப்பதுபோல என் தந்தை இயக்கிய `பாபி' படம், என்னை நாயகனாக அறிமுகம் செய்ய எடுக்கப்பட்டதில்லை. பல லட்சங்களைக் கொட்டி அவர் எடுத்த `மேரா நாம் ஜோக்கர்' படம் மிகப்பெரிய தோல்வி. அந்தத் தோல்வியிலிருந்து மீள்வதற்காகவே என் தந்தை `பாபி'யை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதில் ராஜேஷ் கன்னாவை நடிக்கவைக்க அவரிடம் பணமில்லை என்பதால் நான் அறிமுகமானேன்.'' - ஒரு பேட்டியில் ரிஷி கபூர் தன்னுடைய சினிமா அறிமுகம் குறித்து சொன்ன வார்த்தைகள் இவை.

ரிஷி கபூர்
ரிஷி கபூர்

கோடீஸ்வர குறும்புக்காரன் இந்த ரிஷி கபூர். எழுபதுகள் முழுவதும், ஒரு துடிப்பான இளம் ஹீரோவாக அவர் இருந்தார். எப்படி ஹ்ரிதிக் ரோஷனின் அறிமுகம் இருந்ததோ, எப்படி ரன்பீர் கபூரின் அறிமுகம் இருந்ததோ அப்படித்தான் ரிஷி கபூரின் அறிமுகமும் இருந்தது. `பாபி' படம் தமிழ்நாட்டில்கூட சூப்பர்ஹிட்டாக ஓடியது. அந்தப் படத்தின் வெற்றியைக் கணக்கில் கொண்டால், ரிஷி கபூர் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியையே தழுவின.

`பாபி' வெளியான 1973-ல் இருந்து கிட்டத்தட்ட 1996 வரை பல இந்திப் படங்களின் ஹீரோ. ஆனால், பல படங்கள் ஓடாமலேயே போயின. பிற நாயகர்களுடன் சேர்ந்து நடித்த படங்களே ரிஷி கபூரின் திரைவாழ்க்கையில் பெரும்பாலான ஹிட்களாக மாற்றின. ரிஷி கபூரின் படங்கள் பெருமளவில் ஓடாமல் இருந்தாலும், ஒரு ஹீரோவாக அவரது வசீகரம் பலருக்கும் பிடித்தே இருந்தது. ராஜ் கபூரின் மகன் என்ற ஒரு அந்தஸ்தே பல படங்களில் அவர் நடிக்கப் போதுமானதாகவும் இருந்தது. தமிழில், நடிகர் கார்த்திக்கும் பிரபுவும் சேர்ந்த கலவை என்று இவரைச் சொல்லலாம்.

பலர் நினைப்பதுபோல என் தந்தை இயக்கிய `பாபி' படம், என்னை நாயகனாக அறிமுகம் செய்ய எடுக்கப்பட்டதில்லை. பல லட்சங்களைக் கொட்டி அவர் எடுத்த `மேரா நாம் ஜோக்கர்' படம் மிகப்பெரிய தோல்வி. அந்தத் தோல்வியிலிருந்து மீள்வதற்காகவே என் தந்தை `பாபி'யை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. அதில் ராஜேஷ் கன்னாவை நடிக்கவைக்க அவரிடம் பணமில்லை என்பதால் நான் அறிமுகமானேன்.''
ரிஷி கபூர்

ரிஷி, அமிதாப் பச்சனுடன் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். ரிஷி கபூர் பெரும்பாலும் நினைவுகொள்ளப்படுவது அவரது திரைப்படங்களுக்காக அல்ல... காலத்தால் அழியாத அவரது பாடல்களுக்காகத்தான். இவருக்கென்றே பல அட்டகாசமான பாடல்களை ஆர்.டி பர்மன் இசையமைத்துக்கொடுத்திருக்கிறார். இந்திப் படங்களின் பாடல்களில் ஸ்வெட்டர்கள் மிக அதிகமாக அணிய ஆரம்பித்த நடிகர் ரிஷி. `பாபி'யில் தொடங்கி, அவருக்கு அமைந்த பாடல்கள் அற்புதமானவை. பாபியின் அனைத்துப் பாடல்களும் இன்றும் திரை ரசிகர்களுக்கு மறக்காது. அதில் அவருக்குப் பின்னணி பாடியவர், ஷைலேந்த்ர சிங். அவருக்கும் பாபிதான் ஒரு பாடகராகப் பெரிய திருப்பு முனை. இதன்பின் ஏராளமான பாடல்கள் ரிஷி கபூருக்கு அமைந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமர் அக்பர் ஆண்ட்டனியில் இவருக்கு முஹம்மத் ரஃபி பாடிய `பர்தா ஹை பர்தா’ பாடல் மிகச்சிறப்பான கவ்வாலியாக அமைந்தது. நஸீர் ஹுஸைன் இயக்கிய `ஹம் கிஸி ஸே கம் நஹின்’ படம் 1977-ல் வெளியான சூப்பர்ஹிட். அதிலும் பாடல்கள் இந்தியாவெங்கும் பிரபலமாயின. 1980-ல் சுபாஷ் கையின் `கர்ஸ்' படத்தில், முன்ஜென்ம நினைவு பற்றிய கதையில் நடித்து, அதன் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்கள். கிஷோர் குமார் பாடிய `ஓம் ஷாந்தி ஓம்’, முஹம்மத் ரஃபியின் `தர்த் யே தில்’ ஆகியவை உதாரணங்கள். `லைலா மஜ்னு', `நஸீப்', `சர்கம்', `ப்ரேம் ரோக்', கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த `சாகர்', பாம்புக்காகவே பிரபலமாகி ஓடிய `நாகினா' (ஶ்ரீதேவிதான் பாம்பு), `சாந்த்னி', `ஹீனா, போல் ராதா போல்', `தாமினி' என்று பல படங்களின் பாடல்கள் ரிஷி கபூரின் பெயரைச் சொல்லும்.

ரிஷி கபூர்
ரிஷி கபூர்

பதினைந்து படங்களில் தன்னுடன் இணைந்து நடித்த நீத்து சிங்கைத்தான் திருமணம் செய்துகொண்டார் ரிஷி. இவரின் மகன்தான் ரன்பீர் கபூர். மகள் ரித்திமா கபூர். கடந்த சில வருடங்களில் ரிஷி கபூரின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் மிகவும் பிரபலமானவை. அவரது சுயசரிதையான `குல்லம் குல்லா: Rishi Kapoor Uncensored' புத்தகத்தில் பல விஷயங்கள் உண்டு. தனது ட்விட்டரிலும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய ஸ்டேட்மென்ட்களை எழுதியே வந்திருக்கிறார்.

நடிக்க வந்த புதிதில், ரிஷி கபூருக்கு அமிதாப் பச்சனைப் பிடிக்காது. பின்னே? ரிஷி கபூர் ஒரு பரம்பரை நடிக வாரிசு. எந்த சிரமமும் பட்டதில்லை. பிறந்ததிலிருந்தே கோடீஸ்வரர்.

அப்படிப்பட்டவர், தனது சூப்பர்ஸ்டார் தந்தையால் ஒரு படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, அது இந்தியா முழுதும் பிய்த்துக்கொண்டு ஓடியும் தன்னால் சூப்பர் ஸ்டாராக முடியவில்லை என்றால் எப்படி இருக்கும்?

இருவரும் இணைந்து நடித்த முதல் படமான `கபி கபி' (1976)யில் இருவரும் பேசிக்கொண்டதே கிடையாது என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் ரிஷி. அதன்பின் இருவரும் இணைந்த `அமர் அக்பர் ஆண்ட்டனி’ (1977) படத்தில்தான் இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

ரிஷி கபூர் - ரன்பீர் கபூர்
ரிஷி கபூர் - ரன்பீர் கபூர்
`பாபி'யில் தன் ஹீரோயினான டிம்பிள் கபாடியாவின் மகள் ட்விங்கிள் கன்னாவின் (அக்‌ஷய் குமாரின் மனைவி) பிறந்தநாளுக்கு ஒரு ட்வீட் போடுகிறார். எப்படி தெரியுமா? `பிறந்தநாள் வாழ்த்துகள் டியர்... உன் அம்மாவுடன் 'பாபி'யில் நான் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தபோது நீ அவளது வயிற்றில்தான் இருந்தாய்... lol'' என்று.

அமிதாப் மேல் ரிஷி கபூர் வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளில் ஒன்று தயாரிப்பாளர்கள் எல்லோரும் அமிதாப் மேலேயே கவனம் செலுத்தினார்கள் என்பது. இன்னொன்று அமிதாப், தன்னுடன் நடித்தவர்களுக்குச் சரியான மரியாதை கொடுத்ததே இல்லை என்பது. அதேபோல் இவர் வைத்த இன்னொரு குற்றச்சாட்டு, நடிகை வைஜெயந்தி மாலா மீதானது. ராஜ் கபூருக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும் இருந்த உறவு பற்றிய பல செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் வைஜெயந்திமாலாவோ, இதெல்லாம் ராஜ் கபூர் பப்ளிசிடிக்காகப் பரப்பிய வதந்திகள் என்றே சொல்லி வந்திருக்கிறார். ஆனால் தனது சுயசரிதையில், ராஜ் கபூருக்கு வைஜெயந்தி மாலாவுடன் இருந்த உறவு உண்மைதான் என்று எழுதியதோடு, அதனால் தன் அம்மா க்ருஷ்ணா மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டார் என்றும் எழுதியிருக்கிறார் ரிஷி.

ட்விட்டரில் பல சம்பவங்களைச் செய்திருக்கிறார் ரிஷி கபூர். 2017-ல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குச் சென்றபோது, இங்கிலாந்தில் கங்குலி வெற்றிபெற்றதும் டி-ஷர்ட்டைக் கழற்றி சுற்றிய அந்தப் படத்தைப் போட்டு, ``இதையே இப்போதும் எதிர்பார்க்கிறேன்'' என்று எழுதினார். இது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர், நான் பெண்கள் அணியைச் சேர்ந்த யாரும் இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே? சௌரவ் கங்குலி மறுபடியும் இப்படிச் செய்ய வேண்டும் என்றுதானே சொன்னேன் என்று சொல்லி கூலாக நகர்ந்துவிட்டார்.

`பாபி'யில் தன் ஹீரோயினான டிம்பிள் கபாடியாவின் மகள் ட்விங்கிள் கன்னாவின் (அக்‌ஷய் குமாரின் மனைவி) பிறந்தநாளுக்கு ஒரு ட்வீட் போடுகிறார். எப்படி தெரியுமா? ‘பிறந்தநாள் வாழ்த்துகள் டியர்... உனது அம்மாவுடன் 'பாபி'யில் நான் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தபோது நீ அவளது வயிற்றில்தான் இருந்தாய்... lol'' என்று.

கபூர் ஃபேமிலி
கபூர் ஃபேமிலி

2017-ல் பிரபல நடிகர் வினோத் கன்னா இறந்தபோது ரிஷிகபூர் எழுதிய ட்வீட் மிகவும் ஆழமானது. "ஒரே ஒரு இளைய தலைமுறை நடிகன்கூட வினோத் கன்னாவின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை. இது வெட்கமான செயல். நானுமே இறக்கையில் இதற்குத் தயாராகத்தான் இருக்க வேண்டும். இப்போதைய நடிகர்களுக்கு மரியாதை உணர்வே கிடையாது!'’ என்று எழுதியிருந்தார். அவர் மறைவு யாருமே கலந்துகொள்ளமுடியாதபடி `கொரோனா' காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இந்திப் பாடல்களின் டிஸ்கோ காலகட்டத்தில் பல சூப்பர்ஹிட் பாடல்களுக்குச் சொந்தக்காரர், சென்று வரட்டும். அவரது பாடல்கள் போதாதா, அவர் உயிர்வாழ்வதற்கு? 'படே தில்வாலா' படத்தில் ஆர்.டி. பர்மன் இசையமைத்து, கிஷோர் குமார் பாடிய ரிஷி கபூரின் பாடல் அவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடியது.

`ஜீவன் கே தின், ச்சோட்டே சஹி, ஹம் பி படே தில்வாலே, கல் கீ ஹமே, ஃபுர்ஸத் கஹா, சோச்சோ ஜோ ஹம் மத்வாலே….’ வாழ்க்கையின் நாள்கள் எண்ணப்படுகின்றன. எனினும், எனது இதயம் பெரிது... இருந்தும், நாளைக்கான நேரம் என்னிடம் இல்லை. ஏனென்றால் என் வாழ்க்கையே பெரும்போதை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு