Published:Updated:

#ShakuntalaDevi: `இவள் மரமல்ல, மனுஷி!' - எப்படியிருக்கிறது வித்யாபாலனின் ஷகுந்தலா தேவி?!

கார்த்தி

ஷகுந்தலா தேவியின் வாழ்க்கை சுவாரஸ்யங்களுக்காகவும், வித்யா பாலனின் அப்பழுக்கற்ற நடிப்புக்காகவும், இந்த வீக்கெண்டில் ஷகுந்தலா தேவியைத் தாராளமாக க்ளிக் செய்யலாம்.

ஒரு புத்தகத்தின் கடினமான சாராம்சத்தைக்கூட ஒரு சினிமா அதன் காட்சிகளின் மூலம் நம்முள் சுவாரஸ்யமாய் கடத்திவிடும். பள்ளிப் பருவங்களில் படித்த வித்தியாசமானதொரு பெயர் ஷகுந்தலா தேவி. அந்தப் பெயரைக் கேட்டதும் ̀ மனிதக் கணிணி' எனும் சொல்லும் கணிதமும் கூடவே தொற்றிவிடும். எப்பொழுதும் ஆச்சர்யம் கொள்ளும் ஒரு கணித மேதையின் வரலாறு என்பதாலும், பயோபிக் ஸ்பெஷலிஸ்ட்டான வித்யா பாலன் நடித்திருப்பதாலும், அமேசானில் வெளியான சில மணி நேரங்களிலேயே படத்தைப் பார்த்தாயிற்று. எப்படி இருக்கிறது ஷகுந்தலா தேவி?

Vidya Balan
Vidya Balan

ஷகுந்தலா தேவி என்றதும் தோன்றும் கணிதத்தின் மீதான பிரமிப்புகள் படம் முழுக்கவே இருக்கின்றன. பெங்களூருவில் வறுமையான சூழலில் பிறக்கும் ஷகுந்தலா தேவிக்கு, சிறு வயதிலேயே கணிதத்தின் மீதான ஆர்வம் வருகிறது. ஒரு கணத்தில் அவரால் எந்த சாதாரணமான கணக்குக்கும் பதில் சொல்ல முடிகிறது. சர்க்கஸ் கலைஞராகப் பிழைப்பு நடத்தி குடும்பத்தை இயக்கத் தள்ளாடும் ஷகுந்தலாவின் அப்பாவுக்கு இது 'வராது வந்த மாமழை.' பள்ளிகளுக்கு ஒரு சர்க்கஸ் விலங்கைப் போல் ஷகுந்தலாவை அழைத்துச் சென்று காசு பார்க்கிறார். பள்ளி படிப்பே இல்லாமல், வளர்கிறாள் ஷகுந்தலா. தனக்கு இருக்கும் கணிதத்திறமையை விற்று, அப்பாவின் தொழிலான கணித சர்க்கஸை உலகம் முழுக்க நடத்துகிறார் ஷகுந்தலா. இந்தக் கணிதத்துக்காக அவர் தரும் விலையைப் பற்றி பேசுகிறது ஷகுந்தலா தேவி பயோபிக்.

ஷகுந்தலா தேவியாக வித்யா பாலன். முதல் படத்துக்கான வாய்ப்பு மட்டும்தான் வித்யா பாலனுக்கு தள்ளிக்கொண்டே போனது. அடுத்து நடந்தது எல்லாம் வியப்புகள்தான். என்ன கதாபாத்திரமாக இருந்தாலும், அது வித்யா பாலன் என்றால், இன்னும் கொஞ்சம் நெருக்கமாகிவிடுகிறது. இந்த நூற்றாண்டில் சிறந்த பெண்களுக்கான சினிமா என வகைமைப்படுத்தினால், அதில் சில வித்யா பாலன் படங்கள் நிச்சயம் இடம்பெரும். என்.டி.ஆர் பயோபிக், 'நேர் கொண்ட பார்வை' என தென்னிந்திய படங்களில் மிகவும் சிறிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும், ஷகுந்தலா தேவி முழுக்க முழுக்க வித்யா பாலன்தான்.

Shakuntala Devi
Shakuntala Devi
படத்தில் ஷகுந்தலா தேவி இவ்வாறாக சொல்வார். "நான் நேற்றையைவிட ஒரு நாள் முதுமை அடைந்திருக்கிறேன். நாளையைவிட ஒரு நாள் இளமையாக இருக்கிறேன்.''

கல்லூரிப் பருவம் தொடங்கி பல்வேறு கால நிலைகளில் ஷகுந்தலா தேவியின் கதாபாத்திரம் படத்தில் வருகிறது. ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வசன உச்சரிப்பு, பேசும் தொனி, ஆடைகள், அகல விரியும் கண்கள் என அனைத்திலும் அட்டகாசமாய் ஆச்சர்யப்படுத்துகிறார் வித்யா. இரட்டை ஜடை போட்டுக்கொண்டு லண்டன் நகர வீதிகளில் சுழலும் கதாபாத்திரத்தில் இருந்து, வாய் உப்பி பாப் கட்டில் நகரும் முதுமை வரை ஷகுந்தலாவின் அத்தனை மேனரிசங்களையும் நகலெடுத்து செழுமைப்படுத்தியிருக்கிறார் வித்யாபாலன். அதிலும் யெல்லோ கூலர்ஸுடன் வரும் அந்த பாப் கட்டிலும், வருங்கால மருமகனிடம் பொருமும் காட்சியிலும் டாப்கிளாஸ். ஷகுந்தலா தேவியின் கணிதமும் வித்யா பாலனின் நடிப்பும் இறுதிவரை மேஜிக்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படம் முழுக்க முழுக்க பெண்கள் படைதான். 'Four More Shots Please' தொடரிலேயே தடாலடியாகப் பெண்ணியம் பேசும் இஷிதா மொய்த்ராவின் வரிகள் இதிலும் ஆங்காங்கே தெறிக்கிறது. லண்டனில் ஸ்பானிஷ் காதலனாக வரும் ஹேவியருக்கு, ஷகுந்தலாவின் புகழ்ச்சியும் பணமும் அவரை விட்டு விலக வைக்கிறது. ̀உனக்கு இனி நான் தேவையில்லை' என ஹேவியர் சொல்ல, ̀ ஆண்கள் ஏன் எப்போதும் பெண்கள் அவர்களை ஒரு தேவையாகக் கருத வேண்டும் என்றே நினைக்கிறார்கள்?' எனும் ஷகுந்தலாவின் சம்மட்டியடி பதில் ஒரு சாம்ப்பிள். படம் முழுக்க இப்படியான ̀இந்தா வா வாங்கிக்க' வரிகள் ஏகபோகமாக இருக்கின்றன. அதேபோல், ஷகுந்தலா தேவியின் காமெடி ஒன் லைனர்களும் நம்மை சிரிக்க வைக்கிறது.

Shakuntala Devi
Shakuntala Devi

லண்டனோ, பழைய பெங்களூரோ காட்சியின் தன்மைக்கேற்ப, ஒளிகளை அழகாய் செலுத்துகிறது, ஜப்பானிய பெண் ஒளிப்பதிவாளர் கெய்கோ நகஹராவின் கேமரா. நான்-லீனியராக செல்லும் திரைக்கதையை எந்தவித குழப்புமும் இன்றி, காலநிலைகளை வைத்து வேறுபடுத்திக் காட்டுகிறது அந்தரா லஹிரியின் படத்தொகுப்பு.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படைப்புகளை எடுத்து வந்த அனு மேனனுக்கு இதில் திரைக்கதையில் உதவியிருக்கிறார் நாவலாசிரியரான நயநிகா மஹ்தானி. இத்தனை பெண்களை டெக்னிக்கல் குழுவில் பயன்படுத்தியதற்கே அனு மேனனுக்கு கூடுதல் பாராட்டுகள்.

வித்யா பாலன் நடிக்கும் படங்களில் கதாநாயகனைத் தாண்டி முதன்மை கதாபாத்திரம் என்பது அவர்தான். அதிலும் , காட்சிக்கு காட்சி ஆச்சர்யங்களை அள்ளி வீசும் ஷகுந்தலாவின் பயோபிக் என்பது வித்யாவுக்கு கூடுதல் குலாப் ஜாமுன் சாப்பிட்டது போல் இருந்திருக்கும். ஆனால், அவருக்குப் போட்டியாக படத்தில் ஸ்கோர் செய்வது மகள் அனுபமா பேனர்ஜியாக வரும் சான்யா மல்ஹோத்ரா. ''எனக்கு உங்கள் புகழ் எதுவும் வேண்டாம்; உங்களைப் போன்றதொரு மோசமான அம்மாவாக இருக்க மாட்டேன்'' என வாழும் கதாபாத்திரம். ஷகுந்தலாவுக்கு எதிராக அனுபமா வழக்குத் தொடுக்கும் காட்சியில்தான் படமே ஆரம்பிக்கிறது. இறுதியில் எல்லாமே என் அம்மாதான் என அவர் மனம் திருந்துவதுதான் படம்.

Shakuntala Devi
Shakuntala Devi

ஷகுந்தலா தேவியை கணித மேதையென பலர் அறிந்திருந்திருப்பார்கள். அவரின் ஜோசிய நம்பிக்கைகளும், தன் பால் ஈர்ப்பாளர்கள் குறித்தான அவரின் புத்தமும் பலருக்கும் வெளியே தெரியாத விஷயங்கள். இந்திரா காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் கூட பதிவு செய்யும் திரைப்படம், ஏனோ இவற்றை தொட்டும் தொடாமல் செல்கிறது.

̀நான் மரம் அல்ல, வேர்களுடன் ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்க... கால்கள் கொண்ட மனுஷி. பயணிப்பேன்' என்பார் ஷகுந்தலா. ஷகுந்தலாவுக்கு கால்களுடன் சிறகுகளும் இருந்தன. காதலோ, மண வாழ்க்கையோ, குடும்பமோ எதுவுமே அவரின் கணிதப் பசிக்கு எதிராக நிற்கவில்லை. அவற்றை அவர் பொருட்படுத்தவும் இல்லை. வாழ்க்கை முழுக்க அன்புக்காக ஏங்கிய ஒரு கதாபாத்திரம், அந்த அன்பு கிடைத்த போதும், அதைக் கணிதத்துக்காக விலையாகக் கொடுத்தார் என்பதுதான் படம் சொல்லும் கதை.

ஷகுந்தலா தேவி அவரின் மகளின் பார்வையில் என்னும் டிஸ்கிளைமருடன் ஆரம்பிக்கும் படம், படத்தில் சினிமாவுக்கான சில விஷயங்களை மாற்றியிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது. படத்தின் பலவீனங்கள் இதில்தான் தொடங்குகின்றன. எது உண்மை, எது கட்டமைக்கப்பட்டது எனும் குழப்பம் படம் நெடுகவே வருகின்றது. World of homosexuals புத்தகத்துக்காக ஷகுந்தலா தேவி சொல்லும் காரணம், தன் முன்னாள் கணவர் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பதுதான். அதில், எந்தத் தவறும் இல்லை என ஷகுந்தலா தேவி எழுதியது 1977-ல். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 2017-ம் ஆண்டு, 40 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்திய அரசே அது தவறில்லை என ஒப்புக்கொள்கிறது. ஆனால், படத்தில் ஷகுந்தலா தேவி புத்தக விற்பனைக்காகவும், தன் பால் ஈர்ப்பாளர்களின் நன்மைக்காவும் பொய் சொன்னதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. ஷகுந்தலா தேவியின் பயோபிக்கில் தன் அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை களைய அனுபமா இப்படி செய்தாரா இல்லை ஷகுந்தலா பொய் சொன்னாரா என்பதெல்லாம் அனுபமாவுக்கு மட்டுமே வெளிச்சம்.

மரணத்துள் வாழ்பவன்!

அதே போல், ஷகுந்தலா தேவி ஏன் சிறப்பான அம்மாவாக இல்லை என்பதே பாதி படத்துக்கு வருகிறது. ஷகுந்தலா தேவியின் பர்சனல் பக்கங்கள் பயோபிக்கில் இருக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும், பொதுவாக, பயோபிக்கில் இப்படியான காட்சிகள் அந்தப் பிம்பத்தின் மீது ஒரு பரிதாபத்தை உண்டு செய்யும். ஆனால், இந்தப் படத்தில், அவர் தவறானவரோ எனும் சந்தேகத்தையே முன்வைக்கிறது. அப்படியாக வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.

ஷகுந்தலா தேவியின் வாழ்க்கை சுவாரஸ்யங்களுக்காகவும், வித்யா பாலனின் அப்பழுக்கற்ற நடிப்புக்காகவும், இந்த வீக்கெண்டில் ஷகுந்தலா தேவியை தாராளமாக க்ளிக் செய்யலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு