Published:Updated:

2வது நாளாக வருமான வரித்துறை விசாரணை - டெல்லி அரசின் விளம்பரத் தூதரான சோனு சூட் குறிவைக்கப்படுகிறாரா?

நடிகர் சோனு சூட் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாள்களாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான உதவிகளை செய்து கொடுத்ததால் அவரது பெயர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் சோனு சூட் டெல்லி சென்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பை தொடர்ந்து சோனு சூட் டெல்லி அரசின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அரசியலில் நுழைவார் என்று செய்திகள் வெளியாகின.

இந்தச் சந்திப்பு நடந்த ஓரிரு நாள்களில் வருமான வரித்துறையினர் சோனு சூட் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடத்தினர். மும்பை மற்றும் லக்னோவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஓட்டலுடன் சோனுசூட்
ஓட்டலுடன் சோனுசூட்

இது ரெய்டு இல்லை என்று சொன்னாலும் சோனுசூட் வருமான வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக விசாரிக்கச் சென்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனை புதன் கிழமை நடந்தது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "சோனு சூட் நிறுவனம் லக்னோவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் சொத்து வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு ஏதாவது நடந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது" என்று தெரிவித்தனர்.

அது தொடர்பாக விசாரிக்கவே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் காரணம் தெரிவித்தனர். வருமான வரித்துறையின் இந்தச் சோதனை நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக கண்டித்திருந்தது. அரசால் கைவிடப்பட்டவர்களுக்கு துணை நின்றது மட்டும்தான் சோனு சூட் செய்த குற்றமாகும் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

இந்நிலையில் வியாழக்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் மும்பை ஜுகுவில் உள்ள சோனு சூட் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை குறித்து சோனு சூட் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சோனு சூட் கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு உதவியதோடு மட்டுமல்லாமல் சில இடங்களில் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஜிசன் உற்பத்தி மையத்தையும் ஏற்படுத்தி கொடுத்து மக்கள் மத்தியில் உண்மையான ஹீரோ என்பதை நிரூபித்தார். வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்தச் சோதனை குறித்து சமூக வலைதளத்தில் சோனு சூட் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு