Published:Updated:

நவாஸுதின் சித்திக்கியும் ராதிகா ஆப்தேவும், அந்த த்ரில்லரும்! - #RaatAkeliHai எப்படி? #Review

படம் தொடங்கிய முதல் 6 நிமிடத்தில் பார்வையாளர்களுக்கு மட்டுமே காட்டப்பட்ட அந்த சம்பவம் இன்னொருபுறம் திகிலைக் கூட்டி பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது.

கொரோனா தந்த `நியூ நார்மல்' வாழ்க்கையில் முக்கியமான வாழ்வியல் நடைமுறைகளுள் OTT-யில் படங்கள் பார்ப்பதும் இணைந்துவிட்டது. அதிலும் த்ரில்லர் படங்கள்தான் பெரும்பாலோனோரின் பெருவிருப்பம் என்கிறது ஒரு சர்வே.

கொரோனா ஊரடங்கில் OTT-யில் வெளியான தமிழ் படங்கள் த்ரில்லர் என்ற பெயரில் ரத்தக்காவு வாங்கும்போது இந்தியில் மட்டும் தொடர்ந்து அதிரடியான வெப் சீரிஸ்களும் சினிமாக்களும் ரிலீஸாகின்றன. அதில் லேட்டஸ்ட் வரவு நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினலாக வந்திருக்கும் `இரவின் தனிமை' (ராத் அகேலி ஹை).

படத்தின் தொடக்கக் காட்சியே இரவுதான். மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காட்சியும்கூட! அந்த அடர் கருமை படர்ந்த இரவின் குரூரத்தில் நிகழும் ஒரு சம்பவம் பீன்பேக்கில் படுத்துக்கொண்டு படம் பார்ப்பவர்களைத் தண்டுவடம் ஜில்லிடவைத்து எழுந்து உட்கார வைக்கிறது. அதன்பிறகு, உத்தரப்பிரதேச நகரொன்றில் இருக்கும் ஜதில் யாதவ் என்ற இன்ஸ்பெக்டருக்கு ஒரு செல்போன் அழைப்பு வருகிறது. ரகுபீர் சிங் என்ற பணக்கார, அரசியல் செல்வாக்குள்ள பெரியவர் வீட்டுக்கு அந்த இரவில் கிளம்பிப் போகிறார். மனைவியை இழந்தவர் அவர் என்பதால் ராதா என்ற பேரழகியை இரண்டாம் தாரமாய் மணந்த அன்று இரவே ரகுபீர் தாத்தா தன் அறையிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்.

ஒரு எழவு வீடென்றால் ஒப்பாரியும் கண்ணீரும் கம்பலையுமாக முகங்கள் இருக்குமல்லவா? ஆனால், விழாவுக்கான அலங்கார விளக்குகள்கூட அணைக்கப்படாமல் மெல்லிய திகில் கலந்த அமைதியோடு இருக்கிறது அந்த மர்ம மாளிகை.

Radhika Apte
Radhika Apte
Raat Akeli Hai

புது மனைவியான ராதா முதல் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், வேலைக்காரப் பெண் வரை அனைவருமே இறுகிய முகத்தோடு, திருதிருவென விழித்தபடி இன்ஸ்பெக்டர் ஜதில் யாதவைக் குழப்புகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் யார் கொலை செய்தது எனத் தெரியவில்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்கள்.

``இந்த வீட்டிலிருக்கும் மர்மத்தை சீக்கிரமே கண்டுபிடிப்பேன்!'' என சூளுரைக்கும் ஜதிலால் அவ்வளவு எளிதில் துப்பு துலக்க முடிந்ததா? கிணறு வெட்ட பூதம் கிளம்புவதுபோல அடுத்தடுத்த திருப்பங்களும் கொடூரங்களுமாய் அரங்கேற குழப்பமும், சலனமும் கொண்ட அந்த சராசரி இன்ஸ்பெக்டரால் அந்தக் கொலை வழக்கைத் தாக்குபிடிக்க முடிந்ததா? என்பதே க்ளைமாக்ஸ். `யார்தான் அந்தக் கொலையைச் செய்தது?' என ஒவ்வொரு கேரக்டரைக் காட்டும்போதும் பார்வையாளருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ணும் சஸ்பென்ஸ் த்ரில்லராய் கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

குறிப்பாக, படம் தொடங்கிய முதல் 6 நிமிடத்தில் பார்வையாளர்களுக்கு மட்டுமே காட்டப்பட்ட அந்தச் சம்பவம் இன்னொருபுறம் திகிலைக் கூட்டி பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்புகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீளமான படமென்றாலும், ஒவ்வொரு முடிச்சும் அவிழ்க்கப்படும்போது குழப்பமே இல்லாமல் அடுத்த வேறொரு முடிச்சு கதையில் விழுந்து ஆர்வமாய் நம்மை படம் பார்க்க வைக்கிறது. மிக சிறப்பாக இயக்கியிருக்கிறார் ஹனி ட்ரெஹன். இதற்கு முன் `உட்தா பஞ்சாப்', `ஃபக்ரி', `ஓம்காரா, `டெல்லி பெல்லி' போன்ற படங்களுக்கு காஸ்ட்டிங் டைரக்டராய் பணியாற்றியவர்.

கதை `சாக்ரெட் கேம்ஸ்' சீரீஸின் இணை எழுத்தாளர் ஸ்மிதா சிங்!

மிக நேர்த்தியாக எழுதி இயக்கியிருக்கிறார்கள். `கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்' படத்துக்கு இசையமைத்த பெண் இசையமைப்பாளர் சிநேகா கான்வால்கர் த்ரில்லருக்கான டெம்போவை ஏற்றியிருக்கிறார்.

பெரும்பாலும் இருட்டிலேயே நடக்கும் கதை என்பதால் `தும்பாட்' என்ற திகில் படத்தில் மிரட்டிய ஒளிப்பதிவாளர் பங்கஜ் குமார் இதிலும் மிரட்டியிருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் நீளமான படமென்பதை மறக்கடிக்கிறது.

Raat Akeli Hai
Raat Akeli Hai

சட்டை பட்டன்கள் தெறித்து விழும் இறுக்கமான காக்கி உடைகளைப் போட்டு விசாரணை செய்யும் போலீஸ் ஆக்‌ஷன் மசாலாக்களைப் பார்த்த பாலிவுட்டுக்கு புதுமையான ஒரு போலீஸைக் காட்டியதற்காய் பாராட்டியே ஆக வேண்டும்.

ஹீரோ நவாஸுதீனுக்கு ஏற்ற கல்யாணம் ஆகாத முதிர் கண்ணன் கேரெக்டர். ஒளித்து வைத்து `ஃபேர் அண்ட் லவ்லி' பூசிக்கொண்டு, கெத்துக்காய் கூலர்ஸ், டெனிம் ஜாக்கெட் போட்டு ராயல் என்ஃபீல்டில் வரும் இன்ஸ்பெக்டர் ஜதில் யாதவ் பாத்திரத்தில் ஃபெவிகாலாய் ஒட்டியிருக்கிறார்.

விசாரிக்கப்போன இடத்தில் அழகான ராதிகா ஆப்தேவைப் பார்த்து லேசாய் சலனமாகும் அளவுக்கு யதார்த்தமான போலீஸ். ஆனால், தன்னளவில் நல்லவர், நேர்மையானவர். இதனாலேயே அவர் செய்யும் சின்னச் சின்ன சாகசங்கள் எல்லாமே நாம் செய்வதுபோல யதார்த்தமாய் இருப்பது பலம்.

விசாரணை நேரம் போக அவருக்கும் அவர் அம்மாவுக்குமான எபிசோட் க்யூட் குட்டிக் கவிதை!

நெட்ஃபிளிக்ஸுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட ராதிகா ஆப்தே, வழக்கம்போல அந்த குழப்பமான ராதா பாத்திரத்தில் செமையாய் நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் ரயிலில் அவர் காட்டும் அந்தப் பதற்றம் அவ்வளவு அழகு!

`கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்2' க்ளைமாக்ஸில் நவாஸுதினால் சல்லடையாய் சுட்டுக் கொல்லப்படும் திக்மன்ஷு துலியா இதில் நவாஸுதீனின் சீனியர் போலீஸ் அதிகாரியாய் இயல்பாய் வந்து போகிறார். ஆதித்ய ஸ்ரீவத்சவா, நிஷாந்த் தாஹியா, ஸ்வேதா திரிபாதி, ஷிவானி ரகுவன்ஷி, ஸ்ரீதர் துபே உள்ளிட்ட நிறைய பாத்திரங்கள் சிறப்பாய் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, படத்தில் நடித்திருக்கும் பெண்கள் எல்லோருமே மிரட்டியிருக்கிறார்கள்.

மிக யதார்த்தமான வன்முறைக்காட்சிகளும், ஒரு துப்பாக்கிச்சூடு காட்சியும் உத்தரப்பிரதேசத்தின் சமீபத்திய விகாஸ் துபே சம்பவத்தோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிகிறது.

படத்தின் ஒரே மைனஸ் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்க்க க்ளைமாக்ஸில் காட்டிய அவசரம்தான். ஆனால், இந்த ஊருக்கு வேற ரூட்டே கிடையாது என்பதுபோல் அதுதான் சரியாக இருக்கிறது!

மற்றபடி இந்த `இரவின் தனிமை' நேர்த்தியான க்ரைம் த்ரில்லராய் இரண்டரை மணிநேரம் உங்களைக் கட்டிப்போடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு