Published:Updated:

சுஷாந்த் தற்கொலை... கரண் ஜோஹர், நெப்போட்டிஸம், ஸ்டார் வார்ஸ்தான் காரணிகளா?

சுஷாந்த் சிங்கும் ஒரு எளிய பின்னணியில் இருந்து நடிக்க வந்தவர்தான். கல்லூரியில் படிக்கும்போதே நடனம் கற்றுக்கொண்டு அதன்மூலம் பல விழாக்களில் நடனம் ஆட ஆரம்பித்து, பின்னர் நாடகம், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவுக்கு வந்தவர். மிகுந்த திறமைசாலி.

நெப்போட்டிஸம்... காலம் காலமாக பாலிவுட்டில் நடப்பதுதான் என்றாலும், சுஷாந்த் சிங்கின் தற்கொலை அதை காமன்மேன் வரையும் பேசுபொருளாக்கியிருக்கிறது.

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார்கள் அனைவரும், ஒரு சிலர் நீங்கலாக, வாரிசுகளே. கபூர் குடும்பம் (ராஜ் கபூர்), கான்கள் (அமீர் கான், சல்மான் கான், சயீஃப் அலி கான் ஆகியவர்கள் அனைவருமே பிரபலங்களின் வாரிசுகள்தான். கான்களில், ஷாருக் கான் மட்டுமே எந்த வாரிசுத் தொடர்பும் இல்லாமல் நடிக்க வந்தவர். ரோஷன்கள், ஜோஹர்கள், சோப்ராக்கள், பட்கள், பச்சன்கள் என்று பாலிவுட்டின் குடும்பங்கள் மிகப்பெரியது. இவர்களுக்குள் படங்கள் எடுத்துக்கொள்ளும்போது, அவற்றில் இவர்கள் மட்டுமே இடம்பெறுவது வழக்கம். இதுதான் நெப்போட்டிஸம், வாரிசு அரசியல். இதில் விதிவிலக்குகள் மிகவும் சொற்பம்.

Sushanth
Sushanth

நடிகர் ஆயுஷ்மான் குரானா, ஒரு நாள் இயக்குநர் கரண் ஜோஹரின் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கரண் ஜோஹரைச் சந்திக்கிறார் ஆயுஷ்மான் குரானா. அப்போது அவர் சிறிய நடிகர். கரண் ஜோஹரிடம் அவரது எண்ணைக் கேட்கிறார். கரண் ஜோஹர், தனது தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் எண்ணைக் கொடுக்கிறார். மறுநாள் ஆயுஷ்மான் குரானா தர்மா ப்ரொடக்‌ஷன்ஸை அழைத்து, கரண் ஜோஹரிடமிருந்து எண்ணை வாங்கியதாகவும், அவர்களின் படத்தில் நடிக்கவேண்டும் என்பது தன் ஆசை என்றும் சொல்கிறார். அப்போது, கரண் ஜோஹர் அலுவலகத்தில் இல்லை என்ற பதில் வருகிறது. மீண்டும் ஒரு சில நாள்களில் அதே எண்ணை அழைக்கிறார் ஆயுஷ்மான்... அப்போது கரண் ஜோஹர் பிஸியாக இருப்பதாகவும், அவரிடம் தற்போது பேச முடியாது என்றும் பதில் கிடைக்கிறது. முயற்சியில் தளராமல் மீண்டும் இன்னொரு நாள் அழைக்கிறார் ஆயுஷ்மான் குரானா. அப்போது, வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கறார் பதில் அவருக்குக் கிடைக்கிறது. அது - `நாங்கள் ஸ்டார்களோடு மட்டும்தான் படங்கள் எடுப்போம். உங்களோடு படம் பண்ண முடியாது’ என்கிறது அந்தக் குரல்.

இதைக் கரண் ஜோஹரிடமே நேரில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சொல்லிவிட்டார் ஆயுஷ்மான் குரானா. இப்படி நடந்தபின் அன்றிலிருந்து அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டதாகவும் அன்று ஆயுஷ்மான் சொன்னார்.

சுஷாந்த் சிங்கும் ஒரு எளிய பின்னணியிலிருந்து நடிக்க வந்தவர்தான். கல்லூரியில் படிக்கும்போதே நடனம் கற்றுக்கொண்டு அதன்மூலம் பல விழாக்களில் நடனம் ஆட ஆரம்பித்து, பின்னர் நாடகம், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவுக்கு வந்தவர். மிகுந்த திறமைசாலி. தோனியாக அவர் நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அவரது `கை போ சே', `டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பக்ஷி', `சிச்சோரோ' படங்கள் அட்டகாசமானவை. அமிர் கான் நடித்த `பீகே' படத்திலும் நடித்திருக்கிறார். இப்படிப்பட்டவர், கஷ்டப்பட்டு நடித்து ஒரு ஸ்டாராக மாறியவர், ஒரு பேட்டியில், தன்னை பாலிவுட்டில் யாரும் எந்த பார்ட்டிகளுக்கும் அழைப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். ஒரு ட்வீட்டில், ஒரு ரசிகையிடம், ``உங்களையெல்லாம்தான் எனது குடும்பமாக நினைக்கிறேன்; நீங்களே என் படங்களைப் பார்க்காவிட்டால் நான் பாலிவுட்டில் எப்படிக் காலம் தள்ளுவது'' என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

karan Johar, Akshay kumar, Rohit Shetty, Ranveer singh, Ajay Devghan
karan Johar, Akshay kumar, Rohit Shetty, Ranveer singh, Ajay Devghan

அதே காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், ஒருமுறை பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான அலியா பட் கரணிடம் பேசியபோது, சுஷாந்த் சிங் யாரென்றே தெரியாதவர்போல, `சுஷாந்த்தா? யாரது?’ என்று கேட்டதும் நடந்திருக்கிறது. அதே அலியா இப்போது சுஷாந்த்தின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதாகப் போட்ட ட்வீட்டில் இதைச் சொல்லியே. அவரை ரசிகர்கள் கும்மிக்கொண்டிருக்கிறார்கள். இதைச் சொல்வதற்குக் காரணம், பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் வாய்ப்புகளுக்காகப் பெரிதாக எந்த சிரமமும் பட்டதில்லை. அவர்களுக்கு எப்போதுமே பிறர் என்றால் இளக்காரம்தான்.

MS Dhoni - The untold story படத்தின்போது ஒரு பேட்டியில், பிறரைக் கண்டுகொள்வது போல பாலிவுட் இன்னும் தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார் சுஷாந்த். 2015-லேயே, ``இதற்கெல்லாம் நெப்போட்டிஸம், வாரிசு அரசியல்தான் காரணம் என்று நினைக்கிறேன்; அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஒன்று மிகப்பெரிய ஆசாமிகளாக இருக்க வேண்டும், அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கவேண்டும்'' என்றும் பேசியிருக்கிறார் சுஷாந்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயக்குநர் ஷேகர் கபூர், சுஷாந்த்தை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் `பானி' என்ற படத்தை 2015-ல் தொடங்குவதாக இருந்து, யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் (இன்னொரு வாரிசு நிறுவனம்) அதிலிருந்து கழன்றுகொண்டதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. ஷேகர் கபூர் சுஷாந்த் மறைவுக்கு ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில், `நீ எவ்வளவு வலிகளை அனுபவித்திருக்கிறாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். உன்னைக் கைவிட்டவர்களைப் பற்றியும், அதனால் கதறி அழக்கூடிய அளவு நீ அனுபவித்த சோகங்கள் பற்றியுமே எனக்குத் தெரியும். உன்னிடம் நான் கடந்த ஆறு மாதங்களில் பேசியிருக்க வேண்டும். நீயாவது என்னிடம் பேசியிருக்கலாம். உனக்கு இப்படி நடந்தது, உன்னைக் கைவிட்டவர்களின் கர்மாதான். உன் கர்மா இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். சுஷாந்த் ஒரு அற்புதமான நடிகர் என்று ஷேகர் கபூர் `பானி' திரைப்படம் கைவிடப்பட்டபோதே எழுதியிருக்கிறார். அதேபோல் சுஷாந்த்துமே ஷேகர் கபூரிடம் மனம்விட்டுப் பேசியதைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். இருவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது.

Sushanth, Jaquline Fernandez
Sushanth, Jaquline Fernandez

வாரிசுகள் ஒன்றுசேர்ந்து, தங்களுக்குப் பிடித்த வாரிசுகளையோ ஸ்டார்களையோ மட்டுமே வைத்துப் படமெடுக்கும் நெப்போடிஸம் மற்றும் க்ரோனியிஸம் பற்றி, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் 2017-ல் சுஷாந்த் பேசும் பேட்டி ஒன்று உண்டு. அதில், ``நெப்போடிஸம் இருந்துவிட்டுப் போகிறது. ஆனால் இந்த அரசியலால், பிற்காலத்தில் திறமைசாலிகள் உள்ளேயே வரமுடியாமல் போய்விடும் ஆபத்து உண்டு. அதுதான் இதன் மிகப்பெரிய பிரச்னை’' என்று சொல்லியிருப்பார். இதுதான் சுஷாந்த்தின் இறப்புக்குக் காரணம் என்று சொல்லவில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தன்னுடைய திறமைக்கான, கடின உழைப்புக்கான, அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது ஏற்படும் வலி என்ன என்பது நம் ஒவ்வொருவருக்குமே புரியும். அந்த வலிக்கு ஒரே ஆறுதல் அங்கீகாரம் மட்டுமே.

இங்கே கரண் ஜோஹர் ஏன் முக்கியமாகக் குற்றம்சாட்டப்படுகிறார் என்பதற்கு நெப்போட்டிஸம் மட்டுமே காரணம் அல்ல. சுஷாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படமான `டிரைவ்'வின் தயாரிப்பாளர் கரண் ஜோஹர்தான். இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2017-ல் ஆரம்பிக்கப்பட்டு 2018 ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், படத்தின் அவுட்புட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்குத் திருப்தியாக இல்லை. நிறைய காட்சிகள் ரீஷூட் செய்யப்படுகின்றன. ஒருமுறையல்ல, இதுபோல் இரண்டு முறை படத்தை ரீஷூட் செய்யச்சொல்லி அனுப்புகிறார் கரண். அதன்பிறகும் படம் எதிர்பார்த்ததுபோல் ரிலீஸாகவில்லை. 2019-ன் தொடக்கத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லி, பிறகு தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது `டிரைவ்'. படம் குப்பை என எல்லா மக்களும், மீடியாக்களும் விமர்சனங்கள் அளிக்க, நெட்ஃபிளிக்ஸ் எப்படி இந்தப்படத்தை வாங்கியது என்கிற அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்தப்படத்தால் கடும் மன உளைச்சலை சுஷாந்த் சந்தித்தாகச் சொல்லப்படுகிறது.

சுஷாந்த் மட்டும் இல்லாமல், ராஜ்குமார் ராவ், தாப்ஸி, கங்கனா ரனாவத் ஆகியோரும் இந்த வாரிசு அரசியல் பற்றிப் பலமுறைகள் பேசியிருக்கின்றனர். ``நெப்போட்டிஸத்தின் மொத்த அடையாளம் நீங்கள்தான்'' என்று கரன் ஜோஹரின் முகத்துக்கு நேராகவே கங்கனா, `காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இப்போதும் கங்கனா நெப்போட்டிஸம் பற்றிப் பேசியிருக்கிறார்.

சுஷாந்தின் மரணம் மூலமாக ஒரு மிகப்பெரிய விவாதம் மறுபடியும் கிளம்பியிருக்கிறது. அதற்கான பதில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது. ஆனால், பாலிவுட் மறுபடியும் தனது வாரிசுகளை வைத்துப் படங்கள் எடுக்க ஆரம்பிக்கும். திறமையைவிட, ஸ்டார்களுக்குள்ளான நட்பும் உறவுகளுமே மதிக்கப்படும். இன்னும் பல பல ஸ்டார் வாரிசுகள் கிளம்பி வருவார்கள். அவர்களுக்கு மத்தியில், சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த சுஷாந்த் போன்ற திறமையாளர்கள், யாரிடம் பேசுவது என்றே தெரியாமல் தனித்து விடப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. அந்தத் தனிமை கொடூரமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு