ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200
தேங்காய் - கொய்யா லட்டு

தேவையானவை: கொப்பரைத் தேங்காய்த் துருவல் - 2 கப், நறுக்கிய கொய்யா - முக்கால் கப், சர்க்கரைப் பொடி - முக்கால் கப், குல்கந்து - 2 டேபிள்ஸ்பூன், வெதுவெதுப்பான பால் - 2 டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் கொய்யாவை சேர்த்து குறைந்த தீயில் 3 நிமிடங்கள் வேகவிட்டு, குழைய வெந்த பிறகு பால், குங்குமப்பூ ஆகியவற்றையும் சேர்க்கவும். பின்னர் சர்க்கரைத் தூள் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதில் நன்றாக உருண்டை பிடிக்கும் அளவுக்கு கொப்பரைத் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து மிருதுவாக பிசையவும் (சப்பாத்தி மாவு பதம் இருக்க வேண்டும்). பிறகு, இந்தக் கலவையை சிறு உருண்டைகளாக லட்டு வடிவத்தில் பிடித்து, அதில் சிறு குழி செய்து, குழியில் குல்கந்து சிறிது வைத்து மூடி லட்டாக பிடிக்கவும். எல்லா கலவையையும் இதேபோல செய்யவும்.
குறிப்பு: குல்கந்துக்குப் பதிலாக நட்ஸ்களைத் துருவி நடுவில் வைக்கலாம். அல்லது சாக்லெட் துருவல் வைத்தும் தயாரிக்கலாம்.
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்
நியூட்ரிட்ஷியஸ் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், கறிவேப்பிலை பொடி, முருங்கைக்கீரை பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், கஸூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடைசியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாகச் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு மாவை சப்பாத்திகளாக திரட்டி, எண்ணைய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- ஆர்.பிருந்தா, பெங்களூரு
பனீர் புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி - 200 கிராம், தண்ணீர் - 300 மில்லி, பனீர் - 200 கிராம், நெய் - 3 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று, வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, குங்குமப்பூ - 2 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: பாசுமதி அரிசியை தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். கொஞ்சம் நெய்யை சூடாக்கி, பனீர் துண்டுகளைப் பால் வாசனை போகுமளவுக்கு வதக்கி, தனியே எடுத்து வைக்கவும். மீதமிருக்கும் நெய்யில் வெங்காயம், குங்குமப்பூ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, பனீர் துண்டுகளை சேர்த்து மேலும் கொஞ்சம் வதக்கவும். இதனுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். இந்தக் கலவையை வேகவைத்த பாசுமதியுடன் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
- ஆர்.வனஜா, போளூர்
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து வழங்கியிருப்பவர் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்