என் டைரி - 372
வரதட்சணைக் கொடுமை இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு, நானே வாழும் உதாரணம்!

எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். நான்தான் கடைக்குட்டி. என் அப்பா வீட்டில் வசதிக்குக் குறைவில்லை. ஆனால், நான்கு பெண்களையும் மணமுடித்து நிமிர்ந்தபோது, அப்பாவின் பணம் கணிசமாகக் கரைந்திருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொருவருக்கும் 40 பவுன் நகையும், சபை நிறையும் சீர்வரிசையும் கொடுத்து அனுப்பினார். தவிரவும், தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு வருடமும் எங்கள் நால்வரையும் அழைத்து, கைநிறைய சீர்செய்து அனுப்புவார்.
இந்நிலையில், என் அப்பாவுக்குத் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, என் பெற்றோர் தங்களின் மிச்ச வாழ்க்கைக்காக வைத்திருந்த பணத்தில் பெரும்பகுதி, அப்பாவின் வைத்தியத்துக்காக கரைந்தது. அப்படியும், அவரைக் காப்பாற்ற முடியாததுதான் வேதனை. எனக்குத் திருமணமான மூன்றாவது வருடம், எங்கள் அப்பாவை இழந்தோம். அம்மா தன்னந்தனியாகத் தவித்தாலும், பெண்கள் அனைவரையும் கரைசேர்த்துவிட்ட நிம்மதி அவருக்கு.

என் அப்பாவிடம் கைநிறைய சீர்வரிசை வாங்கிப் பழகிப்போன என் புகுந்த வீட்டினர், அப்பாவின் மறைவுக்குப் பிறகும் என் பிறந்த வீட்டில் இருந்து பண்டிகைச் சீர் எதிர்பார்த்து என்னை வார்த்தைகளால் துன்புறுத்த ஆரம்பித்தனர். `ஆண்கள் அனைவருமே மோசம், மாமியார் என்றாலே இப்படித்தான்’ என்று சொல்லமுடியாத அளவுக்கு, என் மூன்று அக்காக்களின் புகுந்த வீடுகளிலும் அதைப்பற்றி எல்லாம் எதுவும் பேசாமல், ‘உங்கப்பா இதுவரை செஞ்சதே நிறைய!’ என்று அன்பு குறையாமல் இருக்க... என் வீட்டில் மட்டும் நிலைமை தலைகீழ்.
என் நிலையைப் பார்த்த என் அம்மா, ‘அவரைப்போல என்னால ஒவ்வொரு வருஷமும் பொண்ணுங்களுக்கு பண்டிகை சீர் செய்ய முடியாது. அதனால இருக்குற ஒரே சொந்த வீட்டையும் வித்து, என் நாலு பொண்ணுங்களுக்கும் சரிசமமா பிரிச்சுக்கொடுத்துடுறேன்’ என்றவர், அதேபோல செய்து சென்ற வருடம் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டார். என் புகுந்த வீட்டுக்கும் சந்தோஷம். ஆனால், அது அடுத்த பண்டிகை வரும்வரைதான். இதோ... இப்போதுகூட ‘பொங்கச் சீரு எப்ப வரும்னு கேளு உங்கம்மாகிட்ட’ என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘அம்மாகிட்ட இனி என்ன இருக்கு?’ என்றால், ‘உங்க அக்காக்கள் எல்லாம் சேர்ந்து செய்யட்டும்’ என்கிறார் கணவர். என்னைவிட என் அக்காக்கள் மூவரும் நல்ல நிலையில் இருப்பதால், ‘கொடுத்தா என்ன?’ என்பது அவர் எண்ணம். அது எனக்கு ஒவ்வாத எண்ணம். மேலும், அது சகோதரிகளுக்கு இடையில் இருக்கும் அன்பையும் கெடுத்து, என் சுயமரியாதையையும் சாகடித்துவிடும்.
என்ன நினைப்பு... என்ன பிழைப்பு இது? எப்படித் திருத்த என் புகுந்த வீட்டினரை..?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
என் டைரி 371-ன் சுருக்கம்

``நான் பத்தாவது படிக்கும்போது, என் அம்மா தற்
கொலை செய்துகொண்டார். எனக்கும், என் அண்ணனுக்கும், தெரிந்தவரை, உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குப் பிரச்னை எதுவும் இல்லை எங்கள் பெற்றோருக்கு இடையில். என் அம்மாவின் பிறந்த வீட்டினர், மிகவும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், தாயுமானவனாகி எங்களை நன்றாக பார்த்துக்கொண்டார் அப்பா.
வருடங்கள் உருண்டோட... என் தாய்மாமன் மகனுக்கு பெண் பார்த்தார்கள். என் உறவினர்கள், அவருக்கு என்னை மணமுடித்துவைக்க முயற்சி எடுத்தார்கள். என் அப்பாவும் சம்மதிக்க, விட்டுப்போன உறவுகள் சேர இது வழிவகுக்கும் என்று நானும் பிரியப்பட்டேன். மாமா வீட்டினர் முரண்டு பிடித்தாலும், உறவினர்கள் நயமாகப் பேசி சம்மதிக்க வைத்தனர்.
புகுந்த வீட்டில் என்னை மனமார ஏற்கவில்லை என்பதை சில நாட்களிலேயே புரிந்துகொண்டேன். என்னை ‘கொலைகாரன் மகள்’ என்றதோடு என் அப்பா, அண்ணன் வர தடைவிதித்தனர். பிறந்த வீட்டுக்குப் போகவும் என்னை அனுமதிக்கவில்லை. ‘நீ நல்லாயிருந்தா போதும்’ என்று ஒதுங்கியிருக்கும் என் அப்பாவுக்கு, புகுந்த வீட்டு கொடுமைகள் முழுவதுமாக தெரியாது. மனம் மாறுவார்கள் என்று நான் காத்திருந்து இரண்டு வருடமாகியும் இன்னும் என்னை அவர்கள் ஏற்கவில்லை. என் அம்மா எடுத்த முடிவையே நானும் எடுக்க நினைக்கும் அளவுக்கு, என்னை நோகடிக்கின்றனர். என் வாழ்வு விடியுமா?’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
பிறந்த வீட்டை உதவிக்கு கூப்பிடு!
புகுந்த வீட்டில் நடப்பதை நீ இதுவரை உன் அப்பா, அண்ணனுக்கு தெரிவிக்காமல் இருந்தது உனது பொறுமை மற்றும் நல்லெண்ணத்தைக் காட்டுகிறது. இனிமேல் அப்படி இல்லாமல் உடனே அவர்களுக்கு உன் பிரச்னைகளை தெரிவிப்பதோடு, முடிந்தால் அதை பேசித் தீர்க்கவும் முயற்சி எடு. அதன் விளைவாக நல்ல முடிவு கிடைக்கலாம்.
- ஏ.ரோஸம்மாள், கண்மாய்க்கரை
பொறுமை... பெருமை தரும்!
எந்த துன்பத்துக்கும் ஒருநாள் முடிவு வந்தே தீரும். உனக்கு ஒரு வாரிசு பிறந்தால், அந்த பிஞ்சு மழலை சொல் கேட்டு உன் உறவுகள் உன்னை நோக்கி வரும். ஆனால், ஒருபோதும் உன் அம்மா எடுத்த முடிவை நீயும் எடுத்து விடாதே! வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல... மற்றவர் மனதில் வாழும் வரை! பொறுமையைக் கடைப்பிடித்தால் பெருமையுடன் வாழ்வாய்!
- தாரா ரமேஷ், புதுச்சேரி
புதிய வாழ்க்கை அமைத்துக்கொள்!
புகுந்த வீட்டில் மாமனார், மாமியார் பிரச்னை என்றால் கணவன் ஆதரவோடு வாழ்க்கையை ஓட்டலாம். உன் விஷயத்தில் கணவனும் சரியில்லை. சொல்லப்போனால், நீ அந்த வீட்டில் இருப்பதற்கே அர்த்தம் இல்லை! எனவே, உனக்கேற்ற பாதுகாப்பான வேலையைப் பார்த்துக்கொண்டு உன் தந்தையுடன் வாழ்க்கையை ஓட்டு. மேலும் உனக்கு நல்லதோர் வாழ்க்கை தர, பரந்த உள்ளம் கொண்ட யாரேனும் முன்வந்தால், முதல் கணவன் உறவை துண்டித்து விட்டு, புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்.
- என்.மகாலட்சுமி, சிதம்பரம்