
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200
தவிர்க்கலாமே...தலைவிரிகோலம்!

பேருந்தில் பயணிக்கும்போது, நிறைய பெண்கள், தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருகின்றனர். அவர்களுடைய தலைமுடி காற்றின் வேகத்தில் பக்கத்தில் நிற்பவர்களின் வாயிலும், கண்களிலும் பட்டு அருவருப்படைய வைக்கிறது; அதுவும் ஷாம்பு போட்டுக் குளித்து வந்தால் கேட்கவே வேண்டாம்! மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருப்பதுதானே நாகரிகம்! இந்தத் தலைவிரிகோலமா நாகரிகம்?!
இதுபோன்ற பெண்கள், இனியாவது சிந்தித்து, பயணத்தின்போது தலைமுடியை ரப்பர் பேண்டு போட்டு கட்டுங்கள்!
- விமலா சங்கரன், காஞ்சிபுரம்
ஏ.டி.எம் அவஸ்தை!

நான் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம் மெஷினில் பணம் எடுக்கச் சென்றேன். எனக்குத் தேவையான பணத்தைப் பதிவு செய்து காத்திருந்தேன். `உங்கள் பரிமாற்றம் பரிசீலிக்கப்படுகிறது’ என்றே ரொம்ப நேரம் இருந்தது. அங்கு இருந்த காவலரிடம் இதுபற்றி கூறினேன். உடனே அவர் அங்கு எழுதப்பட்டிருந்த உதவி மைய போன் நம்பரை சுட்டிக்காட்டி தொடர்புகொள்ளச் சொன்னார். நானும் தொடர்புகொண்டேன். அவர்கள் உதவி செய்யாமல், உங்கள் வங்கிக் கிளையை அணுகவும் என்றார்கள். மறுநாள் வங்கிக் கிளையை அணுகி புகார் செய்தேன். எழுதிக் கேட்டார்கள்; கொடுத்தேன். எனக்கு அந்தத் தொகை கிடைக்க பத்து நாட்கள் ஆகிவிட்டன.
வங்கிகளே... வாடிக்கையாளர்களை இப்படியெல்லாம் வதைக்காதீர்கள். ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கும்போது, இப்படிப்பட்ட சங்கடங்கள் ஏற்படாமல் இருக்க, தகுந்த நடவடிக்கைகள் எடுங்கள்.
- பி.கவிதா, சிதம்பரம்
வெட்டிப் பேச்சு... வேதனை!

என் தோழி, விளையாட்டில் ஆர்வம் மிக்கவள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறாள். தற்காப்புக்காக கராத்தே கற்று ‘பிளாக் பெல்ட்’ வாங்கியிருக்கிறாள்.
சமீபத்தில் அவளுக்குத் திருமணம் நடந்தது. அவள் வீட்டுக்கு அருகில் உள்ள பெண்கள், இவள் கராத்தே கற்றிருப்பதைத் தெரிந்துகொண்டு தெருவில் போகும்போதும், வரும்போதும் ``வீட்ல புருஷன் என்ன அடி வாங்குறானோ!” என்று வாய் கூசாமல் பேசி, என் தோழியின் உள்ளத்தைப் புண்படுத்துகின்றனர்.
`தற்காப்புக்கலை பெண்களுக்கு அவசியம்’ என்கிற நிதர்சனத்தை மறந்து, `பெண்களே... பெண்களுக்கு எதிரி’ என்று சிலர் கூறுவதற்கு வலு சேர்க்கும் விதத்தில், வெட்டிப் பேச்சு பேசும் இதுபோன்ற பெண்கள் திருந்த வேண்டும்!
- பி.சுமதி, சேலம்
நெகிழவைத்த ஆலயம்!

நான் கோவை மாநகரில் உள்ள, ராம் நகர், ராமர் கோயிலுக்கு தாயாருடன் சென்றிருந்தேன். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏராளமான கூட்டம் அங்கே! வயதான தாயாருடன் எப்படி பகவானை தரிசிப்பது என்று தவித்துக்கொண்டிருக்க... அந்த சமயத்தில் ஆலய செக்யூரிட்டி ஒருவர் வந்து, ``சிறப்பு தரிசன வழி அமைத்திருக்கிறோம். வயதானவர்களோடு மேலும் ஒருவரை அனுமதிக்கிறோம்’’ என்று சொல்லி, என்னையும் சேர்த்து அழைத்துச் சென்றார். திருப்தியாக பகவானை தரிசனம் செய்த அம்மா, பெருமாளே வந்து அழைத்துக்கொண்டு போனதாக நெகிழ்ந்தார். ஆலயக் குழுவுக்கு நான் நன்றி சொன்னேன்.
மற்ற பெரிய ஆலயங்களிலும் இதுபோல `சீனியர் சிட்டிசன் முறை’யை பின்பற்றலாமே..!
- எஸ்.வி.எஸ்.மணியன், கோயம்புத்தூர்