
என் டைரி - 378
மாறியது அவள் உள்ளம்... மயங்குதுஎன் எதிர்காலம்!
என் கணவர் ஒரு குடிகாரர். 10 வயது குழந்தையான என் பையனையும், என்னையும் நிராதரவாக விட்டு விட்டு, 25 வருடங் களுக்கு முன் எங்கோ சென்றவர், இன்றுவரை திரும்பவில்லை. எனக்கு என் மகனும், அவனுக்கு நானுமாக இந்த வாழ்க்கையைப் பல போராட்டங்களுடன் எதிர்கொண் டோம். நான் சம்பாதித்த காசில் பெரும் பகுதி கணவர் வைத்துவிட்டுப் போன கடனை அடைப்பதிலேயே கரைந்ததால், பத்தாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்திவிட்டு என் மகனும் என்னுடன் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வந்தான்.

இருவரும் உழைத்து கடனை முழுவதுமாக அடைத்தோம். கொஞ்சம் காசு சேர்த்தோம். சின்ன இடம் வாங்கினோம். குருவிக்கூடு போல அழகானதொரு வீட்டைக் கட்டினோம். ‘அப்பன் விட்டுட்டுப் போயிட்டாலும் அம்மாவும் புள்ளையும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனு சரணையா இருந்து தலையெடுத்து வந்துட்டாங்களே’ என்று ஊரே எங்கள் இருவரையும் மெச்சியது.
மகனுக்குத் திருமணம் முடித்தபோது, வீட்டுக்கு வந்த மருமகளை மகளாகவே நான் நினைக்க, அவளும் என்னிடம் நிறைந்த அன்பும் மரியாதையுமாக இருந்தாள். அழகாக ஒரு பேரக் குழந்தை பிறந்தான். வீட்டின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. ஒற்றைப் பெண்ணாக என் மகனை வளர்த்து ஆளாக்கிய பாலைவனப் பயணத்தில் நான் பட்டபாட்டுக்கெல்லாம் இறைவன் பலன் கொடுத்துவிட்டதாக அவ்வப்போது நான் ஆனந்தக் கண்ணீர் ததும்பும் அளவுக்கு வாழ்க்கை நிறைவாகச் சென்றது... ஓர் ஆண்டுக்கு முன்வரை.
என் மருமகளின் குடும்பத்தார் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து செல்வர். ஒவ்வொரு முறை அவர்கள் வந்துசெல்லும்போதும் என் மருமகளின் நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுவதாக உணர்வேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விலகிய என் மருமகள், ஒரு கட்டத்தில் எதற்கெடுத்தாலும் என்னிடம் சிடுசிடுவென்பது, குற்றம் சொல்வது, சண்டைபோடுவது, என் பேரக்குழந்தையைக்கூட என்னுடன் பேச அனுமதிக்காததுவரை போக, என்ன பிரச்னை என்று நேரடியாக அவளிடமே கேட்டுவிட்டேன்.
‘நாங்க தனிக்குடித்தனம் போகணும்’ என்றாள். ‘அதுக்காகவா இந்த வீட்டை நானும் என் மகனும் ரத்தமும் வியர்வையுமா உழைச்சுக் கட்டினோம்?’ என்றால், ‘அப்ப நீங்க போங்க’ என்கிறாள். இப்போது வேலைக்குச் செல்லமுடியாத வயதிலிருக்கும் நான், சாப்பாட்டில் இருந்து மருந்து செலவு வரை அவளுக்குப் பாரமாக இருக்கிறேன் என்கிறாள். ‘பையனை வளர்த்ததுல என்ன தியாகம்? அது அம்மாவோட கடமைதானே? இப்படித்தான் சொல்லிச் சொல்லியே என் வீட்டுக்காரர்கிட்ட பரிதாபம் தேடிக்கிறீங்க’ என்கிறாள்.
இந்தப் பிரச்னையை நான் நிச்சயமாக என் மகனிடம் கொண்டு செல்ல மாட்டேன். அவனாவது வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால், மகனிடம் ஏதாவது சாக்குச்சொல்லி தனியாகச் சென்றுவிடலாம் என்றுதான் பார்க்கிறேன். ஆனால், மனசு ஆறமாட்டேன் என்கிறது. என் மகன், மருமகள், பேரக்குழந்தையுடன் இதே வீட்டில் வாழ விருப்பப்படுகிறது.
ஏதாவது வழியிருக்கிறதா?!
- அன்புக்கு ஏங்கும் ஒரு தாய்
என் டைரி 377-ன் சுருக்கம்
``சிறுவயதில் அப்பாவை இழந்த என்னை, தன் மகளைப்போல வளர்த்தார் என் தாய்மாமா. பள்ளிப் படிப்பை முடித்து இருபாலர் கல்லூரியில் சேர்ந்தபோது, முதல் ஆண்டில் நண்பனானவன், இரண்டாம் ஆண்டில் தன் காதலைச் சொன்னான். எனக்கும் அவனைப் பிடிக்க, இருவரும் காதலித்தோம். மூன்றாம் ஆண்டில், என் மீது முழு உரிமை எடுத்துக்கொண்ட அவன், எக்ஸ்ட்ரா கம்ப்யூட்டர் கோர்ஸ் முதல் என் நட்புவட்டம் வரை தீர்மானிப்பவனாக மாறினான்.

இதற்கிடையே, என் காதல் விவகாரம் என் மாமாவுக்குத் தெரியவர, எனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறினார். என் காதலன் தன் அம்மாவுடன் வந்து என்னைப் பெண் கேட்டபோது, மாமா அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். அத்துடன் என்னை வீட்டுச்சிறையில் வைத்தார். அவனிடம் போனில்கூடப் பேசமுடியவில்லை. மாமாவிடம் மன்றாடி அனுமதி வாங்கி, நான் கல்லூரி சென்றபோது... ‘ஏமாத்திட்டுப் போயிட்டா’ என்றெல்லாம் என்னை பற்றி அவன் அவதூறு பேசியதை என் தோழிகள் என்னிடம் கூற, அதிர்ந்துவிட்டேன். தான் நேசித்த ஒரு பெண்ணை எப்படி கீழ்த்தரமாகப் பேச முடிந்தது என்று சுக்குநூறானேன். அவனுக்கு `குட்பை’ சொல்லிவிட்டு, மாமாவிடம் மன்னிப்பு கேட்டேன்.
இரண்டு ஆண்டுகள் கழிந்தநிலையில், இப்போது எனக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். சமீபத்தில் தற்செயலாக என் காதலனை நான் சந்திந்தேன். ‘நீ என்னைவிட்டுப் போனதால புத்தி பேதலிச்சுப் பேசிட்டேன்... மன்னிச்சிடு... நீ எனக்கு வேணும்’ என்று கெஞ்சுகிறான். என் மனமும் ஊசலாட ஆரம்பித்திருக்கிறது. என்ன செய்வது நான்..?’’
வாசகிகள் ரியாக்ஷன்
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100
இது காதல் அல்ல... தடுமாற்றம்!
நீங்கள் காதலித்தீர்கள்; வீட்டில் பிரச்னையானது; கல்லூரியில் அவமானம்: குட்பை சொல்லிவிட்டீர்கள். அப்போதே அவரை மறக்க முடியவில்லை என்றால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சாவகாசமாக இரண்டு வருடங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பவும் மலர்வது காதல் அல்ல! இந்த தடுமாற்றம், பின்னர் தடம் மாறும். மாமாவிடம் சொல்லி விரைவில் மணம்முடியுங்கள்.
- மல்லிகா குரு, சென்னை
ஏமாளியாக இருக்காதே!
தீ என தெரியாமல் ஒருமுறை கை வைத்து சுட்டுக்கொண்டாய், மீண்டும் தெரிந்தே கை வைத்து சுட்டுக்கொள்ளாதே. பெண்களுக்கு இளகிய மனம் இருக்கலாம். ஆனால், ஏமாளியாக இருக்கக்கூடாது. உன்னைப் பற்றி கல்லூரியில் பலரிடம் இழிவாக கூறிய அவன் ஒரு சைக்கோ. மீண்டும் வந்து உன் நிம்மதியை கெடுக்கிறான் என்றால்... நீ அவனை விட்டு விலகி, வீட்டில் பார்க்கும் வரனை திருமணம் செய்துகொள்.
- அ.மணிமேகலை, அரியலூர்
அவனிடமிருந்து விலகு!
உன் மனதின் ஊசலாட்டம் தவறானது. 15 நாட்கள் உன்னை சந்திக்க முடியவில்லை, பேச முடியவில்லை என்பதற்காக உன்னைப்பற்றி கல்லூரி சென்று தவறாக பேசியவன் அவன். மீண்டும் அவன் தவறாக பேச மாட்டான் என்பது என்ன நிச்சயம்? எனவே, அவனிடமிருந்து விடுபட்டு உன் மாமா மற்றும் குடும்பத்தினர் பார்க்கும் மாப்பிள்ளையைப் பற்றி நன்கு விசாரித்து, அவரையே மணந்து கொள்.
- யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்