கட்டுரைகள்
Published:Updated:

கோடீஸ்வரராக வேண்டுமா..?பின்பற்ற வேண்டிய 8 விஷயங்கள்!

கோடீஸ்வரராக வேண்டுமா..?
பிரீமியம் ஸ்டோரி
News
கோடீஸ்வரராக வேண்டுமா..?

சம்பளம் மட்டுமே வருமானம் என்பதைத் தாண்டிப் பல வழிகளில் வருமானத்துக்கு ஏற்பாடு செய்வது நிதி வாழ்க்கையை வளமாக்க உதவும்

பணம் சம்பாதிக்கும் ஆசை அனைவருக்கும் உண்டு. அதற்கான மூளையும் உழைப்பும் சேரும்போது, சாத்தியங்கள் விரிவடையும். கூடவே, அடிப்படையான, அவசியமான பொருளாதாரத் திட்டமிடலும் சேரும்போது அது விரைவாக நடக்கவும் கைகொடுக்கும். அந்த வகையில், கோடீஸ்வரராக விரும்புபவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய எட்டு அம்சங்கள் இங்கே...

1. வரவுக்குள் செலவு

தனிநபர் நிதி (Personal Finance) மேலாண்மையில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், வரவுக்குள் செலவு. அதாவது, வருமானம்/சம்பாத்தியத்துக்குள் செலவு செய்வது.

15, 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நம் குடும்பங்களில் மாத ஆரம்பத்தில் குடும்பச் செலவுகளை தாராளமாகச் செய்வார்கள். இறைச்சி எடுப்பது, வெளியில் சென்று கடைகளில் சாப்பிடுவது, சினிமா பார்க்க தியேட்டருக்குச் செல்வது என்பதாக இருப்பார்கள். அதுவே மாதக்கடைசியில் இந்தச் செலவுகள் எல்லாம் குறைந்து வெறும் புளித்தண்ணீர், ரசம் என்பதாக இருக்கும். இதனால், அவர்கள் கடன் இல்லா வாழ்க்கையை வாழ்ந்தனர்.

இன்றோ பலரின் கைகளில் கிரெடிட் கார்டு இருக்கிறது. கையில் காசே இல்லைஎன்றாலும் மாதம் முழுக்க கண்டபடி செலவு செய்து கடனில் சிக்கிக்கொள்கிறார்கள். இப்படி கடன் வாங்குவதைத் தவிர்த்து வரவுக்குள் செலவு செய்வதோடு, பணத்தையும் மிச்சப்படுத்திச் சேமித்தால் நிதி வாழ்க்கை வளமானதாக இருக்கும்.

கோடீஸ்வரராக வேண்டுமா..?பின்பற்ற வேண்டிய 8 விஷயங்கள்!

2. சம்பளம் செல்வ நிலையைத் தீர்மானிக்காது

ஒருவர் வாங்கும் அதிக சம்பளத்தொகை அவரின் செல்வ நிலையைத் தீர்மானிக்காது. அவர் தனது சம்பளத்தில் எவ்வளவு தொகையைச் சேமித்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது செல்வநிலை தீர்மானிக்கப்படும். பொதுவாக, ஒருவர் தனது சம்பளத்தில் 30% முதல் 50% வரை சேமிப்பது வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இது கடன் இல்லா நிலைக்குப் பொருந்தும். வீட்டுக் கடன் கட்டவேண்டி இருந்தால் சம்பளத்தில் சுமார் 20% சேமிக்க வேண்டும்.

ஒருவரின் குடும்ப மாதச் செலவு ரூ. 50,000 என வைத்துக்கொள்வோம். அவர் ரூ.10 லட்சம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றால், அவர் 20 மாதங்களுக்கான செல்வந்தர் ஆவார். எனவே, ஒருவர் அவரின் சம்பாத்தியத்தில் எந்த அளவுக்கு அதிகமாகச் சேர்த்து வைத்திருக்கிறாரோ அவர் அந்த அளவுக்குச் செல்வந்தர்.

3. பல வழிகளில் வருமானம்

சம்பளம் மட்டுமே வருமானம் என்பதைத் தாண்டிப் பல வழிகளில் வருமானத்துக்கு ஏற்பாடு செய்வது நிதி வாழ்க்கையை வளமாக்க உதவும். தினசரி சில மணி நேரம் அல்லது வார இறுதியில் பகுதிநேர வேலை என ஏதாவது செய்வது மூலம் வருமான வழியை அதிகரிக்க முடியும். மேலும், வங்கி, தபால் அலுவலக ஆர்.டி தொடங்கி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி வரை தகுதி மற்றும் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து வரலாம். அவற்றின் மூலம் வட்டி அல்லது மூலதன ஆதாயம் வருமானமாக வந்துகொண்டிருக்கும்.

சிவகாசி மணிகண்டன், 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

4. நல்ல கடன் Vs கெட்ட கடன்

நல்ல கடனுக்கும் கெட்ட கடனுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். குடியிருக்க வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வீட்டுக் கடன் ஒரு நல்ல கடன். இதேபோல், உங்கள் நிதி வாழ்க்கையை மேம்படுத்த உதவும் தொழில், வணிகக் கடன்கள் நல்ல கடன்களாகும். இவற்றுக்கான வட்டி ஓரளவுக்குக் குறைவாக, நியாயமாக இருக்கும்.

இதுவே, தேவையில்லாமல் செலவழிக்க வைக்கும், மிக அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு கடன்கள், பர்சனல் லோன்களைத் தனிநபர்கள் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கடன்கள் கெட்ட கடன்கள். அதிக பயன்பாடு இல்லாத கார்க் கடனும் கெட்ட கடனே. மாதம் ஒரு தடவை வெளியில் செல்ல சொந்தமாகக் கார் வாங்க வேண்டியதில்லை. வாடகைக் காரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

5. கடனை அடையுங்கள்

கடன் இல்லாத வாழ்க்கையே கலக்கம் இல்லாத வாழ்க்கை. அப்படியே கடன் வாங்கும் சூழல் வந்தாலும் அதை அடைத்துவிட்டு விரைந்து வெளியேறினால்தான் நிம்மதியான நிதி வாழ்க்கை அமையும். அப்படிக் கடனை அடைக்கும்போது, கிரெடிட் கார்டு கடன் போன்ற அதிக வட்டியிலான கடனை முதலில் அடைப்பது லாபகரமாக அமையும்; வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும். வீட்டுக் கடன் போன்ற குறைந்த வட்டி, வரிச்சலுகை அளிக்கும் கடனை விரைந்து அடைக்கத் தேவையில்லை.

6. பட்ஜெட் போட்டுச் செலவு செய்யுங்கள்

நிதி வாழ்க்கை வளமானதாக இருக்க, குடும்ப பட்ஜெட் போட்டுச் செலவு செய்வது மிக முக்கியம். அப்படி பட்ஜெட் போடும்போது, வரவு மற்றும் செலவு கண்காணிக்கப்படும். அதனால், தேவையில்லாத செலவுகள் குறைக்கப்பட்டு சேமிப்பு தானாக அதிகரிக்கும். பட்ஜெட் போடும்போது குடும்ப உறுப்பினர்களையும் அதில் இணைத்துக்கொண்டால், தேவையில்லாத செலவுகள் மிகவும் குறையும். மேலும், பட்ஜெட் போடும்போது நம் பணம் எங்கே செல்கிறது என்பது தெளிவாகத் தெரியும். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கும்போது கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல்போகும்.

கோடீஸ்வரராக வேண்டுமா..?பின்பற்ற வேண்டிய 8 விஷயங்கள்!

7. சரியான முதலீட்டுத் திட்டங்கள் தேர்வு

நிதி வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முதலீடு செய்வது மிக முக்கியம். சேமிப்பு என்பது, பணவீக்க அளவுக்கு வருமானம் கிடைப்பது. அதனைவிட அதிக வருமானம் தருவது, முதலீடு.

சேமிப்புக்கு வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். முதலீடு என்கிறபோது பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் குறிப்பிடலாம்.

குறுகிய காலத் தேவைகளுக்கு, அதாவது மூன்று ஆண்டுகளுக்குத் தேவைப்படும் பணத்தை மட்டுமே வங்கி, ஆர்.டி, எஃப்.டி போன்றவற்றில் போட்டு வைக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டுத் தேவைப்படும் பணத்தை நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்து வரலாம். இப்படிச் செய்யும்போது நிதி வாழ்க்கை மிகவும் மேம்படும்.

8. தவணைகளை சரியான நேரத்தில் கட்டவும்

மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வீட்டுக் கடன் தவணை எதுவாக இருந்தாலும் சரியான தேதியில் கட்டிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் மிகவும் உயர்வாக இருப்பதோடு, நிதி வாழ்க்கை என்றென்றும் வளமானதாக அமையும்.

ஆயிரங்கள் லட்சங்களாகிக் கோடியாக... வாழ்த்துகள்!