Published:Updated:

அதானி vs ஹிண்டன்பர்க்: நடந்தது என்ன A to Z அலசல்... இனி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அதானி - ஹிண்டன்பர்க்
News
அதானி - ஹிண்டன்பர்க்

தற்போதைய சூழலில் பங்குச் சந்தையிலும்,மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது ஒருவிதமான அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Published:Updated:

அதானி vs ஹிண்டன்பர்க்: நடந்தது என்ன A to Z அலசல்... இனி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தற்போதைய சூழலில் பங்குச் சந்தையிலும்,மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது ஒருவிதமான அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அதானி - ஹிண்டன்பர்க்
News
அதானி - ஹிண்டன்பர்க்

கடந்த ஒரு வார காலமாக ஹிண்டன்பர்க் நிறுவனம் (Hindenburg Research) வெளியிட்ட அறிக்கை காரணமாக, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை கணிசமாக சரிந்துள்ளது. இந்தச் சரிவு இந்தியப் பங்குச் சந்தை மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளது.

அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (வங்கிகள் மற்றும் காப்பீடு), மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பெரு முதலீட்டாளர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் என அதானி பங்குகளை கைவசம் வைத்திருக்கும் அனைவருக்கும் அதன் சமீபத்திய பங்கு விலை சரிவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவுதம் அதானி
கவுதம் அதானி

உலக பங்குச் சந்தை வரலாற்றில் பங்கு விலை மாற்றத்தில் மோசடி, வங்கிக்கடன் மோசடி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் திவால் நிலை மற்றும் நிர்வாக குறைபாடு என ஒருபுறம் இயல்பாக பார்க்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் பங்குச் சந்தையிலும்,மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது ஒருவிதமான அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அதானி குழும நிறுவனங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி வில்மர் ஆகியவை உள்ளன. சமீபத்தில் சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான ஹோல்சிம் (Holcim) குழுமத்திடமிருந்து ஏசிசி (ACC Limited) மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை அதானி குழுமம் கையகப்படுத்தியிருந்ததால் தற்போது இந்த இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் கீழ் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக சேரும்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதானி நிறுவனங்களின் பங்கு விலை அதிகமாக சரிந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக சந்தையில் ரூ. 20,000 கோடி வரை(FPO) முதலீட்டை திரட்ட இருந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், முதலீட்டை பெறுவதில் இந்நிறுவனத்திற்கு பெரிய அளவில் பாதகம் ஏற்படவில்லை.

ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ள பெரும்பாலான கேள்விகளுக்கு ஏற்கனவே நிறுவனத்தின் நிதியாண்டு அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் பங்கு விலை அதிகளவில் சரிந்ததற்கு, ``அதன் நிறுவனங்களின் பங்கு விலை கடந்த சில வருடங்களில் அதிகப்படியான ஏற்றத்தை கண்டிருந்ததும், நிறுவனங்களின் அதிக கடன் ஆகியவை தான்காரணம்" என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக பங்குகள் வாங்கக்கூடிய மதிப்பீட்டை (Valuation) கொண்டிருக்காததால், விலை சரிவும் அதிகமாகத் தென்பட்டது.

அதானி
அதானி

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்தியா சுமார் 36,000 கோடி ரூபாய் வரை (டிசம்பர் 2022) பங்குகள் மற்றும் பத்திரங்களாக அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் மதிப்பு கடந்த ஜனவரி 27-ம் தேதியின் படி ரூ.56,142 கோடியாக இருப்பதாக எல்.ஐ.சி. நிறுவனம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களில் எல்.ஐ.சி. இந்தியா செய்துள்ள முதலீடு தனது மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 42 லட்சம் கோடி ரூபாய் !

இது போக வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. பங்கு விலை சரிவு மற்றும் நிர்வாகத்தின் மீதான சந்தேகத்துக்குரிய கேள்விகள் ஆகியவற்றால் வங்கிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்துள்ள முதலீட்டை அதிகமாக பாதிக்குமா என கேட்டால், அதற்கான புள்ளிவிவரங்களை நாம் ஆராய்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) கீழ் ஒழுங்கு முறைப்படுத்தப்படும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆம்ஃபி மற்றும் செபி அமைப்புகளின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான முதலீட்டு வழிகாட்டுதலும், கடன் வழங்கும் கொள்கையும் ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் ஆர்.பி.ஐ. வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடுகள்..!

மியூச்சுவல் ஃபண்ட் நிதி நிறுவனங்களின் மூலம் செய்யப்படும் பங்கு (Equity) மற்றும் பத்திரங்களின் (Bonds) முதலீட்டிற்கு வரையறை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி செய்யப்படும் முதலீடுகள் ரிஸ்க் தன்மை கொண்டதாகவும், அவ்வாறு செய்யும் நிறுவனங்களை தண்டிக்கும் வகையிலும் செபியின் விதிமுறைகள் உள்ளது. இதனை நாம் கடந்த காலத்தில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பார்த்திருப்போம். ஆம்ஃபி - செபி விதிமுறைப்படி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளில் சொல்லப்பட்ட வரையறைக்கு அப்பால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் முதலீடு செய்ய முடியாது.

முதலீட்டாளர்களுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் ஃபண்ட் மேலாளர்கள் முதலீடு முடிவு சார்ந்து பதிலளிக்க வேண்டியது கடமை. இன்றைய நிலையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் திட்டங்களில் ஃபண்ட் மேலாளர் மற்றும் அவரது மூத்த அதிகாரிகள் உட்பட முக்கிய நபர்கள் தங்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அத்திட்டத்தில் முதலீடு செய்வது அவசியமாக உள்ளது.

அதானி
அதானி
vikatan

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டு விவரங்களை ஒவ்வொரு மாதமும் பொதுவெளியில் வெளியிடுவது வழக்கம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் மூலம் செய்யப்படும் பங்கு மற்றும் பத்திரங்களின் முதலீட்டு சொத்து மதிப்பை, திட்டங்களின் வாரியாக ஆம்ஃபி தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. இது போக காலாண்டு, அரையாண்டு மற்றும் நிதியாண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தான் செய்த முதலீட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

திட்டங்களின் வாரியாக ஒவ்வொரு நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீட்டு தொகை மற்றும் அதன் சொத்து மதிப்பில் உள்ள சதவீத பங்களிப்பு ஆகியவற்றை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது.

இந்திய மியூச்சுவல் பண்ட் துறையின் முதலீட்டு சொத்து மதிப்பு 40 லட்சம் கோடி ரூபாய். அதானி குழும நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட்களின் (Mutual Funds) மூலம் செய்யப்பட்ட முதலீடுகள் 26,388 கோடி ரூபாய் (டிசம்பர் 2022). மொத்தம் உள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட் நிறுவனம் மட்டும் அதிகபட்சமாக 6,142 கோடி ரூபாயை அதானி குழும நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மட்டும் செய்யப்பட்ட முதலீடு சுமார் ரூ.2,775 கோடி. இதற்கடுத்தாற் போல கோட்டக் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் அதானி குழும நிறுவனங்களில் ரூ.2,329 கோடியை முதலீடு செய்துள்ளது. கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1,000 கோடிக்கு மேலாக முதலீட்டை கொண்டுள்ளது. நிப்பான் மற்றும் ஐ.சி.சி.ஐ ப்ரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அதானி குழும நிறுவனங்களில் 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்துள்ளன.

அதானி குழும நிறுவனத்தில் செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் இண்டெக்ஸ் ஃபண்டுகளாக (Passive Funds - Index and ETF) தான் உள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் திட்ட சொத்து மதிப்பில் (Scheme AUM) பெரும்பாலும் 5 சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுகிறது. அதிகபட்சமாக யூ.டி.ஐ. (UTI Nifty 200 Momentum 30 Index) 5.06 சதவீதத்தை (ரூ. 106 கோடி, டிசம்பர் 2022) கொண்டுள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பை கொண்டுள்ள திட்டங்களில் அதானி என்டர்பிரைசஸ் பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 10.

ரூ.100 கோடிக்கும் அதிகமாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எண்ணிக்கை 21. அதிகபட்சமாக யூ.டி.ஐ .(UTI Transportation & Logistics Fund) திட்டத்தின் சொத்து மதிப்பில் 7 சதவீத பங்களிப்பை அதானி போர்ட்ஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதற்கடுத்தாற் போல் குவாண்ட் (Quant Tax Plan) திட்டத்தின் சொத்து மதிப்பில் 6.11 சதவீதமும், எச்.டி.எப்.சி.(HDFC Arbitrage - WP) 5.66 சதவீதமும், ஆதித்ய பிர்லா (ABSL Arbitrage Fund) 5.44 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மிக குறைவான அளவாக எஸ்.பி.ஐ. (SBI Nifty 50 ETF) திட்டத்தின் சொத்து மதிப்பில் 0.77 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.

அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ்

2022-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், அதானி பவர் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கோட்டக் (Kotak Nifty Alpha 50 ETF) அதிகபட்சமாக திட்ட சொத்து மதிப்பில் 5.68 சதவீதத்தை முதலீடாக கொண்டுள்ளது. அதே வேளையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதலீட்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீட்டு பங்களிப்பு 3.8 சதவீதமாக இருந்துள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக கோட்டக் (Kotak Nifty India Consumption ETF), எஸ்.பி.ஐ. (SBI Nifty Consumption ETF), ஆக்ஸிஸ் (Axis Nifty India Consumption) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. (Axis Nifty India Consumption ETF) திட்டங்களின் சொத்து மதிப்பில் 4 சதவீதம் வரை முதலீடு செய்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீட்டு பங்களிப்பு 0.12 சதவீதமாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூ. (ICICI Pru Nifty Commodities ETF) திட்டத்தின் சொத்து மதிப்பில் 5.42 சதவீதம் என்ற அளவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் இத்திட்டத்தின் சொத்து மதிப்பு 15 கோடி ரூபாய்க்கும் குறைவே. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்ட்களின் முதலீட்டு பங்களிப்பு 6.1 சதவீதமாக உள்ளது. இருப்பினும் இவை பெரும்பாலும் அன்னிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வாயிலாக தான் முதலீடாக வந்துள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் சொத்து மதிப்பில் 4 சதவீதத்திற்கும் குறைவாக டிசம்பர் மாதத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பங்கு வெளியீடு..!

கடந்த 2022-ம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டில் (IPO) வெளி வந்த அதானி வில்மர் நிறுவன பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு 0.1 சதவீதமாக உள்ளது. பெரும்பாலான திட்டங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடு திட்ட சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதானி குழும நிறுவனங்களின் கீழ் அங்கம் வகிக்கும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகளில் 20-க்கும் மேற்பட்டமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து மதிப்பை கொண்டுள்ளன. அதிகபட்சமாக மோதிலால் (Motilal Oswal Flexi Cap Fund) தனது திட்டத்தின் சொத்து மதிப்பில் 6 சதவீத பங்களிப்பை அம்புஜா நிறுவனத்தில் கொண்டுள்ளது.

Hindenburg Research
Hindenburg Research

மற்றொரு நிறுவனமான ஏசிசி சிமெண்ட் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 8 சதவீதம் வரை தனது முதலீட்டை கொண்டுள்ளது. நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்து மதிப்பை கொண்ட முதலீட்டு திட்டங்களில் டாட்டா (TATA Equity P/E Fund) தனது திட்ட சொத்து மதிப்பில் 3.21 சதவீத பங்களிப்பை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் சொத்து மதிப்பு ரூ.171 கோடி (டிசம்பர் 2022). ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரண்டும் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடிய நிறுவனங்களாகும். வருவாய் மற்றும் லாப வளர்ச்சியில் சரியாக கையாளும் இவ்விரண்டு நிறுவனங்களின் கடன் தன்மையும் மிகக்குறைவே.

அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு முதலீட்டு பங்களிப்பு (Promoter Holding) மட்டுமே 70 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளன. நிறுவனர்களுக்கு அடுத்தாற்போல் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது. உள்ளூர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்கள் வாயிலாக 5 சதவீதத்திற்கும் குறைவாக தான் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள தொகை (டிசம்பர் 2022):

அதானி vs ஹிண்டன்பர்க்: நடந்தது என்ன A to Z அலசல்... இனி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள டாப் - 10 மியூச்சுவல் பண்டுகள் (டிசம்பர் 2022):

அதானி vs ஹிண்டன்பர்க்: நடந்தது என்ன A to Z அலசல்... இனி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அதானி குழும நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பங்களிப்பு (Holding %):

அதானி vs ஹிண்டன்பர்க்: நடந்தது என்ன A to Z அலசல்... இனி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

* சந்தை மதிப்பு: 31-01-2023 அன்றைய முடிவில்), முதலீட்டு பங்களிப்பு (டிசம்பர் 2022 முடிவில்)

# ரூ.5.5 கோடி என்ற அளவில் ஒட்டுமொத்தமாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அதானி பவர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

முதலீட்டாளர்கள் கவனிக்க...

அதானி குழும நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது முதலீட்டை வங்கிக் கடன் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் மூலம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

 அதானி குழும நிறுவனம் தனது வங்கிக் கடனை கடந்த சில வருடங்களில் குறைத்துள்ளது. மேலும் உள்ளூரில் வங்கிக் கடனை பெறாமல், பெரும்பாலும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் தனது கடனை ஈர்த்துள்ளது.

அதானி vs ஹிண்டன்பர்க்: நடந்தது என்ன A to Z அலசல்... இனி முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

குழும நிறுவனங்களில் ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் தவிர்த்து மற்ற நிறுவனங்களின் கடன் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 தற்போதைய பங்குச் சந்தை சரிவு என்பது உலகளாவிய பொருளாதார காரணிகள் சார்ந்து தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை சரிவு ஒட்டுமொத்த சந்தையை பெரிய அளவில் பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. அது போல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களும் இது போன்ற நிலையை கடந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்வதன் மூலம் பலனளிக்கும். அதே வேளையில் நிறுவனத்தின் நிர்வாக குறைபாடுகளை களைவதும், செய்திகளை கடந்து போவதும் அவசியம்.

கட்டுரையாளர்:  நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com
கட்டுரையாளர்: நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு ஆம்ஃபி - செபி வரைமுறையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சந்தையில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டும் அதிகமாக முதலீடு செய்ய முடியாது. முதலீட்டை பல நிறுவனங்களில் பரவலாக்கம் செய்வதும், நல்ல நிறுவனங்களை கண்டறிவதும், அதிக கடன்  கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் அல்லது கடன் குறைவாக இருந்தால் மட்டுமே முதலீடு, நிறுவனத்தின் நிர்வாக திறமை என பல பகுப்பாய்வு கூறுகளை கொண்டேமியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான விதிமுறைகளையும் ஒழுங்குமுறை ஆணையம் திறம்பட வகுத்துள்ளது. மாதாந்திர மற்றும் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும் முதலீட்டு தரவுகளால் வெளிப்படைத்தன்மையும், முதலீட்டாளர் நலனும் பாதுகாக்கப்படுகிறது.

பொதுவாக பங்கு முதலீட்டில் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை ஆராய்வது, கடன் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது, நிர்வாகத்தின் செயல்பாடு (Corporate Governance) போன்றவற்றை கவனிக்கும் நிலையில் பங்கு விலையில் மாற்றம் ஏற்பட்டாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருவாயை பெறலாம்.