மற்ற எபிசோடுகள்
Published:Updated:

12,000 பணியாளர்கள், 150 கிளைகள்... ஆலவிருட்சமாக விரிந்த ‘அடையார் ஆனந்த பவன்!’

ஶ்ரீனிவாச ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீனிவாச ராஜா

வெற்றித் தலைமுறை - 7

தோல்வி என்பது நிரந்தரம் அல்ல... ஒவ்வொரு தோல்வியிலும் நாம் கற்றுக் கொள்ள ஏதோ ஒரு பாடம் இருக்கிறது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஜெயித்த நிறுவனங்களில் ஒன்று ‘அடையார் ஆனந்த பவன்.’ பல தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து, ஜீரோவில் இருந்து பயணத்தைத் தொடங்கி இன்று 12,000-க்கும் அதிகமான பணியாளர்கள், 150 கிளைகள், கோடிகளில் டேர்ன்ஓவர் என பிசினஸில் தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துள்ளது அடையார் ஆனந்த பவன் நிறுவனம். இரண்டாம் தலைமுறை தாங்கிநிற்கும் அந்த நிறுவனத்தின் பீனிக்ஸ் கதை உங்களுக்காக...

‘‘விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் திருப்பதி ராஜா. குலத் தொழில் விவசாயம். விவசாயத்தில் இருந்து கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லாததால் ராஜபாளையத்திலிருந்து பாம்பே, சென்னை போன்ற ஊர்களுக்குச் சென்று வேலை செய்தார். அங்கு இனிப்புகள் செய்யும் வழிமுறைகளையும் பிசினஸையும் கற்றுக்கொண்டார். 1959-ல் சொந்த ஊரில் ஒரு ஸ்வீட் கடையை ஆரம்பித்தார். ஊரில் இருந்த நிலத்தையும் விவசாயத்தையும், ஸ்வீட் தொழிலையும் ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்ள, சில மாதங்களில் இயற்கை சீற்றம் காரணமாக விவசாயத்தில் பெரிய அளவு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் குடும்பம் மிகுந்த வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு, சாப்பாட்டுக்கே சிரமப்படும் சூழல் உருவானது.

குடும்பத்தைக் கடனிலிருந்து மீட்டெடுக்க மீண்டும் பெங்களூர் சென்று, சில மாதங்கள் சிறிது தொகையை சம்பாதித்து, 1975-ம் ஆண்டு பெங்களூரில் ‘ சீனிவாசா ஸ்வீட்ஸ்’ என்ற சிறிய ஸ்வீட் கடையைத் திறந்தார். இதுதான் அடையாறு ஆனந்த பவனின் ஆரம்பம். அதன்பிறகான கதை நம்மிடம் சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் அந்த நிறுவனத்தின் இயக்குநர் ஶ்ரீனிவாச ராஜா.

ஶ்ரீனிவாச ராஜா
ஶ்ரீனிவாச ராஜா

“வாழ்க்கை, பிசினஸ் இரண்டையுமே அப்பாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டோம். ஒரு காலத்தில் அடுத்த வேளை, சாப்பாட்டுக்கே சிரமப்பட்டு இருக்கிறோம். ஆனால், எங்களுடைய உழைப்பும், ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. எங்க குடும்பத்தில் நான், என் அண்ணன் வெங்கடேஷன் என இரண்டு பேர். அப்பா, பெங்களூரில் இனிப்பு கடை ஒன்றை திறந்து எங்கள் நிறுவனத்தின் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

பெங்களூரில் தொடங்கிய கடையை அப்பா தனியாகக் கவனித்துக்கொள்ள சிரமப்படுவதாக அம்மா சொன்னாங்க. அதனால் நானும் அண்ணணும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பாவுக்கு உதவச் சென்றோம். அப்பாவுக்கு பிசினஸ் அனுபவம் இருந்ததால, அவரிடமிருந்து சின்னச் சின்ன விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். ஒரு சில வருடங் களில் அந்த இனிப்புக் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் சென்னையில் ஒரு கடை தொடங்கலாம் என்று அப்பா எண்ணினார். 1979-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘ ஆனந்த பவன்’ என்ற கடையைத் தொடங் கினோம். அந்தக் கடையை அப்பாவும் அண்ணனும் கவனித்துக்கொண்டார்கள். நான் பெங்களூரில் இருந்த கடையைக் கவனித்துக் கொண்டேன்.

சென்னையில் தொடங்கிய கடை எங்களுக்கு நல்ல மதிப்பை பெற்றுக் கொடுத்தது. மேலும், குடும்பத்தில் ஆளுக்கொரு திசையில் இருந்ததால், பெங்களூரில் இருந்த கடையை மூடிவிட்டு, சென்னையில் இன்னொரு கிளையைத் திறக்கலாம் என்ற ஐடியாவைக் கொடுத்தார் அப்பா. சென்னை அடையாரில் எங்களுடைய இரண்டாவது கிளையை 1988-ல் திறக்கும்போதே, இது ஸ்வீட் கடையாக மட்டும் இருக்கக்கூடாது; நிச்சயம் பல கிளைகள் கொண்ட நிறுவனமாக மாற வேண்டும் என்பதை நான் இலக்காகத் தீர்மானித்துக் கொண்டேன்.

அடையாரில் தொடங்கு வதால், அந்த இடத்தை மையமாகக் கொண்டு நிறுவனத்துக்கு பெயர் வைத்தால், மக்களை எளிதில் சென்றடைய முடியும் என்று தோன்றியது. அதனால் ‘அடையார் ஆனந்த பவன்’ என்ற பெயரைத் தேர்வு செய் தேன். அப்பாவுக்கு அந்த பெயரில் துளியும் விருப்பமில்லை. ஆனால், இந்தப் பெயர் ஹிட் ஆகும் என்பது ஆணித்தரமாக மனதில் தோன்றியது.

தின்பண்டங்களில் இருந்த கலோரிகள், ஸ்வீட் போன்றவை காரணமாக வயதான கஸ்டமர் களைத் தக்கவைப்பதில் சிரமங்கள் இருந்தது. அதனால் அவர்களை ஈர்க்கும் விதமாக பல உணவுகளை அறிமுகம் செய்யும் முடிவுக்கு வந்தோம். அதை அடையார் ஆனந்த பவன் நிர்வாகத்தின் பெயரில் விற்காமல் வேறு பெயரில் விற்க வேண்டும் என்று முடிவெடுத்து A2B (ஏ ஸ்கொயர் பி) என்ற பெயரில் பாண்டிச்சேரியில் முதல் உணவுக் கடையைத் திறந்தோம்.

அடுத்தபடியாக அடுத்தடுத்து கிளைகள் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். கிளைகள் தொடங்குவதில் நாங்கள் செய்த யூகம்தான் எங்கள் மிகப் பெரிய வெற்றியின் ஆரம்பம். நகரங்களில் ஏற்கெனவே ஏகப்பட்ட உணவங்கள் இருந்தன. டிராவல் செய்பவர்களுக்கு வசதியாக எங்களுடைய A2B உணவு நிறுவனத்தை புறவழிச் சாலைகளில் அமைத்தோம். பயணம் செய்பவர்களுக்கு வசதி யாக ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கு ஒரு கடை திறக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டோம். இதுவரை 150-க்கும் அதிகமான கிளைகளைத் தொடங்கிவிட்டோம்.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, லண்டன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிளைகளை விரிவுபடுத்தியிருக்கிறோம்’’ என்ற ஶ்ரீனிவாச ராஜா ‘ஏ ஸ்கொயர் பி’ என்ற தங்களுடைய நிறுவனத்தின் பெயரை A2B என்று மாற்றியமைக்க வாடிக்கையாளர் ஒருவர் காரண மாக இருந்த கதையைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

“எங்க உணவு நிறுவனத்துக்கு ‘ஏ ஸ்கோயர் பி’ என்றுதான் பெயர் வைத்திருந்தோம். பாண்டிச் சேரியில் எங்கள் உணவகத்துக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந் தேன். அப்போது ஒரு குழந்தை தன் அம்மாவிடம், ‘ஏடுபி கடையில் தோசை வாங்கித் தா’ என்று ஒரே அழுகை. ‘ஏடுபி உணவகமா... அது எங்கே இருக்கு?’ என்று யோசித்துவிட்டு, வழிபாடு முடிந்து எங்களுடைய உணவகத்துக்குள் நுழைந்தேன். அப்போது அந்த அம்மாவும் குழந்தையும் எங்களுடைய கடையில் தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அம்மாவிடம், ‘உங்கள் குழந்தை ஏடுபி என்று சொல்லிக் கொண்டிருந்ததே’ என்று கேட்க, அதற்கு அந்த அம்மா, ‘ஆமா சார், இந்தக் கடைதான் ஏடுபி’ என்றார். எனக்கு அதுவரை ஸ்கொயரை மக்கள் 2 என்று எண்ணுகிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தது. சின்னக் குழந்தைக்கு மனதில் பதிந்த விஷயம் சரியாகவே இருக்கும் என்று எண்ணி நிறுவனத்தின் பெயரை ஏடுபி என மாற்றினோம்’’ என்றவரிடம், பிசினஸில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றிக் கேட்டோம்.

12,000 பணியாளர்கள், 150 கிளைகள்... ஆலவிருட்சமாக விரிந்த ‘அடையார் ஆனந்த பவன்!’

“எல்லா பிசினஸிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கொரோனா நேரத்தில் மீண்டும் ஜீரோவில் இருந்து தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மீளவே முடியாத சரிவு நிலைதான். ஆனால், விற்பனை முறையை மாற்றி அமைத்து மீண்டெழுந்தோம். எங்கள் விற்பனைப் பிரிவினரே வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று உணவுகளை டெலிவரி செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்தோம். எவ்வளவு உணவு தயாரிக்க வேண்டும், எந்தக் கடையில் எந்த இனிப்பு அதிகம் விற்பனையாகும் என்பதை எல்லாம் கணிக்க தனி டீம் வைத்திருக்கிறோம். அவர்களின் வழிகாட்டுதல்படி, சரியான திட்டமிடலுடன் நடப்பதால், பெரிய சரிவுகள் எதுவும் இல்லை. பிசினஸில் ரிஸ்க் எடுக்கலாம் தவறில்லை. ஆனால், அதற்குரிய அனுபவம் நிச்சயம் வேண்டும்.

இப்போது 150 கிளைகளுக்குமேல் இருக்கின்றன. அடுத்தபடியாக, உணவுகளை சமைத்து வீடு வீடாகக் கொண்டு செல்லும் திட்டமும், 2,000 கிளைகள் தொடங்க வேண்டும் என்ற இலக்கும் வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல விவசாயம் சார்ந்து அவகேடா வளர்ப்பில் கவனம் செலுத்தவும் தொடங்கியிருக்கிறோம். ஏடுபி கிரீன்ஸ் என்ற பெயரில் காய்கறிகள், பழங்கள் விற்கும் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறோம்.

என் அண்ணன் நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறார். நான் தயாரிப்பு, மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்து கிறேன். எங்களுடைய குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையினர் கைகோக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நாங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, நிர்வாகத்துக்கு வந்தோம். எங்கள் பிள்ளைகள் அதற்கென சிறப்பு பாடங்கள் படித்து நிர்வாகத்துக்குள் நுழைந்து இருக்கிறார் கள். அனுபவமும் புதுமையும் சேர்ந்து எங்கள் நிறுவனம் இன்னும் பரவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் பள்ளியில் படித்தபோது பள்ளியில் எடுத்த குரூப் போட்டோ வாங்க காசில்லை. அந்தச் சூழலில் என் அம்மா என்னை அழைத்து, காசு இல்லைனு சொல்லாமல், ‘பள்ளிக்கூடத்துல எடுக்குற போட்டோ நமக்கு எதுக்கு... நீ உன் திறமையால் பெரிய ஆளா வந்தா உன் கூட எல்லாரும் போட்டோ எடுப்பாங்க’னு சொன்னாங்க. ஆனா, அம்மா கூறியது இன்று நிஜம் ஆகியிருக்கிறது. உழைப்பை மட்டும் நம்புங்கள். எல்லாம் மாறும்’’ என்றார் உறுதியுடன்.

(தலைமுறை தொடரும்)