Published:Updated:

ஊரடங்கு காலத்திலும் ஏற்றுமதியில் சாதித்த விவசாயத்துறை... அரிசியும் சர்க்கரையும் முன்னிலை!

அரிசி, சர்க்கரை
அரிசி, சர்க்கரை

விவசாயம் சார்ந்த பொருள்களின் ஏற்றுமதியில் அரிசியும் சர்க்கரையும் பெரும்பான்மை வகிக்கின்றன.

கொரோனாவின் பாதிப்பின் தீவிரத்தால் பல்வேறு துறைகள் முடங்கி இருந்தாலும், விவசாயத்துறை செழிப்பாகவே உள்ளது. விவசாயத்துறையால் நம் ஜிடிபி (GDP) வீழ்ச்சி சற்றே தடுக்கப்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பும் ஊரடங்கும் தீவிரமாக இருந்த காலகட்டமான ஏப்ரல் முதல் ஜூன் முதலான காலகட்டத்தில் விவசாயத்துறையின் ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட 23.9% அதிகரித்துள்ளது.

அரிசி சர்க்கரை
அரிசி சர்க்கரை

விவசாயம் சார்ந்த பொருள்களின் ஏற்றுமதியில் அரிசியும் சர்க்கரையும் பெரும்பான்மை வகிக்கின்றன. 2020-21 ஆண்டுக்கான முதல் காலாண்டின் இறுதியில் விவசாய ஏற்றுமதியில் பாசுமதி அரிசி முன்னிலையில் இருந்தாலும், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்திருப்பதற்கு பாசுமதி அல்லாத மற்றைய அரிசி ரகங்களே காரணமாக உள்ளன.

2020-ம் ஆண்டின் முற்பகுதியில் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு ரூ.8,591 கோடி ஆகும். ஆனால், ஏற்றுமதியில் ஏற்றம் காண்பதற்கு பாசுமதி அல்லாத அரிசியே காரணம். அதன் மதிப்பு ரூ.2,392 கோடி. சென்ற ஆண்டு ஏற்றுமதி மதிப்பைவிட இந்த ஆண்டு விவசாய ஏற்றுமதி மதிப்பு ரூ.4,818 கோடியாக அதிகரித்துள்ளது. ரீஃபைன்ட் சர்க்கரை ஏற்றுமதி மூலம் ரூ.1,719 கோடியும், சுத்திகரிக்கப்படாத சர்க்கரை மூலம் ரூ.448 கோடியும் கிடைத்துள்ளது. பாசுமதி அல்லாத அரிசி மற்றும் சர்க்கரை விவசாய ஏற்றுமதியில் 95% வகித்து ரூ.4,559 கோடியைத் தொட்டுள்ளது.

துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, கடலை எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்திருந்தாலும், மொத்த ஏற்றுமதியில் அரிசி, சர்க்கரை, வெங்காயத்தின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் இதன் ஏற்றுமதி அளவு குறைவாகவே உள்ளது. பாசுமதி அரிசி ஏற்றுமதி சிறிது குறைந்துள்ளது.

Parshottam Rupala
Parshottam Rupala
MUKESH KUMAR SAINI

சென்ற வாரம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்புகளின் 35-வது ஆசியாவுக்கான இணைய வழி மாநாட்டில் கொரோனா காலத்திலும், இந்தியா உணவு பொருள்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது அங்கு குறிப்பிடப்பட்டது.

இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற விவசாயத்துறை மாநில அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, "அறுவடைக் காலத்தில் எடுக்கப்பட்ட சரியான முயற்சிகளால் கொரோனா காலத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு சாத்தியமானது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் துவரம் பருப்பின் ஏற்றுமதி 440%, கொண்டைக்கடலை ஏற்றுமதி 407%, கடலை எண்ணெய் ஏற்றுமதி 243%, கோதுமை ஏற்றுமதி 148% கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. அரிசி, சர்க்கரையின் ஏற்றுமதி, மொத்த ஏற்றுமதியில் 78% வகிக்கின்றது" என்றார்.

விவசாய வளர்ச்சி இன்னும் பெருகி, ஏற்றுமதி அதிகரிக்கட்டும். விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதில் உலகின் மிக முக்கியமான நாடாக நம் இந்தியா உயரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு