பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!

நம்பிக்கை விருதுகள் விழா
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பிக்கை விருதுகள் விழா

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராஜ்மோகனும் அனிதா சம்பத்தும் ஒவ்வொரு கணத்துக்கும் உற்சாகச் சுடரேற்றினார்கள்.

னந்த விகடன் நம்பிக்கை விருதுகள் என்றாலே மனிதநேயம், சமூக உணர்வு, நெகிழ்ச்சிக்கணங்கள், கலகலப்புத் தருணங்கள் என உணர்ச்சிகளின் உற்சவமாக இருக்கும். இந்த ஆண்டு நடந்த ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவும் அப்படியே!

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ராஜ்மோகனும் அனிதா சம்பத்தும் ஒவ்வொரு கணத்துக்கும் உற்சாகச் சுடரேற்றினார்கள்.

  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை கவிஞர்கள் வ.ஐ.ச.ஜெயபாலன், கலாப்ரியா ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டார் கவிஞர் சேரன். தனது கவிதைத் தொகுப்புக்கு ‘அஞர்’ என்ற தலைப்பைச் சூட்டியது குறித்துப் பேசிய அவர், “அஞர் என்ற பழைய தமிழ்ச் சொல்லைத் தலைப்பாகச் சூட்டியது, தமிழ்மொழியின் சொல்வளத்தைக் குறிப்பதற்காகவே. மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தில், இலங்கையில் தமிழர்கள்மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதனைப் பற்றிய படைப்புக்கு விருது வழங்கப்படுவது, தமிழர்கள் இனப்படுகொலையை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது” என்றார்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான இலக்கிய விருதை ‘பஷீரிஸ்ட்’ நூலுக்காக எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவுக்கு வழங்கினார் எழுத்தாளர் சோ.தர்மன். விருதைப் பெற்றுக்கொண்ட கீரனூர் ஜாகிர் ராஜா, “நாடு இருக்கும் அரசியல் சூழலில், தமிழ் முஸ்லிம் படைப்பாளியான எனக்கு, விகடன் விருது தருவது மகிழ்ச்சி” என்று சமகால அரசியல் சூழலைத் தொட்டார்.

  • சிறந்த சிறார் இலக்கியத்திற்கான விருதை எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு வழங்கினார் எழுத்தாளர் இமையம். இமையத்திடம் ராஜ்மோகன், “கருணாநிதியின் எழுத்தாளர், அரசியல்வாதி, வசனகர்த்தா முதலான முகங்களில் எந்த முகத்தை மிஸ் பண்றீங்க?” என்று கேட்க, “அவர் இல்லையென்றாலும் அவரது ஆளுமை எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கிறது; அவரது இல்லாமையை நான் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை” என்று பதிலளிக்க, அரங்கம் அதிர்ந்தது. விருதுபெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், விருதைத் தந்தை பெரியாருக்கும், உலகம் முழுவதும் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடும் ஒவ்வொரு நபருக்கும் சமர்ப்பணம் செய்வதாக அறிவித்தார். விஷ்ணுபுரம் சரவணனின் மனைவியும், மகள் தமிழினியும் மேடையேற, மகளுக்கு முத்தமிட்டு அரங்கத்தை நெகிழச் செய்தார் சரவணன்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புக்கான விருதை மூத்த எழுத்தாளர் இந்திரனிடம் பெற்றுக்கொண்ட கே.கணேஷ்ராம். “எழுத்து என்பது வழிகாட்டுவது; எங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழிகாட்டும் எழுத்தாளர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

  • சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான விருதை `வாட்டர் மேன்’ என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங், இயக்குநர் கோபி நயினார் ஆகியோர், எழுத்தாளர் நக்கீரனுக்கு வழங்கினர். தமிழகத்தின் நீர்வளம் குறித்துத் தொகுப்பாளர்கள் கேட்டதற்கு “தமிழர் பண்பாடு என்பதே நீரை அடிப்படையாகக் கொண்டது” என்று விரிவாகப் பேசினார் நக்கீரன். எழுத்தாளர் நக்கீரனின் பெயர்க் காரணம் குறித்து அனிதா சம்பத் கேட்க, தனக்குப் பெயர் சூட்டியவர் பெரியார் என்று கூறி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்த, பெரியார் மடியில் அவர் குழந்தையாக அமர்ந்திருந்த படத்தைத் திரையில் காட்ட, அவரே வியந்துபோனார். “எங்க அம்மா சொல்வாங்க. பெரியாருடன் படம் எடுப்பதற்காகச் சென்றபோது நான் அழுதுகொண்டிருந்தேனாம். அப்போது பெரியார் என்னை வாங்கிக்கொண்டார். பெரியாரின் தாடி, குழந்தையாக இருந்த என் மேல் உரசியிருக்கிறது. உடனே நான் அழுவதை நிறுத்திவிட்டு, அவரது தாடியைப் பிடித்து விளையாடியிருக்கிறேன். அப்போது பெரியார் `தமிழ்நாட்டில் என் தாடியைப் பிடித்து இழுத்தது இவன் மட்டும்தான்’ என்றாராம்” என்று நினைவுகூர்ந்தார் நக்கீரன். இயக்குநர் கோபி நயினார், “எழுத்து என்பது விடுதலை உணர்வை ஏற்படுத்த வேண்டும்; நக்கீரனின் எழுத்து அப்படியான உணர்வை ஏற்படுத்துகிறது” என்று மனதாரப் பாராட்டினார்.

நம்பிக்கை விருதுகள் விழா!
நம்பிக்கை விருதுகள் விழா!
  • சிறந்த சிற்றிதழுக்கான விருதை ‘படச்சுருள்’ சார்பாக அருண் பெற்றுக்கொண்டார். இந்த விருதை வழங்கியவர்கள், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர். விருது பெற்ற அருண், தனது பேச்சில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு குறித்த தனது கடுமையான விமர்சனங்களைப் பதிவுசெய்தார்.

  • சிறந்த நாவலுக்கான விருதை எழுத்தாளர்

    இரா.முருகவேள் வழங்க, பெற்றுக்கொண்ட எழுத்தாளர் இரா.முத்துநாகு, “வரலாற்றின் போக்கில் வியாபாரம், பணம் காரணமாகக் காணாமல்போன மரபு பற்றிய கதைதான் இந்த நாவல்” என்று, தான் நாவல் எழுதியதற்கான காரணத்தைக் கூறினார்.

  • சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கான விருதை அனுராதா ஆனந்துக்கு வழங்கிய கவிஞர் யுகபாரதியிடம் “கவிதைக்கும் பாடலுக்கும் இடையிலான வேறுபாடு குறித்து ராஜ்மோகன் கேட்க, “எனக்காக நான் எழுதினால் கவிதை; உங்களுக்காக எழுதினால் அது பாடல்” என்று பதிலளித்து அசத்தினார் யுகபாரதி.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • சிறந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்புக்கான விருதை எழுத்தாளர் க.பூர்ணசந்திரனுக்கு அளித்தார் எழுத்தாளர் சி.மோகன். விருதுபெற்ற க.பூர்ணசந்திரன், நாகரிகங்களின் மோதல் இந்திய வரலாற்றையும் எப்படி பாதித்தது என்பது குறித்துப் பேசினார்.

  • சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விருதை இயக்குநர் தங்கர் பச்சான், எழுத்தாளர் லதா அருணாச்சலத்திற்கு வழங்கினார். ஆப்பிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் லதா அருணாச்சலம்.

  • பறையிசை முழங்க, ‘பெருந்தமிழர் விருது’ பெறுவதற்காக மேடையேறினார் மூத்த எழுத்தாளர் பொன்னீலன். அவருக்கு விருது அளிப்பதற்காக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளாரும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் மேடையேறினர். `பெருந்தமிழர் விருது’ பெற்ற பொன்னீலன், “இந்த விருது என்னுடைய மானுட நேயப் பண்பாட்டிற்கு மதிப்பு தருவதாக இருக்கிறது” என்று பெருமையோடு கூறினார். தனக்கு விருது அளித்த எஸ்.ராமகிருஷ்ணனையும், குன்றக்குடி அடிகளாரையும் `மாமனிதர்கள்’ என்று போற்றிய பொன்னீலன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை ‘மனித நேயத்தின் மொத்த உருவம்’ என்று பாராட்டினார்; ‘சாதி, மதம், மொழி பார்க்காமல் அனைவரையும் அரவணைக்கும் மடம் குன்றக்குடி மடம்’ என்று குன்றக்குடி அடிகளாரைப் புகழ்ந்தார்.

  • வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் காதம்பரி விஸ்வநாதன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அருணாச்சலம் ஆகியோர் விழாவின் ஒரு பகுதியாக சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான முன்னெடுப்பு குறித்துப் பேச மேடையேறினர். விகடன் குழுமமும், வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான இணையதளத்தையும், அதன் லோகோவையும் மேடையில் அறிமுகப்படுத்தினர்.

  • இலக்கிய விருதுகளுக்குப் பிறகு டாப் 10 மனிதர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. நிலாவின் தென்துருவத்திற்குச் செயற்கைக்கோள் அனுப்பி, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த `சந்திரயான் 2’ திட்டத்தின் இயக்குநர் வனிதா முத்தையா விருதுபெற மேடையேற, அவருக்கான விருதை அளித்தார் `சந்திரயான் 1’ திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. பார்வையாளர்கள் வனிதா முத்தையாவைப் பெருமைப்படுத்த தேசியக் கொடியோடு எழுந்து நிற்க, பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ ஒலிக்க, நெகிழ்ந்து நின்றார் வனிதா முத்தையா.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • ’சந்திரயான் 2’ திட்டம் உருவாவதற்காக வனிதாவின் கணவர் உறுதுணையாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய மயில்சாமி அண்ணாதுரை, அவரையும் மேடைக்கு அழைத்தார். விருதுபெற்ற வனிதா முத்தையா, “சந்திரயான் ஏவப்பட்டபோது, தேசமே அதற்காகக் கண்விழித்துக் காத்துக் கிடந்தது. மொத்த நாடும் எங்கள் திட்டத்திற்கு ஆதரவு அளித்தது. அதனால் தற்போது குழந்தைகளுக்கும் அறிவியல்மீது ஆர்வம் வந்திருக்கிறது” என்றார்.

  • எளிய மக்களுக்காகத் தொடர்ந்து நடந்து தேய்ந்த பொ.ரத்தினத்தின் கால்கள், நம்பிக்கை விருதுபெற மேடையேறின. அவருக்கு, பேராசிரியர் கல்விமணியும், மருத்துவர் கு.சிவராமனும் விருது வழங்கினர். நம்பிக்கை விருதுபெற்ற பொ.ரத்தினத்திடம் ராஜ்மோகன், அவரது மனித உரிமைப் பணிகளில் உள்ள சவால் குறித்துக் கேட்க, “அறியாமையில் இருக்கும் நீதிபதிகளும், சாதியைக் கட்டிக்காக்கும் மனிதத்தை இழந்த மக்களும், `சாதியைக் கொல்ல வேண்டும்’ என்று அம்பேத்கர் கூறியதைப் பொருட்படுத்தாமல், சாதியை வலுப்படுத்தும் படித்த பாமரர்களும்” என்று தெறித்து வந்தது பதில். பேராசிரியர் கல்விமணி, தன்னைப் பொ. ரத்தினத்தின் மாணவர் என்று பெருமையோடு கூறினார்.

  • கீழடியின் தொன்மையை வெளிக்கொண்டு வரப் பணியாற்றிய தொல்லியல் ஆர்வலர் வை.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகியோருக்கு விருது வழங்கினர், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், நீதியரசர் மகாதேவன் ஆகியோர். “40 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படி விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்து நான் தொல்லியல் கண்காட்சியை அப்போது நடத்தவில்லை. உள்ளூர் வரலாற்றை மாணவர்களும், அப்பகுதி மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்தேன். ஒவ்வொரு மக்களும் தங்கள் ஊரின் பெயர்க் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார் வை.பாலசுப்பிரமணியன். வழக்கறிஞர் கனிமொழி மதி, வரலாற்றை அறிந்துகொள்ள அரசு அதிகமாக பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுக்கல்வியை அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிவை ஒழிப்பதற்கான அறிவியல் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருந்த கேரள மாணவர்கள் எட்டுப் பேரும் மேடை ஏறினர். அவர்களுக்கான விருதை, தமிழ்நாட்டுத் தலைமைச் செயலர் சண்முகம் வழங்கினார். Bandicoot ரோபோவை உருவாக்கிய இளைஞர்கள், “நாங்கள் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த இன்ஜினீயர்கள். சமூகத்தில் நிலவும் பிரச்னை ஒன்றிற்குத் தீர்வு வேண்டி, நாங்கள் இணைந்து இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கிறோம்” என்றனர். “மரணங்களைத் தடுக்கக்கூடிய கண்டுபிடிப்புகளே மிக உயர்ந்த கண்டுபிடிப்பு. அதனைச் செய்திருக்கும் இந்த இளைஞர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்று நீண்ட பாராட்டுப் பத்திரம் வாசித்தார் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலர் சண்முகம்.

  • மதுரைத் தோப்பூர் காட்டாஸ்பத்திரியை அசத்தும் மருத்துவமனையாக மாற்றிய மருத்துவர் காந்திமதிநாதனுக்கு நம்பிக்கை விருது அளித்தார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். “ஒரு அரசு மருத்துவர் தன் பணியைச் செவ்வனே செய்ததற்காக இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று தன்னடக்கத்தோடு விருதை ஏற்றுக்கொண்ட காந்திமதிநாதன், இந்த விருதுக்குக் காரணமாக ‘பத்மாவதி’ துப்புரவுப் பணியாளர்களைச் சுட்டிக்காட்டினார். சு.வெங்கடேசனிடம் ராஜ்மோகன், “நாடாளுமன்றத்தில் கருத்துரிமை இருக்கிறதா?” என்று கேட்க, “அரசால் படுகொலை செய்யப்படுகிற மிக முக்கியமான சொற்கள் - கருத்துரிமை, ஜனநாயக உரிமை” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

  • மீட் அண்ட் ஈட் நிறுவனம், கிராமப் பொருளாதாரத்தில் பங்களிக்கும் விதம் குறித்த காணொலி, விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டது.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • வழக்கறிஞர் செல்வகோமதிக்கு விருது வழங்குவதற்காக மேடையேறினார் பேச்சாளர் பாரதி பாஸ்கர். விருதுபெற்ற செல்வகோமதி, தன் பெற்றோரை மேடைக்கு அழைக்க, அவர்களோடு ஆனந்த விகடன் வாசகர்கள் சிலரும் மேடையைப் பகிர்ந்துகொண்டனர். “கிராமங்களில் பெண்கள், பெண் குழந்தைகள் அரசு நிர்ணயம் செய்ததைவிடக் குறைவான கூலிக்குப் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம்” என்று தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார் செல்வகோமதி.

  • நடிகர் சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அண்ட் கோ நிறுவனருமான வசந்தகுமார் ஆகியோர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸுக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்தனர். தனக்கும், விகடன் குழுமத்திற்குமான நீண்ட கால உறவைப் பகிர்ந்துகொண்டார் சிவகுமார். விருதுபெற்ற பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், தனது 10 வயதில் காமராஜரோடு காரில் பயணம் செய்தபோது, ஐ.ஏ.எஸ் பற்றிக் கேள்விப்பட்டதையும், அதனால் ஐ.ஏ.எஸ் ஆனதாகவும் தனது கதையைக் கூறினார்.

  • விகடனும் ஆஸ்ட்ரா ஹியரிங் எய்டு நிறுவனமும் இணைந்து நடத்திய ‘அம்மாவின் அன்பு’ என்னும் நிகழ்ச்சி குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது.

  • பொது நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்ட தியாகராஜனுக்கு விருது வழங்கிய அலெக்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ், “அதிகாரிகளால் மட்டுமே நடத்தப்படுவது அரசு அல்ல; மக்களின் பங்கேற்போடு நடப்பதே அரசு. அப்படியான மிகச் சிறந்த பங்கேற்பாளராக, பொது நிலங்களை இவர் காப்பாற்றியுள்ளார்” என்று உளமாரப் பாராட்டினார்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • அரசுத் தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்து, பலரையும் அரசுப் பணிகளுக்கு அனுப்பிய கனகராஜுக்கு `நம்பிக்கை விருது’ அளித்தார் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அவருடன் கனகராஜின் மாணவர்களான கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரி ரேணுகா ஆகியோரும் மேடையேறினர். ``இந்தியாவில் மிகப்பெரிய இளைஞர்கள் வளம் உள்ளது. இந்த இளைஞர்களுக்குச் சரியான வழியைக் காட்டிவிட்டால், நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்லும். அதனைத் தற்போது செய்துகொண்டிருக்கிறேன்” என்று தனது கல்விப் பணி குறித்து மனம் திறந்தார் கனகராஜ்.

  • பஞ்சகவ்யாவை நடைமுறைக்குக் கொண்டுவந்த டாக்டர் நடராஜனுக்கு விருது அளித்தார் முன்னோடி இயற்கை விவசாயி நாகரத்தின நாயுடு. டாக்டர் நடராஜனின் பணியைப் பாராட்டி, அவருக்கு ஏர்க்கலப்பை வழங்கப்பட அதனை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையையும், அவற்றை அவர் தயாரித்து விவசாயிகளுக்கு அளிக்கத் தொடங்கியதையும் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் டாக்டர் நடராஜன்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • ஸ்விகி நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள, திருநங்கைகளின் முக்கியமான முன்னோடி சம்யுக்தா விஜயனுக்கு டாப் 10 இளைஞருக்கான விருதை வழங்கினர் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும் `கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளியும். “என் பெற்றோர்கள் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைவிட தன் குழந்தை நல்லபடியாக வாழவேண்டுமென்றே யோசித்தார்கள். எனக்குக் கிடைத்த அந்த அன்பும், நம்பிக்கையும் எல்லோருக்கும் கிடைத்தால், எல்லோரும் சாதிப்பார்கள். அந்த அன்பையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டிய கடமை என்னைப் போன்று சாதித்தவர்களுக்கு இன்னும் நிறையவே இருக்கிறது என்பதை நினைவுபடுத்தி, எங்களை உற்சாகப்படுத்துகிறது இந்த விருது. அதுவும் இந்த விருதை, திருநங்கை உரிமை பாதுகாப்பு மசோதாவை தனிநபர் மசோதாவாக மாநிலங்களவையில் கொண்டுவந்த திருச்சி சிவா ஐயாவின் கைகளில் பெறுவது சந்தோஷம்’ என உற்சாகமாய்ப் பேசினார் சம்யுக்தா. தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, “நாங்கள் பெரியாரின் வார்ப்புகள். விளிம்புநிலை மக்களுக்காகக் குரல் கொடுப்பது எங்கள் பணி. தனிநபர் மசோதாவை நிறைவேற்றுவது, நம் நாட்டில் அவ்வளவு சிரமமாக இருக்கிறது. இப்போது நிறைவேறியிருப்பதும் திருநங்கைகளின் நலன்களை முழுமையாகக் காக்கும் சட்டமில்லை. பல் இல்லாத சட்டம்தான். அது வலிமையானதாக மாறும் வரை தொடர்ந்து பணியாற்றுவோம். திருநங்கைகள் தங்களுக்கென விளையாட்டுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அவர்கள் எல்லாத் துறைகளிலும் பரிணமிக்க வேண்டும்” என்று அர்த்தபூர்வமான உரையை நிகழ்த்தினார்.

  • இசையும் நகைச்சுவையும் சேர்த்து இனிமை விருந்து படைக்கும் அலெக்ஸாண்டர் பாபுவுக்கு விருது வழங்கினார் இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன். அலெக்ஸாண்டரின் பெயர் உச்சரிக்கப்பட்டதும் எழுந்த கைத்தட்டலிலும் விசிலிலும் அரங்கம் சில நொடிகள் அதிர்ந்து அடங்கியது. “ `அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ நிகழ்ச்சி, இசையுலகின் ஜாம்பவான்களைப் பற்றிய நையாண்டி. நம் வீட்டில் எப்படி ஒவ்வொரு இசைக்கலைஞரைப் பற்றியும் எந்தவித சம்பிரதாய வார்த்தைகளுமின்றிப் பேசுவோமோ, அதைத்தான் மேடையில் நிகழ்த்திக்காட்ட வேண்டுமென நினைத்தேன். இந்தக் கலை வடிவமே, சம்பிரதாயங்களை உடைப்பதுதான். ஆனால், யாரும் அதனால் கோபப்படவில்லை, எளிதாக அதைக் கடந்தார்கள். தமிழ்ச் சமூகத்திலுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கான சான்றாகவே இதைப் பார்க்கிறேன்” என்றார். “மனிதர்களின் மனநிலையை மாற்றக்கூடிய கருவிகள் மிகக்குறைவு. அதில் முக்கியமான ஒன்று இசை. இன்னொன்று நகைச்சுவை. இவை இரண்டையும் கொண்டு, எவர் மனநிலையையும் மாற்றிவிடலாம். இவரும் சரி, லிடியனும் சரி அதில் ஜீனியஸாக இருக்கிறார்கள். நல்வழியில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெரிய இடங்களை எட்டிப்பிடிக்கக் கூடியவர்களாக இருவரையும் பார்க்கிறேன்” என வாழ்த்தினார் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து இசைக்கருவிகள் மூலம் சிறுநிகழ்ச்சி ஒன்றை நடத்திக்காட்டினார் அலெக்ஸாண்டர் பாபு.

  • நிப்பான் நிறுவனத்தின் Nippon Weatherbond Advance Paint குறித்த காணொலி ஒளிபரப்பப்பட்டது.

  • அரசுப்பள்ளிகளைத் தங்கள் ஓவியங்களால் அழகுப் பள்ளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி குழுவினருக்கு `டாப் 10 இளைஞர்கள்’ விருது கொடுக்க மேடையேறினர் டாக்டர்.சுதா சேஷையன், ஓவியர் மருது ஆகியோர். “இனி முடியாது, போதும் எனக் களைத்துப்போன நேரத்தில் வந்து சேர்ந்திருக்கும் இந்த விருது, இன்னும் ஓடச்சொல்லி எங்களைத் தூண்டுகிறது. அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்த உழைக்கும் அத்தனை ஆசிரியர்களும், அரசுப் பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும் எங்களின் இன்ஸ்பிரேஷன்கள். ஓவியரான சிவகுமார் ஐயாவும் எங்களின் மிகப்பெரும் இன்ஸ்பிரேஷன்” எனக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இர.ராஜசேகரன் சொன்னதும் நெகிழ்ந்துபோன சிவகுமார், இரு கைகளையும் கூப்பித் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். அவர்கள் வரைந்திருந்த நம்பிக்கை மனிதரான சூர்யாவின் ஓவியத்தை, சிவகுமாரிடம் கொடுக்க ஆசைப்பட, மேடையேறி அதைப் பெற்றுக்கொண்டார் சிவகுமார். பதிலுக்கு சிவகுமாரும் தான் வரைந்த ஓவியங்களின் தொகுப்பை அவர்களுக்குப் பரிசளிக்க, ஒட்டுமொத்த மேடையும் பல்லாயிர ஓவியங்களின் வண்ணங்களை அள்ளிப் பூசிக்கொண்டாற்போல் ரம்மியமாக இருந்தது. இவையெல்லாம் நடந்துகொண்டிருந்த சிறு நிமிட அவகாசத்தில், ஆனந்த விகடனுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆன்-ஸ்பாட் ஓவியம் ஒன்றை வரைந்து, விகடனின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனுக்குப் பரிசளித்தனர். “நாங்கள் செய்ய முயன்று, முடியாமல்போன ஒன்று. இன்று, இவர்கள் அதைச் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சியடைகிறது. ஓவியம் இனி துணைப்பாடம் அல்ல, முதன்மைப் பாடம்” என்றார் ஓவியர் மருது. `இவர்களின் ஓவியங்களைப் பார்க்கையில், மீண்டும் பள்ளிக்கு மாணவியாகச் செல்லவேண்டுமெனத் தோன்றுகிறது’ எனக் குறும்பாய் முடித்தார் டாக்டர்.சுதா சேஷையன்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • நம் சமூகத்தில் நீண்ட காலமாய் நிகழ்ந்துவரும் பேரவலம், மலக்குழி மரணங்கள். அதைப் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் பழனிக்குமாருக்கு `டாப் 10 இளைஞர்’ விருதை வழங்கினார் ஒளிப்பதிவாளர் இயக்குநர் கே.வி.ஆனந்த். “கடந்த 3 வருடங்களில் இந்தியா முழுவதும் நடந்த மலக்குழி மரணங்களில் தமிழகத்தில்தான் அதிக மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மொத்தம் 42 மரணங்கள். நிலவுக்கு ராக்கெட் விடுகிறோம், செவ்வாய்க் கிரகத்தில் ஆராய்ச்சி செய்கிறோம். ஆனால், நம் சக மனிதனின் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணாமல் இருப்பது நாம் அவமானப்பட வேண்டிய விஷயம். மலக்குழிக்குள் இறங்குவது என்பது சட்டத்தால் தடை செய்யப்பட்டிருக்கும் ஒன்று. ஆனாலும், பணியாளர்கள் வேறு வழியின்றி இந்தச் சமூகத்தால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். சாதியரீதியாகப் பல துன்பங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த மனிதர்களின் மரணங்களைப் புகைப்படங்கள் எடுக்கும்போது, என் மரணத்தை நான் உணர்ந்திருக்கிறேன்” என்றார் பழனிக்குமார். துயரத்தின் சாட்சியங்களாய், மலக்குழி மரணத்தால் தங்கள் வீட்டு ஆண்களை இழந்த குடும்பத்தினரும் மேடையில் இருந்தனர்.

  • `தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ டைட்டிலை வென்று, உலகையே திரும்பிப் பார்க்கவைத்த லிடியன் நாதஸ்வரத்திற்கு, `டாப் 10 இளைஞர்’ விருதினை வழங்கினார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். சில வார்த்தைகள் மட்டுமே பேசிய லிடியன், பியானோவில் அடைமழை பொழிந்துவிட்டார். `பம்பிள் பீ’ எனும் மேற்கத்திய இசைத்துணுக்கையும், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரின் இசையையும் சேர்த்து `விஸ்வராஜமான்’ என்றும் விரல்களால் நம் செவிக்கு விருந்துவைத்தார். “லிடியனை எனக்கு நான்கைந்து வயதிலிருந்தே தெரியும். அவருடைய அசுர வளர்ச்சிக்கு மிகப்பெரும் காரணம் அவரின் தந்தை. இந்தத் தருணத்தில் அவர் தந்தையும் மேடையில் இருக்க விரும்புகிறேன்” என லிடியனின் தந்தையை மேடைக்கு அழைத்தார் சந்தோஷ் நாராயணன்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்று மனதில் விழுந்த விதையை, `அரைஸ்’ எனும் விருட்சமாக வளர்த்தெடுத்த பேராசிரியர் சுஜாதாவின் ஐ.ஐ.டி குழுவுக்கு `டாப் 10 இளைஞர்கள்’ விருதினை வழங்கினார் ஆவின் நிர்வாக இயக்குநர், பால்வளத்துறை ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ். “நமக்குத் துணைபுரியும் கருவியான மூக்குக் கண்ணாடியை நாம் எப்படி இயல்பாகப் பார்க்கிறோமோ, அதேபோல் சக்கர நாற்காலிகளையும் இயல்பாகவே எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இதுபோன்ற இன்னும் சில புராஜெக்ட்கள் ஆய்வுக்கூடத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. விரைவில், அவை மக்களுக்குப் பேரளவில் பயன்படும்” என உறுதியளித்தார் சுஜாதா.

  • முதல் TNPL-ன் தொடர் நாயகன், பல பேட்ஸ்மேன்களைத் தன் யாக்கர்களால் திணறடித்துக்கொண்டிருக்கும் சேலத்து எக்ஸ்பிரஸ் பெரியசாமிக்கு `டாப் 10 இளைஞர்’ விருதினை வழங்க மேடையேறினார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின். “TNPL-ல் எப்போது தோனி விளையாடுவார்?” என ராஜ்மோகன் ஆர்வத்துடன் அஸ்வினிடம் கேட்க, “TNPL-ல் தோனி விளையாடுவாரா என்பதைவிட, TNPL போட்டிகளால் நம் தமிழகத்திலிருந்து நிறைய தோனிகள் கிடைப்பார்கள்” எனத் தன் டிரேட்மார்க் பாணியில் நறுக் பதிலளித்தார். விருதைப் பெற்றுக்கொண்ட பெரியசாமி, “அண்ணன் கைகளில் இந்த விருதினைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. TNPL-க்கு முன் நான் ஜீரோ, இப்போது நான் ஹீரோ! சேலத்திலிருந்து சென்னைக்கு ஓப்பன் டிக்கெட்டில் வருவேன். சத்துமாவு மட்டும்தான் உணவு, காலைச் சாப்பாடு பல நேரங்களில் கிடையாது. இப்போது, ஏசி கோச்சில், வந்துகொண்டிருக்கிறேன். கார்களில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்” என, தான் சாதித்த கதையை, யார்க்கர்போல் நேராக இறக்கினார். விரைவில், இந்திய அணியில் அவர் இடம்பெற வேண்டும் என்கிற தமிழ்மக்களின் ஆசையை, அவர் பெயர் பதித்த இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியைக் கொடுத்து வெளிப்படுத்தியது விகடன்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், பல தங்கங்களை வென்று அசத்திவரும் தங்கமங்கை இளவேனில் வாலறிவனுக்கு `டாப் 10 இளைஞர்கள்’ விருதினை வழங்கினார் அஸ்வின். “நம் மண்ணில், விருது வாங்குவது தனி சந்தோஷம். அதிலும் அண்ணன் கையில் அந்த விருதைப் பெறுவது டபுள் சந்தோஷம்” என்றார் இளவேனில். சாதி, தீண்டாமை, குழந்தைத் தொழிலாளர் போன்ற சமூகப் பிரச்னைகளில் பெயர்கள் எழுதப்பட்ட பலூன்களை, அவர் பீச் துப்பாக்கியில் சுட்டது கலகலப்பான நிகழ்வு.

  • பூர்வகுடி மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை முடக்கியுள்ள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆதிச்சமூகத்தின் அறக்குரல் சோபா மதனுக்கு `டாப் 10 இளைஞர்கள்’ விருதினை வழங்கினார் சி.கே.ஜானு. விருதுக்கு முன், தமிழகத்தின் வனமகள் சோபா மதனுக்கு கேரளத்தின் வனதேவதை சி.கே.ஜானு, இலைகளால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்து அலங்கரித்தார். ``காவல்துறையாலும், அரசாலும் எனக்கு நிறைய தொந்தரவுகள் வருகின்றன. இந்த விருது, இன்னும் பல மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்தும், என்னைத் தெரிந்துகொள்ள உதவும் என நம்புகிறேன்” என்றார் ஷோபா மதன்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • கடலில் நிலவும் தட்பவெப்பநிலை, புயல் எச்சரிக்கை ஆகியவற்றுடன் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மீன் விலை நிலவரம் போன்ற பயனுள்ள தகவல்களைச் சொல்லும் `கடலோசை 90.4’ பண்பலையை நடத்தும் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவுக்கு ‘டாப் 10 இளைஞர்’ விருதை, வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் ரமணனும், திரைப்பட இயக்குநர் விக்ரமனும் இணைந்து வழங்கினார்கள்.

  • சிறந்த பண்பலைத் தொகுப்பாளினிக்கான விருதினை வழங்கினர் தாடி பாலாஜியும், மோனிகாவும். விருதினைப் பெற்றுக்கொண்ட ஹலோ எஃப்.எம் டோஷிலா, தன் அம்மா, அப்பா, மகன் ஆகியோரையும் மேடையேற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். “நான் 30 ரூபாய் கொடுத்தாலே, மூன்று நாள்கள் கண்விழித்து வேலை செய்வேன். இப்போது விகடன் விருது கொடுத்திருக்கிறது, சொல்லவே வேண்டாம். இன்னும் நிறைய உழைப்பேன்” என உற்சாகம் நிரம்பப் பேசினார் டோஷிலா.

  • சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருதை `தமிழா தமிழா’ குழுவினருக்கு வழங்கினார் சி.கே.ஜானு. “இந்த விருது எங்களுக்கே பெரிய ஆச்சர்யம். இதற்கு முன் இன்னொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `நீயா நானா’ எனும் நிகழ்ச்சியின் சாயல் கொண்ட நிகழ்ச்சி இது. இதுபோன்ற சாயல் கொண்ட, ஒன்றைப்போலவே இருக்கும் நிகழ்ச்சியை, எளிதாக ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அப்படி ஒதுக்கிவிடாமல், கவனித்து எங்களுக்கு விருது கொடுத்திருக்கும் விகடனுக்கு நன்றி” என்றனர் `தமிழா தமிழா’ டீம்.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!
  • சிறந்த பண்பலைத் தொகுப்பாளருக்கான விருதை வழங்கினர் சாக்‌ஷி, அபிநயா மற்றும் நாஞ்சில் சம்பத். “2020 காலண்டர் தயார் செய்யும்போது, இந்த தனுசு ராசிக்காரர்களுக்கு மட்டும் ஏன் அப்படியொரு வேலையைப் பார்த்தார்கள் எனத் தெரியவில்லை. வருடத்தின் முதல் நாளே தனுசு - சிரமம் என்றும், இரண்டாவது நாள் தனுசு - கஷ்டம் என்றும் ராசிபலன் போட்டிருந்தார்கள். இந்த வருடம் தனுசு ராசிக்காரர்களுக்குச் சிறப்பாக அமையாது எனும் கருத்தை, பொய்யாக்கியிருக்கிறது விகடன்” என மதுரைக்காரர்களின் லந்துக்கு மேடையில் சாம்பிள் காட்டினார் பரத்.

  • சிறந்த பண்பலைக்கான விருதை நாஞ்சில் சம்பத், ஸ்ருதிகா மற்றும் சுகாவிடமிருந்து பெற்றுக்கொண்டனர் சூரியன் எஃப்.எம் குழுவினர். “விகடன் போன்ற நம்பிக்கையான, மரியாதைக்குரிய நிறுவனத்திடமிருந்து விருது பெறுவது மகிழ்ச்சி. பொழுதுபோக்கைத் தாண்டி, சமூக அக்கறை சார்ந்த விஷயங்களிலும் சூரியன் எஃப்.எம் ஆர்வத்துடன் பணியாற்றிவருகிறது. இந்த நேரத்தில் இந்த விருது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது” என்றனர் சூரியன் எஃப்.எம் குழுவினர்.

  • சிறந்த நெடுந்தொடருக்கான விருதை, `ரோஜா’ நெடுந்தொடருக்கு வழங்கினர் சின்னத்திரை நட்சத்திரங்களான நீலிமா ராணி, அன்வர் மற்றும் சமீரா. “இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” எனச் சுருக்கமாய் முடித்தார் விருதைப் பெற்றுக்கொண்ட ரோஜா தொடரின் க்ரியேட்டிவ் ஹெட். இன்னொரு சிறந்த நெடுந்தொடருக்கான விருதை `நாயகி’ நெடுந்தொடருக்கு வழங்கினர், ஆர்த்தி மற்றும் கணேஷ்கர். விருதினைப் பெற `நாயகி’ பட்டாளமே மேடையேறியது. “இந்த விருதுகள் இயக்குநர் குமரன் சாருக்குத்தான் போய்ச் சேரணும். எங்களிடமிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்தது அவர்தான்” என்றார் `நாயகி’யின் நாயகி வித்யா ப்ரதீப். “விகடன் நேர்மையான ஒரு நிறுவனம். தரம் இல்லையென்றால் தள்ளிப்போ எனச் சொல்லும் நிறுவனம். நாங்கள் முயற்சி செய்து, இந்த இடத்திற்கு வந்து நிற்கிறோம். அடுத்த முறையும் இதை வெல்ல, கூட்டுமுயற்சியோடு உழைப்போம்” என உறுதியளித்தது `நாயகி’ குழு.

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி நம்பிக்கை விருதுகள் விழா!

சாதனைகளை மதித்துத் திறமைகளை அங்கீகரித்து சிறப்புக்குச் சிறப்பு சேர்த்தது ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா மேடை.