தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஆயிரம் பெண்களின் வெற்றிக்கு ஆரம்பம் இது!

ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருதுகள்' 2019
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருதுகள்' 2019

ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருதுகள்' 2019

இலக்கிய உலகின் மதிப்புமிக்க எழுத்தாளர்கள், சமூக மாற்றத்துக்காகப் பங்காற்றிய டாப் 10 மனிதர்கள், நாளைய சமூகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் டாப் 10 இளைஞர்கள் என மகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டும் ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருதுகள்' வழங்கும் விழா, ஜனவரி 24 அன்று சென்னை வர்த்தக மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் சங்கமித்த இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலரும் விருதுகள் பெற்றது பெருமைப்பட வேண்டிய தருணங்களாக அமைந்தன. இந்த நிகழ்ச்சியைத் தொகுப்பாளர் ராஜ்மோகனுடன் இணைந்து நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார் தொகுப்பாளர் அனிதா சம்பத்.

ஆயிரம் பெண்களின் வெற்றிக்கு ஆரம்பம் இது!
  • ‘சிங்கப் பெண்ணே’ பாடல் ஒலிக்க, ரசிகர்களின் பலத்த கரவொலிகளுக்கு மத்தியில் கம்பீரமாக மேடை ஏறினார், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய வீரத்தமிழச்சி இளவேனில் வாலறிவன். நம்பிக்கை இளைஞருக்கான விருதை அவருக்கு வழங்கினார் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். “உலகக் கோப்பையில் தங்கம் வாங்கினாலும், நமது மண்ணில் நின்று விகடன் விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது” என்று நெகிழ்ந்தார் இளவேனில்.

  • கவிஞர் யுகபாரதியிடம் இருந்து சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்புக்கான விருதை ‘கறுப்பு உடம்பு’ நூலுக்காகப் பெற்றார் அனுராதா ஆனந்த். தொகுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கிலக் கவிதை ஒன்றை மேடையிலேயே மொழிபெயர்த்து ஆச்சர்யப்படுத்தினார் அனுராதா.

  • இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநரும் சந்திரயான் 2 திட்டத்தில் முக்கியப் பங்காற்றியவருமான வனிதா முத்தையா, இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநரான மயில்சாமி அண்ணாதுரையிடம் இருந்து `டாப் 10 மனித'ருக்கான விருதைப் பெற்றார். அவர் விருது பெறும்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசியக்கொடி அசைத்து வனிதாவைப் பெருமைப்படுத்தினர். “வனிதா முத்தையாவின் வெற்றி ஆயிரக்கணக்கான பெண்களின் வெற்றிக்கு ஆரம்பமாக இருக்கும்” என்று மயில்சாமி அண்ணாதுரை புகழ்ந்தார்.

ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருதுகள்' 2019
ஆனந்த விகடன் ‘நம்பிக்கை விருதுகள்' 2019
  • ஸ்விகி நிறுவனத்தின் முதன்மைத் தொழில்நுட்பத்திட்ட மேலாளராக பணியாற்றுவதோடு, `Toutestdio’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் சம்யுக்தா விஜயன், நம்பிக்கை இளைஞருக்கான விருதை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளியிடம் இருந்து பெற்றார். “எந்த சூழலிலும் என்னை ஒதுக்கி வைக்காமல், முழுவதுமாக ஏற்றுக்கொண்ட என் பெற்றோரே இத்தனை வெற்றிக்கும் அடித்தளம். அதை மற்ற திருநங்கைகளின் பெற்றோர்களும் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை விகடன் மேடையில் பதிவு செய்தார் சம்யுக்தா.

  • நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் பற்றி விளக்கும் ‘தீக்கொன்றை மலரும் பருவம்’ நாவலுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விருதை இயக்குநர் தங்கர் பச்சான் மற்றும் நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் சங்கரநாராயணனிடம் இருந்து பெற்றார் எழுத்தாளர் லதா அருணாச்சலம். “ஆப்பிரிக்க கலாசாரங்களும், அவர்களின் வாழ்வியல் முறையும் தமிழில் அதிக அளவு மொழிபெயர்க்கப்பட வேண்டும்” என்று இலக்கியவாதிகள் நிறைந்த சபையில் கோரிக்கை வைத்தார் லதா அருணாச்சலம்.

  • கீழடியின் தொன்மையை வெளிக்கொண்டு வரப் பணியாற்றிய தொல்லியல் ஆர்வலர் வை.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆகியோருக்கு டாப் 10 மனிதர்களுக்கான விருதுகளை தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், நீதியரசர் மகாதேவன் ஆகியோர் வழங்கினர். வழக்கறிஞர் கனிமொழி மதி, “வரலாற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலான செயல்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

  • வழக்கறிஞர் செல்வகோமதிக்கு விருது வழங்கினார் பேச்சாளர் பாரதி பாஸ்கர். “கிராமங்களில் பெண்களும் பெண் குழந்தைகளும் குறைவான கூலிக்குப் பணியாற்றுகின்றனர்; அவர்களுக்காக எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் செல்வகோமதி.

  • பூர்வகுடி மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை முடக்கியுள்ள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஆதிச்சமூகத்தின் அறக்குரல் சோபா மதனுக்கு, நம்பிக்கை இளைஞர் விருதை வழங்கினார் ‘கேரளத்தின் வனதேவதை’ சி.கே.ஜானு. விருதுக்கு முன், சோபா மதனுக்கு இலைகளால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்தார் சி.கே.ஜானு.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கருவியை உருவாக்க, `அரைஸ்’ எனும் அமைப்பை வளர்த்தெடுத்த பேராசிரியர் சுஜாதாவின் ஐ.ஐ.டி குழுவுக்கு, ஆவின் நிர்வாக இயக்குநரும் பால்வளத்துறை ஆணையருமான வள்ளலார் ஐ.ஏ.எஸ் விருதை வழங்கினார். “ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் மாணவர் திட்டமாகத்தான் தொடங்கியது `அரைஸ்’ சக்கர நாற்காலியின் பயணம். இது முறைப்படி மக்களைச் சென்று சேர வேண்டும்” என்று ஆசையை முன்வைத்தனர் ஐ.ஐ.டி குழுவினர்.

நடிகர் தாடி பாலாஜியும், `வானிலை அறிக்கை' மோனிகாவும் இணைந்து சிறந்த பண்பலைத் தொகுப்பாளினிக்கான விருதை, டோஷிலாக்கு வழங்கினர். விருதைப் பெற்றுக் கொண்ட டோஷிலா, தன் குடும்பத்துக்கும் தன் உழைப்பை அங்கீகரித்த விகடனுக்கும் நன்றி தெரிவித்தார்.

சென்னையில் ஆட்டோவில் கடத்தப் பட்ட பெண்ணைக் காப்பாற்றுவதற்காகப் போராடி தன் உயிரை இழந்த ஏகேஷின் குடும்பத்தினரும், ஏகேஷுடன் இணைந்து துணிந்து செயல்பட்ட நண்பர்களும் மேடையேற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இப்படி பல நெகிழ்வான நிறைவான தருணங் களோடும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளோடும் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

ஆயிரம் பெண்களின் வெற்றிக்கு ஆரம்பம் இது!