மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கல்யாணம் to காதுகுத்து... மக்களின் மனம் கவர்ந்த அறந்தாங்கி மங்களம்!

ஷபீ முகமது, ஷேக் அப்துல்லா,  கனி முகமது
பிரீமியம் ஸ்டோரி
News
ஷபீ முகமது, ஷேக் அப்துல்லா, கனி முகமது

நேட்டிவ் பிராண்ட் - 15

தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் திருமண விழாவுக்கு, மணமகன் வீட்டார், மணமக்களுக்கு பட்டுவேஷ்டி, பட்டுச்சேலை எடுப்பதை வழக்கமாக வைத் திருக்கின்றனர். ஊரைச் சுற்றிலும், நூறு கடைகள் இருந்தாலும், கைராசி கடையைத்தான் தேர்வு செய்கிறார்கள். அறந்தாங்கியைப் பொறுத்தவரை, மக்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது மங்களம் ஸ்டோர்ஸ். பெரியகடை வீதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பட்டுவரும் மங்களம் ஸ்டோர் உரிமையாளர் கனி முகமதுவுடன் பேசினோம்.

“எங்களுக்கு பூர்வீகம் அறந்தாங்கியேதான். விவசாயக் குடும்பம். அப்பா, சாகுல் ஹமீது. என்கூட பொறந்தவங்க மூணு பேரு. அப்பா சிரமப்பட்டுத்தான், எங்களை எல்லாம் வளர்த்தாரு. அப்பாவுக்கு ஜவுளித் துறையில ரொம்பவே ஆர்வம். சிறுவணிகரா ஆகணும்னு 1948-ல அறந்தாங்கி பாப்பா பஜார்ல வாடகைக் கடையில மொத மொதல்ல மங்களம் ஸ்டோர்ஸ் ஆரம்பிச்சாரு. அரசு டீலராகச் செயல்பட்டார். அரசு தயாரிக்கும் கைத்தறித் துணிகளை நேரடியாகக் கொள்முதல் செஞ்சு விற்பனை செய்கிற வேலை. வியாபாரம் ரொம்ப நல்லாவே போயிக்கிட்டு இருந்துச்சு. நல்ல வருமானமும் கிடைச்சது. பணத்தை சேமிச்சு, தனியா சொந்த இடத்தில் ஒரு கடையை ஏற்படுத்தணும்னு நெனச்சாரு. அதற்காகவே கடுமையாவும் உழைச்சாரு.

ஷபீ முகமது, ஷேக் அப்துல்லா,  கனி முகமது
ஷபீ முகமது, ஷேக் அப்துல்லா, கனி முகமது

1967-ல் 500 சதுர அடியில் ‘மங்களம் ஸ்டோர்ஸ்’-க்குப் புதுவடிவம் கொடுத்தாரு. இந்த முறை அவர் எண்ணத்தின்படி, சொந்த இடத்தில் 10 தொழிலாளர்களுடன் ஆரம்பிச்சாரு. கைத்தறியோட, மில் ஜவுளி ரகங்களையும் சேர்த்து விற்பனை செய்தார். வாடிக்கை யாளர்களுக்கு எப்பவுமே நல்ல தரமான துணிகளை மட்டும்தான் கொடுக்கணும்ங்கிறதுல, அப்பா ரொம்பவே தெளிவாக இருந்தாரு.

கட்டாவு, அர்வின்ட், பாரத விஜயா மில்ன்னு அப்பவே தேடிப் பிடித்து மில் ஜவுளிகளை மட்டும்தான் வாங்கி விற்பனை செஞ்சாரு. சிறு லாபம் கிடைச்சாலும் போதும், நல்ல தரமான பொருள் மக்களுக்குக் கொடுக்கணும்னு மட்டும் நினைப்பாரு. அப்ப எல்லாம், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்ன்னு பண்டிகைக் காலங்கள்ல மட்டும்தான், வியாபாரம் நல்லா இருக்கும். மற்ற நேரங்கள்ல வியாபாரம் குறைவாகத்தான் இருக்கும். கல்யாணம், காதுகுத்துன்னு முகூர்த்த நாள்கள்ல கொஞ்சம் வியாபாரம் இருக்கும். இந்த வியாபாரத்தைக் கொஞ்சம் அதிகபடுத்தணும்னு நெனச்சாரு. அப்பாவுக்கு அந்த நேரத்துல நண்பர்கள் அதிகம். அதுவும், நாணயமான நண்பர்கள். அவர்கள் கடைக்கு ஒரு கடிதம் அனுப்புவாங்க. அவங்க ளோட கடிதம் கிடைச்சதும், உடனே தம்பதிக்குத் தேவையான பட்டு ரகங்களைக்கூட கிரெடிட்ல கொடுத்து அனுப்பிடுவாரு. விழாவுல மொய் பிடிச்சு, நமக்குப் பணத்தைக் கொண்டுவந்து கொடுப்பாங்க.

80-கள்ல எல்லாம் அப்பா பாம்பே டையிங் மில்லோட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் ஆனாரு. அர்விந்த் மில்லோட சிறப்பு விற்பனை யாளர், விமல் மில்லோட ஆத்தரஸைடு விற்பனை யாளர்னு அவரைத் தேடி பெரிய நிறுவனங்கள் வந்துச்சு. சரக்கு வாடிக்கையாளர் கண்ணுல தெளிவாகத் தெரியணும். சேல்ஸ்மேன்கள் வாடிக்கையாளர்கள்கிட்ட ஜவுளிகளை இலகுவா எடுத்துக் கொடுக்கணும். புது ரகம் வந்த உடனே, வாடிக்கையாளர்களின் பார்வைக்கு முதலில் எடுத்து வைக்கணும். இப்படி, சில விஷயங்கள் ஜவுளித்துறையில் இருக்கு. இதைத் தொடர்ந்து, நாங்க கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கோம்.

அண்ணன் தம்பிங்க நாங்க மூணு பேரு. மூணு பேரும் இப்ப ஒண்ணா சேர்ந்து இந்தக் கடையை நிர்வகிச்சிக்கிட்டு இருக்கோம். 1982-ல மூத்த அண்ணன் ஷேக் அப்துல்லா தொழிலுக்குள்ள வந்தாரு. 83-ல ரெண்டாவது அண்ணன் ஷபீ முகமது வந்தாரு. 86-ல நான் கல்லூரி முடிச்சிட்டு உள்ளே வந்தேன். நான் உள்ளே வந்த நேரம் போட்டியா, ஒரு பெரிய கடையைக் கொண்டு வந்தாங்க. குறைவான விலையில ஜவுளி ரகங்களைக் கொடுத்தாங்க. ஆனா, அந்தப் போட்டியில எங்க கடை வளரத்தான் செஞ்சது. புதுசா வந்தவங்களால நாங்க தந்த தரத்தைத் தர முடியலை. கொஞ்ச நாள்லயே அந்தக் கடையை மூட, அதை நாங்க வாங்கினோம்.

கல்யாணம் to காதுகுத்து... மக்களின் மனம் கவர்ந்த அறந்தாங்கி மங்களம்!

தரமான பொருளை மட்டும் தான் கொள்முதல் செய்யணும். கடன் கிடைக்குதேன்னு கொள் முதல் செய்யக் கூடாது. அவசியத் தின் தேவை கருதிதான் கொள் முதல் செய்யணும். பிராண்டட் மில்களில் மட்டும்தான் ஜவுளி வாங்கணும். இப்படி எல்லா விஷயத்திலும் அப்பா ரொம்ப தெளிவாக இருப்பாரு. அவரோட கொள்கைகளைத்தான் நாங்க இப்பவும் கடைப்பிடிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால வெற்றியும் கண்டிருக்கோம். அதற்கப்புறம் 10 வருஷம் கழிச்சு மீண்டும் ஒரு போட்டியாளர் வந்தாரு. அவரும் பெரிய ஜவுளிக்கடையை ஆரம்பிச்சாரு. குறைவான விலைன்னு பெரிசா விளம்பரம் செஞ்சாரு. நாங்க விலையைக் குறைக்கவே இல்லை. ஆனா, வழக்கம் போல் அவங்களாலயும் ரொம்ப நாள் நீடிக்க முடியலை. மக்கள்கிட்ட மீண்டும் ஓர் அங்கீகாரம் எங்களுக்குக் கிடைச்சது.

எங்க கடையில் இருக்கும் சரக்குகள் 90% நாங்க காசு கொடுத்து வாங்கினதுதான். தேவை அறிந்து வாங்கி விற்பனை செய்றதால, எங்களுக்குப் பெரிய சறுக்கல் வரலை. இப்ப டிரெண்ட் மாறிக்கிட்டே வருது. எங்க பிள்ளைங்களும் தொழிலுக் குள்ள வந்திட்டாங்க. தற்போதைய தலைமுறையினர் என்ன மாதிரியான ரகங்களை விரும்புறாங்கன்னு ஆராஞ்சு வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க.

முதலாளியாக இருந்தாலும், சீஸன் நேரத்துல பேக்கிங் கவுன்டர், பில்லிங் கவுன் டர்ன்னு எல்லாப் பிரிவிலும் போய் தொழிலாளியா வேலை செய்யணும். அதை நாங்க மூணு பேருமே செய்வோம். அப்படி போனாதான், கஸ்டமர்ஸ் என்ன விரும்புறாங்க, எது டிரெண்டிங்கில இருக்கு, எதை எடுத்துக்கிட்டு வந்து மார்க் கெட்டிங் பண்ணலாம்ங்கிற ஐடியா நமக்குக் கிடைக்கும். எம்.டி ரூம்லயே உட்கார்ந்து இருந்தா, வளர்ச்சி வரவே வராது.

சுற்றுவட்டாரத்தில 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு. இங்க ஒரு பிள்ளை வயசுக்கு வந்திருச்சின்னா, மாமன் தட்டுச் சேலை வாங்கறதுக்கு, கல்யாணம், காதுகுத்துக்குன்னு அத்தனை நல்ல விஷயத்துக்கும் எங்க கடையைத்தான் தேடி வருவாங்க. பல கஸ்டமர்ஸ், ‘என் கல்யாணத்துக்கு இங்க பட்டு எடுத்தோம். என் மகன் கல்யாணத்துக்கும் இங்கதான் பட்டு எடுத்தேன். இப்ப, என் பேரன் கல்யாணத்துக்கு பட்டு எடுக்க வந்திருக்கோம்’னு சொல்லி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்படி சொல்லும் போது, மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.

கல்யாணம் to காதுகுத்து... மக்களின் மனம் கவர்ந்த அறந்தாங்கி மங்களம்!

200 தொழிலாளிங்க எங்ககிட்ட வேலை பார்க்கிறாங்க. தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்கிறதோட அவங்களோட பிள்ளைங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் சிறு தொகையைப் படிப்பு செலவுக்காகக் கொடுக்கிறோம். கல்லூரி படிக்கும் மாணவர்கள் இருந்தா மூணு வருஷம் கல்விக் கட்டணத்தை நாங்களே கட்டுகிறோம். மருத்துவ உதவிகளையும் செஞ்சு தர்றோம்.

குறிப்பிட்ட வயசு வந்தவுடனே பெற்றோர், பிள்ளைகள் கிட்ட பொறுப்புகளைக் கொடுத்திடணும். அப்படி சரியான நேரத்தில் எங்க அப்பா, எங்ககிட்ட பொறுப்புகளைக் கொடுத்திட்டு ஓய்வு எடுத்துக்கிட்டாரு. அவர் எங்ககிட்ட கொடுத்த மங்களம் ஸ்டோர்ஸை இன்னைக்கு பெரிய அளவில் விரிவுபடுத்தியிருக்கோம். அவர் 500 சதுர அடியில் ஆரம்பிச்ச கடையை இன்றைக்கு 15,000 சதுர அடிக்கு கொண்டுவந்திருக்கோம். அறந்தாங்கியைத் தாண்டி 2006-ல் பட்டுக்கோட்டையில் மங்களம் ஸ்டோர்ஸ் கிளையைக் கொண்டுபோனோம். அறந்தாங்கி மாதிரியே அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைச்சுக்கிட்டு இருக்கு. இப்ப அந்தக் கிளையை பெரிசா விரிவுபடுத்திக்கிட்டு இருக்கோம்.

மங்களம் ஸ்டோர்ஸை இப்ப எங்க பிள்ளைங்க கையில கொடுத்திருக்கோம். மூன்றாவது தலைமுறையா பிள்ளைங்க ஆர்வமா பார்க்கத் தொடங்கியிருக்காங்க. பிள்ளைங்க ஆர்வத்தால, அறந்தாங்கியிலேயே இப்ப ஆண்கள், பெண் களுக்குன்னு தனித்தனியா பிரமாண்ட ஷோரூம்கள் அமைக்கிற பணிகள் நடந்துகிட்டு இருக்கு. எங்களோட அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழகம் முழுவதும் பல கிளைகளை விதைக்கணும்” என்று பேசி முடித்தார் கனி முகமது.