தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆத்தங்குடி டைல்ஸ்!

ஆத்தங்குடி டைல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்தங்குடி டைல்ஸ்

எங்க ஏரியா ஸ்பெஷல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இருக்கும் அழகிய ஊர்தான் ஆத்தங்குடி. இந்தக் கிராமத்துக்குள் நுழைந்ததுமே, சாலையின் இருபுறங்களிலும் சிறியதும் பெரியதுமாக எங்கும் டைல்ஸ் கடைகளாகவே காட்சி அளிக்கிறது. உலக புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ்களை, இங்குள்ள மக்கள் குடிசைத் தொழிலாகவே செய்து வருகின்றனர்.

இயந்திரங்கள் ஏதுமின்றி முழுக்க, முழுக்க மனிதர்களின் உழைப்பால், தயாராவது ஆத்தங்குடி டைல்ஸின் தனிச்சிறப்பு. செட்டி நாடு அரண்மைகளின் அழகுக்கே அழகு சேர்த்துக்கொண்டிருப்பதும் ஆத்தங்குடி டைல்ஸ்கள்தான். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா கர்நாடகா என வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது ஆத்தங்குடி டைல்ஸ்.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆத்தங்குடி டைல்ஸ்!

ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பாளர் அலெக்ஸிடம் பேசினோம். “100 வருஷத்துக்கு முன்னாலயே எங்க முன்னோர்கள் இந்தத் தொழிலை ஆரம்பிச்சிருக்காங்க. ஆரம்பத்துல எங்க ஊர்ல இருந்த மூன்று பேர் இந்தத் தொழிலை ஆரம்பிச்சு, குடும்பமா செஞ்சுகிட்டு இருந்திருக்காங்க. இன்னைக்கு 40 பேர் வரையிலும் இந்தத் தொழில்ல இருக்காங்க. 500 குடும்பங்கள் வரையிலும் இந்தத் தொழிலை நம்பி பிழைச்சுக்கிட்டு இருக்காங்க. நான் நான்காவது தலைமுறையா இந்தத் தொழில்ல இருக்கேன்.

சிமென்ட் இல்லாத காலத்துலயே சுண்ணாம்புக் காரைகளை வச்சு டைல்ஸைத் தயாரிச்சி இருக்காங்க. ஆரம்பத்துல ஆத்தங் குடி டைல்ஸைக் கைக்கல்லு, கண்ணாடி பூக்கள்னுதான் சொல்லியிருக்காங்க. இப்போ, கொஞ்ச வருஷமாதான் ஆத்தங்குடி டைல்ஸ்ன்னு பிராண்ட்டட் ஆகியிருக்கு.

இந்தியாவில் தாயாரிக்கப்படும் டைல்ஸ் களிலேயே ஆத்தங்குடி டைல்ஸ்கள் மட்டும் தான் தண்ணீருக்குள் ஊற வைத்து நிழலில் காய வச்சு எடுக்கும் டைல்ஸ். எங்க டைல்ஸை வீட்டுக்குள் பதித்தால் போதும். வெளியில் குளிரோ, வெயிலோ நிலவினாலும், வீட்டுக்குள் சமமான வெப்ப நிலை இருக்கும்.

ஆத்தங்குடி டைல்ஸைப் பதித்து தரையில் படுத்தால், கால்வலி, மூட்டு வலி வராது. ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் எல்லாம் வராது. ஆத்தங்குடி டைல்ஸ் உடல்நலத்துக்கு ரொம்பவே நல்லதுன்னு மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அதனாலதான் மக்கள் தேடி வந்து வாங்குறாங்க. காரைக்குடி செட்டிநாடு வீடுகள், பேலஸ்கள்ல மட்டுமல்லாம, குஜராத், கொல்கத்தா, இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்கள்ல உள்ள பல பேலஸ்கள்லயும் ஆத்தங்குடி டைல்ஸ் மின்னிக்கிட்டு இருக்கு. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பிக்கிட்டு இருக்கோம்.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆத்தங்குடி டைல்ஸ்!

ஏரோ-பிளைன் டிசைன், ரத்தன கம்பளம், சொக்கட்டான், வட்டத்தாமரை, ஜமுக்காள கொட்டடி, இளங்கா, பாம்பே கொடி... இப்போ லேட்டஸ்ட்டா மல்லிகை மொட்டு, மொட்டப் புறான்னு... 500-க்கும் மேற்பட்ட டிசைன்கள் வரைக்கும் எங்க கிட்ட இருக்கு. ஆரம்பத்துல 6-க்கு 6 இன்ச் அளவுலதான் தயாரிச்சிருக்காங்க. அப்புறம் 8-க்கு 8 இன்ச் சைஸ் ஆச்சு. இப்போ கொஞ்ச வருஷமா 10-க்கு 10 இன்ச் நல்லா மூவிங் ஆகிக்கிட்டு இருக்கு. 100 சதுர அடிக்கு பதிக்க 10 இன்ச் சைஸ் டைல்ஸ் மொத்தமா 144 டைல்ஸ் தேவைப்படும். 1 சதுர அடிக்கு குறைஞ்சபட்சம் ரூ.50 செல வாகும். டிசைனைப் பொறுத்து விலை கொஞ்சம் கூடுதலாகும்.

ஆத்தங்குடியில, ஒரே இடத்தில் மட்டும் ஏன் இத்தனை தொழிற்கூடங்கள், கடைகள் இருக்குன்னு சிலர் கேட்பாங்க. இங்குள்ள ஓடை மண்தான் அதுக்கு முக்கியமான காரணம். இதுக்காகதான் எங்க முன்னோர் கள் இந்த இடத்தைத் தேர்வு செஞ்சிருக்காங்க. அப்பவும் சரி, இப்பவும் சரி, இங்குள்ள நகரத் தார்கள் எங்களோட தொழில் வளர்ச்சிக்கு ரொம்பவே ஒத்து ழைப்பு தந்துகிட்டு இருக்காங்க.

மற்ற டைல்ஸ்களுக்கும் நம்ம டைல்ஸ்க்கும் ரொம்பவே வித்தி யாசம் இருக்கு. மத்த டைல்ஸ், செராமிக் டைல்ஸ், சைனா கிளேன்னு சொல்வாங்க. அதுல பிளாஸ்டிக் கோட்டிங் தந்திருப் பாங்க. தண்ணீரை உறிஞ்சும் தன்மை அதுல பெருசா இருக்காது. தண்ணியைக் கொட்டினா, காஞ்ச துணியில தொடைக்கிற வரைக்கும் அந்த தண்ணி டைல்ஸ்ல படிஞ்சி கிடக்கும். ஆத்தங்குடி டைல்ஸ் சிமென்ட், மணல் கலவை மெட்டீரியல். தண்ணியை உறிஞ்சுடும். ஈரக்காலோட நடந்துபோனாலும், 10அடி தூரம் போய் திரும்ப பார்த்தா, தண்ணி அப்படியே காஞ்சிக்கிட்டே வந்திடும்.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆத்தங்குடி டைல்ஸ்!

20, 30 வருஷம் வேலை பார்க் கிற அனுபவசாலிகள் எல்லாம் இருக்காங்க. தினமும் காலையில 8 மணியில இருந்து சாயந்தரம் 4 மணி வரைக்கும்தான் வேலை. தினக்கூலிதான் கொடுக்கிறோம். டைல்ஸ்க்கு இவ்வளவு ரூபாய்ன்னு கொடுத்தா, அதிகமா கூட தயாரிச்சிக் கொடுப்பாங்க. ஆனா, கொஞ்சமா தயாரிச்சாலும், குவாலிட்டியா தயாரிக் கணும்ங்கிறதுல நாங்க ரொம்ப தெளிவா இருப்போம். புகழ் பெற்ற எங்க டைல்ஸ்க்கு புவிசார் குறியீடு கிடைத்தால், எங்க தொழில் இன்னும் வளர்ச்சி அடையும்” என்றார்.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆத்தங்குடி டைல்ஸ்!

டைல்ஸ் தயாரிப்புப் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடராஜனிடம் பேசினோம்.

“முதலாளியா இருந்தாலும், நாங்களும் களத்தில் இறங்கி வேலை செய்வோம். குடும்பமா, தலைமுறை, தலைமுறையா இந்தத் தொழிலைப் பார்க்கிறோம்.

ஆத்தங்குடி டைல்ஸைப் பொறுத்தவரை, சிமென்ட், மணல், வொயிட் சிமென்ட், ஆக்ஸைடு பவுடர், தண்ணீர் எல்லாத்தையும் கலந்துதான் இந்த டைல்ஸ்களைத் தயாரிக்கிறோம். குஜராத்ல இருந்து டிசைன் ஆஸ் பித்தளையில் செஞ்சு வந்திடும். சைஸ் வாரியா கண்ணாடி கிளாஸ்களையும் எடுத்து வச்சுக்குவோம். சதுரக் கண்ணாடியில, டிசைன் ஆஸை வைப்போம். அந்த ஆஸ் கம்பிகளுக்கு இடையில், தேவையான வண்ணங்களை ஊத்தி, ஆரம்பத்துல உலர்ந்த சிமென்ட் கலவையை கொஞ்சமும், தேவையான மணலும் சிமென்டும் கலந்த ஈரமான கலவையை நிரப்புவோம். அதை அப்படியே எடுத்து ஒருநாள் வெளியில் காய வச்சு, ரெண்டு முதல் மூணு நாள் தண்ணீரில் ஊறவைப்போம். அதை எடுத்து சுமார் 7 நாள்கள் வரையிலும் நிழலில் காய வைப்போம். தயாரித்த 10-வது நாளில் டைல்ஸ் விற்பனைக்குப் போகும். கைகள்லயே செய்யறதால, ஒரு நாளைக்கு அதிக பட்சமா 3 பேர் சேர்ந்து 200 டைல்ஸ் வரைக்கும் தயாரிக்க முடியும். பயன்படுத்த, பயன்படுத்த எங்க டைல்ஸ் பளபளப் பாகவே இருக்கும். அதனாலதான் எங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருந்துகிட்டு இருக்கு” என்றார். புதிதாக வீடு கட்டுபவர்கள் ஆத்தங்குடி டைல்ஸைப் பதிக்கலாமே!

நீங்களும் எழுதலாம்..!

வாசகர்களே... உங்கள் பகுதியிலிருக்கும் புகழ்பெற்ற சந்தை / மார்க்கெட், வியாபார ஸ்தலம், வெற்றிபெற்ற சிறுதொழில் முனைவோர், மாற்றி யோசித்து வெற்றிபெற்ற தொழில்முனைவோர் என்று நீங்கள் நன்கு அறிந்த / கேள்விப்பட்ட விஷயம் குறித்து சுவராஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் (கேமரா / செல்போன்) அனுப்புங்கள். வீடியோவுடன் அனுப்பினால் இன்னும் சிறப்பு. விகடன் இதழ்/டிஜிட்டல் / சோஷியல் மீடியா தளங்களில் பதிவிடப்படும் கட்டுரை / வீடியோ களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: navdesk@vikatan.com