Published:Updated:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், வங்கிகளின் வாராக்கடன் வசூல் பின்னடைவைச் சந்திக்கும்!

இந்தத் தீர்ப்பின் காரணமாக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு திருப்பிச் செலுத்துவது குறித்த அக்கறை குறைந்துள்ளது. இனி கடனைத் திருப்பிச்செலுத்துவது மேலும் தாமதப்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், வங்கிகளின் வாராக்கடன் வசூல் பின்னடைவைச் சந்திக்கும்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், வங்கிகளின் வாராக்கடன் வசூல் பின்னடைவைச் சந்திக்கும்!

வங்கித் துறையைப் பெரிதும் பாதிக்கும் காரணியாக வாராக்கடன் பிரச்னை இருக்கிறது. அதைச் சமாளிக்க முடியாமல் வங்கிகளை ஒன்றோடொன்று இணைப்பது, கடனாளிகளின் சொத்துகளை விற்று பணம் திரட்டுவது எனப் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள். எனினும், வாராக்கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு குதிரைக்கொம்பாக இருக்கிறது. இந்தச் சூழலில், தொழில் நிறுவனங்களின் வாராக்கடனை வசூலிப்பதற்கு பாதகமான தீர்ப்பு ஒன்றை அண்மையில் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 

2018 பிப்ரவரி 12-ம் தேதி, ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், வங்கிகளில் 2,000 கோடி ரூபாய்க்குமேல் வங்கிக்கடன் வாங்கியுள்ள நிறுவனங்கள், 180 நாள்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து முடிவெடுக்காவிட்டால், அதை `வாராக்கடன் மோசடி' என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், வங்கிக்கடன் பெற்றவர்கள் வட்டியைத் திரும்பச் செலுத்துவதில் ஒருநாள் தாமதித்தாலும், பணமோசடி செய்தவராகக் கருதி அவர்களின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்ட கருத்துகளை எதிர்த்து எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தன. ஒருநாள் வட்டி கட்டாமல்போனாலும் வாராக்கடன் பட்டியலில் எங்களது நிறுவனங்களைச் சேர்ப்பது பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசின்மூலம் எங்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மானியங்கள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. எனவே, எங்களுடைய எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் பெரும்பாதிப்பைச் சந்திக்கின்றன என, தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கியிருந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் `2018 பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையைப் பார்க்கும்போது, ரிசர்வ் வங்கி தன் அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாக தெரிகிறது. இந்தச் சுற்றறிக்கை, ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகவும், இதை அனுப்பும் முன் அரசிடம் அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரிகிறது. மேலும், வாராக்கடன் பிரச்னைகளில் தன்னிச்சையாகப் பொது வழிமுறையை வகுக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்குக் கிடையாது. சட்டத்துக்குப் புறம்பாக இருக்கும் அந்தச் சுற்றறிக்கையே செல்லாது’ எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வாராக்கடனை வசூலிக்கும் வங்கிகளுக்கு பெரும் பின்னடைவைத் தரும் எனக் கருதப்படுகிறது. 

இந்தத் தீர்ப்பின் விளைவு எப்படியிருக்கும், சாதக பாதகங்கள் என்னவென்று, நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம். 

``இந்தத் தீர்ப்பின் காரணமாக 2,000 கோடி

ரூபாய்க்குமேல் வங்கிக்கடன் பெற்றவர்களுக்கு, திருப்பிச் செலுத்துவது குறித்த அக்கறை குறைந்துள்ளது. இனி கடனைத் திருப்பிச் செலுத்துவது மேலும் தாமதமாகும். வாராக்கடன் தொகை ரூ.2,000 கோடிக்குமேல் உள்ள நிறுவனங்களின் மீது அனைத்து வங்கிகளும் நடவடிக்கை எடுத்துவரும் சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதைத் தொய்வடையச்செய்யும். வாராக்கடனை வசூலிப்பதில் வங்கிகளுக்குக் கூடுதல் சிக்கலையும் தாமதத்தையும் ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக வங்கிகளின் வருமானம் பாதிக்கப்படும். வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கும் அதைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் குறைந்துபோகக்கூடும்.

தற்போது இந்தத் தீர்ப்பால், சர்வதேச அளவிலான மூடிஸ் ரேட்டிங்கில், இந்திய வங்கிகளின் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. இது, வங்கிகளின் பொருளாதார நிலையையும் வளர்ச்சியையும் கண்டிப்பாகப் பாதிக்கும். வங்கி வரன்முறைச்சட்டம் 35AA  பிரிவை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று, வங்கிகளை உச்ச நீதிமன்றம் குறை கூறியுள்ளது. அதாவது சட்டத்திலுள்ள ஓட்டையைக் குறிப்பிட்டு வசூலிப்பதற்குத் தடை ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவறான நடைமுறை.

ரிசர்வ் வங்கிக்கும் நிதித்துறைக்கும் ஏற்கெனவே மனக்கசப்புகள் இருக்கும் சூழலில், கடன் பெறுவோருக்கு சாதகமாகவும், வங்கிகளுக்கு பாதகமாகவும் இந்தத் தீர்ப்பு இருக்கக்கூடும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதற்குத் தீர்வாக, 35AA சட்டப்பிரிவை மாற்றியமைத்து, ரிசர்வ் வங்கிக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கும்படி செய்வதே, வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்க உதவும். அதுவே நம் தேச நலனுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தது" என்றார்.