`யார் வீட்டுக்கடன் வாங்கலாம் / வாங்கக்கூடாது?' ஒரு சுய பரிசோதனை #HomeLoan

நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வீட்டுக்கடன் விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டுவதுதான்.
`கோட்டை கட்டாவிட்டாலும், சொந்தமாக ஒரு சின்ன வீட்டையாவது கட்டிவிட வேண்டும்' என்பது நம் பெரும்பாலானவர்களின் கனவு, லட்சியம் எல்லாமே. ஒரே படுக்கையறை கொண்ட வீடாக இருந்தாலும் பரவாயில்லை, அது நமக்கு சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பது நம் பெரும்பாலானவர்களின் மனங்களிலும் கனன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை.
இந்தக் கனவு நிறைவேற முன்பைவிட இப்போது அதிக சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. வங்கிக் கடன், அதுவும் வீட்டுக் கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் 6.95 சதவிகிதத்திலிருந்து கூட சில வங்கிகள் கடன் தருகின்றன.
வட்டி குறைவாக இருக்கிறது, மற்ற கடன்களைக் காட்டிலும் வீட்டுக் கடனுக்குச் சில சலுகைகள் உண்டு என்பதற்காகவெல்லாம் வீட்டுக்கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பது பெரும்பாலான நிதி ஆலோசகர்களின் அட்வைஸாக இருக்கிறது. மேலும், வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்குவதற்கு முன்பாக பயனாளர்கள் சில விஷயங்களை யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.
முதலில் தேர்வு செய்ய வேண்டியது வீடா அல்லது வீட்டுக்கடனா?

நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, வீட்டுக்கடன் விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டுவதுதான். ஒருவருக்கு வீட்டுக்கடன் என்பது, அவர் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சொந்த வீடு வாங்கலாம் அல்லது கட்டலாம் என முடிவு செய்த பிறகு, முதலில் வங்கியை அணுகி கிடைக்கக்கூடிய கடன் அளவைத் தெரிந்துகொள்வதுதான் நல்லது. அதைத் தெரிந்துகொண்ட பின்னர், அதற்கு ஏற்றாற்போல வீட்டைக் கட்டலாமா அல்லது அதைவிட குறைவான மதிப்பில் வீட்டை வாங்கிக்கொள்ளலாமா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டும்.
பிற இ.எம்.ஐ போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் 35% பணம் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும்.- நிதி ஆலோசகர்கள்.
``பொதுவாக, 25 - 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல 70 மடங்கு கிடைக்கும் என்றும் 45 வயதுக்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல 50 - 60 மடங்கு வரை கிடைக்கும் என்றும் 45 வயதுக்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால், நம் ஆண்டு வருமானத்தைப் போல 4 - 5 மடங்கு கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நாம் வாங்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற இ.எம்.ஐ போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் 35 சதவிகிதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும். இதையெல்லால் வங்கியை அணுகித் தெரிந்துகொள்ளாமல் வீடு கட்ட அல்லது வாங்க நீங்களாகவே முடிவெடுப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும்" என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.
நிலையான வருமானம் இருக்கிறதா?!

இந்தக் கேள்வியை வீட்டுக்கடன் பெற முயற்சி செய்யும் அனைவரும் கேட்டுக்கொள்வது அவசியம். ஏனெனில், தற்போது நாம் அனைவருமே கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலானவர்கள் வேலையிழந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல பிரச்னைகள் இருக்கும்போது, இந்த நேரத்தில் இருக்கும் கடன்களைக் குறைக்கத்தான் பார்க்க வேண்டுமே தவிர, மேலும் மேலும் கடன் சுமையை அதிகப்படுத்திக்கொண்டே போகக் கூடாது. நிலையான வேலை மற்றும் வருமானம் இல்லாதவர்கள், நிச்சயமாக வீட்டுக்கடன் மூலம் வீடு கட்டும் கனவை, சற்றே தள்ளிப்போடுவது நல்லது.
திட்டமிடுதலின் அவசியம்!

வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களில் பலர், அதை வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், ஆசை வார்த்தை காட்டும் பேச்சுகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதம், அபராதத் தொகை போன்றவற்றைச் சரிவரத் தெரிந்துகொள்ளாமல் வாங்கிவிடுகிறார்கள். இறுதியில் வாங்கிய கடனை இரு மடங்காகத் திருப்பித்தரும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
எனவே, எதிர்காலத்தில் எதிர்பாராமல் திடீர் செலவுகள் எற்பட்டாலும், உங்களால் சமாளிக்கக்கூடிய வகையிலிருக்கும் வீட்டுக் கடன் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.
வீட்டுக் கடனுக்கான நிதி நிறுவனத்தைத் தேர்வு செய்தற்கு முன்னர் வட்டி விகிதம், செயலாக்கக் கட்டணம், கடன் ஒப்புதல் காலம், தாமத இ.எம்.ஐ-க்கான அபராதம், கடன் விதிமுறைகள், முன்கூட்டியே கடனை அடைப்பதற்கான கட்டணம் போன்ற அம்சங்களை ஆராய்ந்துவிட்டு விண்ணப்பிப்பது நல்லது.
கடன் மதிப்பீடு!

உங்களுக்கு வங்கிக் கடன் ஒப்புதல் அளிப்பதில் `சிபில்’ (CIBIL) ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பீடுக்கு மிக முக்கியப் பங்கிருக்கிறது. எனவே, வீட்டுக் கடன் கேட்டு வங்கியை அணுகுவதற்கு முன், உங்கள் சிபில் ஸ்கோர் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். தனிநபர் கடன், பிற மாதக் கடன் தவணைகள், தாமதம் மற்றும் தவறிய தவணைகள் உட்பட அனைத்துத் தகவல்களும் சிபில் ஸ்கோர் மூலம் வங்கிக்குத் தெரிந்துவிடும். சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதில் 700-க்கும் மேலிருந்தால், சுலபமாகக் கடன் கிடைத்துவிடும்; வட்டியும் குறைவாக இருக்கும்.
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது பெரும்பாலும் வங்கிக் கிளையாகத்தான் இருக்கும். இருப்பினும், உங்களுடைய கடன் விண்ணப்பத்துக்கான ஒப்புதல் எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கவனிப்பது முக்கியம். உங்கள் வங்கிக் கிளையே கடன் வழங்கிவிடுமென்றால், விரைவாகக் கடன் கிடைத்துவிடும்.
வட்டி எவ்வளவு?

வீட்டுக் கடனில் நிலையான (ஃபிக்ஸட்) வட்டி, மாறுபடும் (ஃப்ளோட்டிங்) வட்டி என இருவிதமான வட்டி விகிதம் இருக்கிறது. `நிலையான வட்டி’ என்பது வட்டி ஒரே விகிதத்தில் இருக்கும். ஆனால், `ஃப்ளோட்டிங் வட்டி’ என்பது கடன் சந்தை வட்டி விகித மாற்றத்துக்கேற்ப ஏறும் அல்லது இறங்கும். பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நிலை நிலவினால், ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வுசெய்வது புத்திசாலித்தனம்.
கடன் தொகை குறையக் குறைய கணக்கிடும் முறை; ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடும் முறை எனக் கடனுக்கான வட்டி இரண்டு முறைகளில் கணக்கிடப்படும். கடன் தொகை குறையக் குறைய கணக்கிடும் முறையில் வட்டிக்குச் செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில் எந்த வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இ.எம்.ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வுசெய்யுங்கள். தற்போது ஆர்.பி.ஐ ரெப்போ ரேட் விகிதங்களைக் குறைக்கும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் எனக் கட்டளையிட்டிருக்கிறது. இதை முறையாகச் செய்யும் வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.
பலவிதங்களில் யோசித்து முடிவெடுங்கள்!
நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, ``கடன் மூலம் வீடு வாங்குவதற்கு முன்னர் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி... `இப்போது நான் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்குவது அவசியமா?’ என்பது. உங்களைச் சரியாக எடைபோடும் தன்மை உங்களைத் தவிர, வேறு யாருக்கும் இல்லை. உங்கள் நண்பர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டிவிட்டார், உங்கள் உறவினர்கள் வீடு வாங்கியிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் வீடு வாங்கக் கூடாது.

`சொந்த வீடு இருந்தால்தான் திருமணம் நடக்கும்’ என்று நினைத்துக்கொண்டு பலர் வீடு வாங்குகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு, மனைவி ஓரிடத்தில் வேலை பார்ப்பார்; கணவன் இன்னோரிடத்தில் பணியாற்றுவார். அதனால் அவர்கள் அந்த வீட்டில் வாழ இயலாத சூழ்நிலை ஏற்படும். கடன் வாங்கி வீட்டைக் கட்டிவிட்டோ, வாங்கிவிட்டோ, அதில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட மிகப்பெரிய தவறு வேறெதுவுமில்லை.
வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் 2.2 சதவிகிதமாகத்தான் இருக்கும். அதைக்கொண்டு முழுக் கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவது சிரமம். எனவே, பலவிதங்களிலும் யோசித்து, சரியான பதில் கிடைத்தால் மட்டுமே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க வேண்டும். வீடு என்பது நீண்டகாலத் தேவை. அதை அவசரகதியில் வாங்கினால் சரியாக இருக்காது" என்றார்.
ஆக, வீடு வாங்க நினைப்பவர்கள் மேற்சொன்ன விஷயங்களை நன்கு அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்!