Published:Updated:

நம் வங்கிக் கணக்கிலிருந்து கொள்ளையடிக்கும் மோசடிக் கும்பல்!

மோசடி
பிரீமியம் ஸ்டோரி
மோசடி

மோசடி

நம் வங்கிக் கணக்கிலிருந்து கொள்ளையடிக்கும் மோசடிக் கும்பல்!

மோசடி

Published:Updated:
மோசடி
பிரீமியம் ஸ்டோரி
மோசடி

ஒரு கிராமத்து விவசாயி அவர். விவசாயம் தெரிந்த அளவுக்கு அவருக்குத் தொழில் நுட்பம் குறித்தோ, அதைக்கொண்டு நிகழ்த்தப்படும் மோசடிகள் குறித்தோ தெரியாது. அவரது மொபைலுக்கு ஓர் அழைப்பு வந்தது. அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து வெரிஃபிகேஷனுக்காக அழைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவரது ஏ.டி.எம் கார்டு எண்ணையும், சி.வி.வி எண்ணையும் கேட்டார்கள். வங்கியி லிருந்துதானே கேட்கிறார்கள் என்கிற நம்பிக்கையில் அப்பாவியான அவரும் கொடுத்தார். அடுத்த சில நொடிகளில் அவரது மொபைலுக்கு வந்திருக்கும் ஓ.டி.பி நம்பரைக் கேட்டார்கள். அதையும் அவர் சொன்ன அடுத்த சில விநாடிகளில் அவர் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.25,000 எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் தகவல் வந்தது. அதைப் பார்த்ததும் அவர் ஆடிப் போனார். பிறகு, விசாரித்தபோது தான் அவருடைய பணம் கொள்ளையடிக்கப்பட்டதைத் தெரிந்துகொண்டு, மிகவும் வருத்தப்பட்டார். நமக்கு வரும் ஓ.டி.பி நம்பரையோ, நம்முடைய டெபிட் கார்டு பாஸ்வேர்டையோ யார் கேட்டாலும் சொல்லக் கூடாது என்கிற விஷயத்தை ரூ.25,000 இழந்து, கற்றுக்கொண்டிருக்கிறார் அந்த அப்பாவி விவசாயி.

நம் வங்கிக் கணக்கிலிருந்து
கொள்ளையடிக்கும் மோசடிக் கும்பல்!

‘‘நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பல நூதனங் களைக் கொண்டு திருடுவதற்கு பெரும் கும்பலே பல நகரங்களில் இப்போது வேலை செய்துகொண்டிருக்கிறது. விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதே அவர்களிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி’’ என்கிறார் சாஃப்ட்வேர் அனலிஸ்ட் சர்வேஷ். இந்த மோசடிக் கும்பல் எவ்விதம் செயல்படுகிறது, இவர் களிடமிருந்து நம் பணத்தைக் காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பன குறித்து அவரிடம் கேட்டோம். விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

டேட்டாக்கள் முக்கியம்...

“இன்றைய தொழில்நுட்பம் மிகுந்த காலகட்டத்தில் நமது டேட்டாக்கள் ஓர் சந்தைப் பொருளாக இருக்கின்றன. பல வழிகளில் நமது டேட்டாக்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. டேட்டா பேஸ் வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து அதைப் பெற்றுக்கொள்ள இங்கே பல மோசடிக் கும்பல்கள் இருக்கின்றன. அந்த டேட்டாக்களை அடிப்படை யாக வைத்துதான் நமது பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் திருடர்கள்.

நமது டேட்டாக்கள் எப்படி திருடப்படுகின்றன?

ஆதார் அட்டை, பான் கார்டு, மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட நமது டேட்டாக்களை எடுக்க நிறைய சாத்தியங்கள் இருக் கின்றன. ஷாப்பிங் வெப்சைட்டு களில் பொருள்கள் வாங்கும் போது நாம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகப் பணம் செலுத்துவோம். அப்போது நமது கார்டு விவரங்களை ஹேக்கர்களால் எடுக்க முடியும்.

டெபிட் அல்லது கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்யும்போதும் நமது டேட்டாக்கள் சர்வரில் பதிவாகின்றன. பொது இடங் களில், வணிக வளாகங்களில் குலுக்கல் பரிசு என ஓர் கூப்பனை வழங்குவர். அதில் நமது வீட்டு முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட வற்றைப் பூர்த்தி செய்யக் கேட்பார்கள். அதில் இருந்தும் நமது டேட்டாக்கள் எடுக்கப்படுகின்றன. வேலைக்காக நாம் விண்ணப்பிக்கும்போது நமது ரெஸ்யூம்களில் இருந்தும் நமது டேட்டாக்கள் எடுக்கப்படு கின்றன.

சர்வேஷ்
சர்வேஷ்

டேட்டாக்கள் விற்பனைக்கு...

மேலே பார்த்த சம்பவத்தைப் போல, பல வழிகளில் நமக்கே தெரியாமல் நமது தகவல்கள் திருடப்படுகின்றன. அதிக டேட் டாக்களைக் கொண்டு டேட்டா பேஸ் தயார் செய்து வைத்திருப் பவர்கள் அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கின்றனர். மோசடிக் கும்பலுக்கு இந்த டேட்டாக்கள்தான் மூலதனம் என்பதால், அவற்றைப் பணம் தந்து வாங்கிக்கொள்கின்றன.

பேச்சுத்திறமையை வைத்தும் நமது டேட்டாக்களை வாங்கி விடுவார்கள். நமக்கு விழிப்புணர்வு இல்லாதபோது கார்டு நம்பரைக் கேட்டு, அது விசா, மாஸ்டர், ரூ பே என எந்த வகை கார்டு எனக் கண்டறிந்துவிடுகிறார்கள். ஓ.டி.பி கூட வேறு விதமாகக் கூறி வாங்கிவிடுவார்கள். இந்த மோசடிக்கென்றே தனியே கால் சென்டர் இயங்குகிறது. கிடைத்த டேட்டாக்களைக் கொண்டு நமது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை பணமாகவோ, ஷாப்பிங் வெப் சைட்டுகளில் பொருளாகவோ வாங்கிக்கொள்வார்கள். நமக்குத் தெரியாமலேயே இது நடந்து முடிந்து விடுகிறது.

லேட்டஸ்ட் தொழில்நுட்பத் தின் மூலம் நமது சிம் கார்டையே அவர்கள் கைப்பற்றவும் செய் வார்கள். இதை ‘சிம் ஸ்லாப் ஸ்கேம்’ என்று சொல்வோம். வங்கிப் பணப் பரிவர்த்தனை களுக்கு ஆதாரமாக இருப்பது நாம் அளிக்கும் மொபைல் எண்ணில் வரும் ஓ.டி.பி-தான். அவர்கள் நமது சிம் கார்டை கைப் பற்றிய பிறகு, நமது கணக்கில் உள்ள பணத்தை சுலபமாக எடுத்து விட முடியும்.

விழிப்புணர்வு அவசியம்...

குற்றங்களிலேயே மிக மோச மானது சைபர் குற்றங்கள்தான். ஏனென்றால், அதை எங்கிருந்து வேண்டும் என்றாலும் மேற் கொள்ளலாம். இந்த மோசடியைப் பொறுத்தவரை, ஒன்றிரண்டு பேரைக் கைது செய்தாலும், அடுத்து வந்துகொண்டுதான் இருப்பார்கள். இது ஓர் ரகசிய நெட்வொர்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. விழிப்போடு இருந்து பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதுதான் அவசியம்.

சில வேளையில், கார்டு குறித்த தகவல்களை வைத்து ஓ.டி.பி இல்லாமல்கூட பணத்தை எடுத்துவிடலாம். இதன் காரணமாக இப்போது 5,000-க்கும் அதிகமாகப் பணம் எடுக்க வேண்டும் என்றால் ஓ.டி.பி இருந்தால் மட்டுமே எடுக்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஆர்.பி.ஐ. எனவே, எக்காரணத்தைக் கொண்டும் நமது கிரெடிட்/ டெபிட் கார்டு எண் மற்றும் சி.வி.வி எண்ணை எதிலும் பதிவு செய்து வைக்காதீர்கள். ஏ.டி.எம் கார்டைப் புகைப்படம்கூட எடுத்து வைக்காதீர்கள். நிறைய ஆப்களில் நாம் கேலரிக்கான அக்சஸ் தந்திருப்போம். அதன்மூலம் புகைப்படம் வழியாகக்கூட தகவல் திருட்டு நடக்கும்.

நம் வங்கிக் கணக்கிலிருந்து
கொள்ளையடிக்கும் மோசடிக் கும்பல்!

விசா கார்டில் சர்வதேச பணப்பரிவர்த்தனை (International payment transaction) என்கிற வசதியை ‘Enable’ செய்து வைத்திருந்தால், வெளிநாடுகளில் இருந்துகூட உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கலாம் என்பதால், அதை ‘Disable’ செய்து வைப்பது நல்லது. எந்த ஓர் லிங்க் வந்தாலும் சற்றுக் கூர்ந்து கவனித்த பின்னரே, அதை க்ளிக் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரைக் கொண்ட URL லிங்க் வரும். அதைப் பார்த்தால், அதன் கூடவே வேறு ஏதேனும் சில எழுத்துகள் பின்னொட்டாக இருக்கும். நாம் அந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் நமது மொபைலில் உள்ள தரவுகள் திருடப்படும். வங்கியில் தந்துள்ள மெயில் ஐ.டி.யை வேறு யாருக்கும் தராதீர்கள்’’ என்றார் சர்வேஷ்.

கவனமாக இல்லையெனில், பெரும் பணத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பது நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism