அடமானக் கடன் என்பது உங்களின் சொத்துகளின் மீது வழங்கப்படும் ஒரு கடனாகும். அது மனை அல்லது மனை சார்ந்த கட்டடம் போன்றவற்றின்மீது வழங்கப்படுவது. சில நேரங்களில் தொழில் எந்திரங்களின் மீதும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெரும்பாலான அடமானக் கடன், மனை அல்லது மனை சார்ந்த கட்டடம் மீது வழங்கப்படுகிறது. உங்களின் வருமானம், சொத்தின் மதிப்பு (Loan to Value) மற்றும் சொத்தின் சட்டச்சிக்கல் ஏதும் இல்லாமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

70% வரை கடன் கிடைக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சொத்தின் மதிப்பில் 40 - 70% வரை அடமானக் கடன் வழங்கப்படுகிறது. சொத்து மதிப்பைப் பொறுத்தவரை, அது இருக்கும் இடம் காலி மனையா, மனை சார்ந்த கட்டடமா, கட்டடத்தின் உறுதித்தன்மை, சுய உபயோகத்துக்கான கட்டடமா அல்லது வாடகைக்கு விட்டுள்ளதா, வணிகக் கட்டடம் அல்லது குடியிருப்புக் கட்டடமா ஆகியவற்றைப் பொறுத்து சொத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. சுய உபயோகத்துக்கான குடியிருப்புக் கட்டடமாக இருக்கும்பட்சத்தில் வீட்டின் மதிப்பு சற்று அதிகமாகவும், கடன் தொகையும் அதற்கேற்றவாறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
லிஸ்ட் ஆஃப் டாக்குமென்ட்
சொத்தின் மதிப்பை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மதிப்பீட்டாளர் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் நிர்ணயம் செய்வார். அதேபோல், சொத்து ஆவணங்களை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் சட்ட வல்லுநரோ, அவர்களால் நியமிக்கப்பட்ட சட்ட வல்லுநரோ ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பார். இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே கடன் தொகையை நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்தகைய காரணங்களால் இவ்வகை கடன்களைப் பரிசீலனை செய்வதற்கு வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. தங்களுக்குரிய கடன் தொகையைக் கொடுத்த பின் உங்கள் சொத்து அசல் ஆவணங்களை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அவர்களின் பாதுகாப்பில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். அவ்வாறு அவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளும்போது எல்.ஓ.டி எனப்படும் `லிஸ்ட் ஆஃப் டாக்குமென்ட்’ எனப்படும் கடிதத்தை அவர்களிடமிருந்து நாம் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே கூறியபடி, வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமிருந்து எந்த விதமான கடன்கள் வாங்கினாலும் கடன் வழங்கல் கடிதம், மாதாந்தரத் தவணை அட்டவணை மற்றும் கடன் ஒப்பந்தத்தின் நகல் ஆகியவற்றைக் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். கூடவே அடமானக் கடனில் இந்த எல்.ஓ.டி என்ற கடிதத்தையும் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆவணத்தில்தான் எந்தெந்த சொத்து ஆவணங்களை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளோம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
பெரும்பாலான வங்கிகளும் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் தாங்கள் அளிக்கும் சொத்து ஆவணங்களின் விவரங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதால், அந்தப் பத்திரத்திலேயே இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்தப் பத்திரத்தின் நகலை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்; கடனை மொத்தமாக முடித்து சொத்து ஆவணங்களைத் திரும்ப வாங்கும்போது இந்த ஆவணத்துடன் சரிபார்த்து அனைத்துச் சொத்து ஆவணங்களையும் திருப்பித் தருகிறார்களா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மாறுபடும் சொத்து மதிப்பு
அடமானக் கடனில் பெரும்பாலும் சொத்தின் மதிப்பில்தான் வேறுபாடுகள் வரும். உதாரணமாக, நாம் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பை ரூ.1 கோடி என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அதே சொத்தின் மதிப்பை வங்கி மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்யும்போது ரூ.60 - ரூ.70 லட்சம் வரை கணக்கிடுவார்கள். அப்போது நாம் வங்கி அதிகாரிகளிடம் உங்கள் மதிப்பீடு தவறானது என்று வாதிடக் கூடாது. காரணம், ஒரு சொத்தை மூன்று மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்தால் மூன்று விதமான மதிப்பீட்டுத் தொகையை வழங்குவார்கள்.

அது மட்டுமல்ல, ஒரே தெருவில் ஒரே மாதிரியான ஒரே அளவான இரண்டு வீடுகளுக்கு இரண்டு விதமான சொத்து மதிப்பு வர வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு கட்டடத்தின் எதிரில் டாஸ்மாக் கடையோ, சுடுகாடு இருக்கும்பட்சத்தில் அந்தக் கட்டடத்தின் மதிப்பு சற்றே குறையக்கூடும். ஒரு கட்டடத்தில் வாகன நிறுத்தும் வசதி இல்லாமை, தண்ணீர் வசதி இல்லாமல் இருக்கும்பட்சத்தில், அந்த சொத்தின் மதிப்பு குறையக்கூடும். இவ்விதமான அடமானக் கடன்களுக்கு எந்தவிதமான வரிச் சலுகைகளும் கிடையாது. ஆனால், அடமானக் கடன் எடுத்து அதில் தொழில் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும்பட்சத்தில் அந்த அடமானக் கடன் வட்டி தொகையை நீங்கள் தொழில் செய்யும் நிறுவனத்தின் செலவுத் தொகையாக காண்பிக்கலாம். இதைப் பற்றி உங்கள் ஆடிட்டரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
முன்கூட்டியே கடனைத் திரும்பக் கட்டினால்?
அடமானக் கடனை, கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துக்குள் கடனை முடிக்க முற்பட்டால் முன்கூட்டி திருப்பிச் செலுத்தும் கட்டணமாக (Foreclosure Charges), கடன் நிலுவைத் தொகையில் 3 - 5% வசூலிக்கப்படும்.

அடமானக் கடனை எவ்விதமான உபயோகத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதிலும் பெரும்பாலான அடமானக் கடன்கள் தொழில் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே தரப்படுகின்றன. நீங்கள் என்ன பயன்பாட்டுக்காக இந்த அடமானக் கடன் வாங்குகிறீர்கள் என்று கடன் தரும் சமயத்தில் வங்கிக்கு உத்தரவாதக் கடிதம் தர வேண்டும். ஆறு மாதத்துக்குப் பிறகு அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு, நீங்கள் வாங்கிய கடனை உத்தரவாதக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பயன்பாட்டுக்காகச் செலவு செய்திருக்கிறீர்களா என்பதற்கு வங்கி அதிகாரி ஆதாரம் கேட்கக்கூடும். அவ்வாறு நீங்கள் வாங்கிய கடனை உத்தரவாதம் கடிதத்தில் சொன்ன பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தவில்லை எனில், நீங்கள் வாங்கிய கடனை, திரும்பச் செலுத்தும் காலத்துக்கு முன்பாக உடனடியாக வாங்கிய மொத்தக்கடனையும் திரும்பச் செலுத்துமாறு கூற வங்கிக்கு அதிகாரம் உண்டு.
- வாங்குவோம்