Published:Updated:

``இதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கக் கூடாது!” - வங்கிகளை எச்சரிக்கும் ஆர்.பி.ஐ

ஏ.டி.எம்.களில் பணம் வராததற்குக் கட்டணம் விதித்தது ஒருபக்கமென்றால், வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பேலன்ஸ் பார்த்தவர்களுக்கும் சில வங்கிகள், கட்டணம் விதித்திருக்கின்றன.

ATM
ATM

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க நாம் டெபிட் கார்டினை செருகி, பின்நம்பர், எடுக்க வேண்டிய தொகை என எல்லாவற்றையும் சரியாகப் பதிவுசெய்தபின், ‘இந்த ஏ.டி.எம்-ல் பணம் தீர்ந்துவிட்டது’ என்று வரும். அல்லது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணம் வராமல் போகும்.

Cash
Cash

இப்படி நடக்கும் தவறுகள் நம்மை எரிச்சலடையச் செய்வது ஒருபக்கமிருக்க, தவறான பரிமாற்றங்களுக்கும் கட்டணம் விதித்திருக்கின்றன சில வங்கிகள். இதைக் கண்டுபிடித்த சில வாடிக்கையாளர்கள், தகுந்த ஆதாரத்துடன் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப, ‘இப்படிச் செய்வது தவறு; இனிமேல் இதுபோன்றவற்றுக்குக் கட்டணம் எதுவும் விதிக்கக்கூடாது’ என எல்லா வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஏ.டி.எம்.களில் பணம் வராததற்குக் கட்டணம் விதித்தது ஒருபக்கமென்றால், வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பேலன்ஸ் பார்த்தவர்களுக்கும் சில வங்கிகள், கட்டணம் விதித்திருக்கின்றன. இன்னும் சில வங்கிகள், செக்புக் வேண்டும் என்று ஆன்லைன்மூலம் விண்ணப்பம் செய்தவர்களுக்கும் கட்டணம் விதித்திருக்கின்றன. இதற்கெல்லாம் எந்தக் கட்டணத்தையும் விதிக்காமல் இலவசமாகத் தரவேண்டும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே சொல்லியிருந்ததும், அதைச் சில வங்கிகள் மீறியிருப்பது கொடுமையான விஷயம்.

ATM
ATM

இதேபோல, ஏ.டி.எம் மூலம் வருமான வரி கட்டுவதையும், ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும் எந்தக் கட்டணமும் கிடையாது என மத்திய ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒரு மாதத்துக்கு ஐந்து முறை எந்தக் கட்டணமின்றி ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணம் எடுக்கலாம். இப்படி எடுக்கும்போது ஏ.டி.எம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு ஏற்பட்டு, பணம் வராமல் போனால், அதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஒரு மாதத்தில் எத்தனைமுறை ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கிறோம், இதற்கு வங்கிகள் எவ்வளவு பணம் கட்டணமாக நம்மிடமிருந்து வாங்குகிறது என்பதை ஆன்லைன் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் மூலமாகவோ பார்த்துத் தெரிந்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், நம்முடைய பணம் நம் கண்ணுக்குத் தெரியாமலே காணாமல் போய்க்கொண்டிருக்கும் என்பது நிச்சயம்!