ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து புத்தகம் வாசிப்பது, நாளிதழ் படிப்பது, ஓடிடி, டிஷ் டிவி, மொபைல் பில் என மாதாந்தர கட்டணம் செலுத்த வேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கும்.
ஒருவேளை செலுத்தாமல் விட்டுவிட்டால் அந்த சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதனால், `ஆட்டோ டெபிட்' மூலமாக சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக ஒவ்வொரு மாதமும் ஆட்டோமேட்டிக்காக பணம் எடுப்பதற்கு நாம் அனுமதி கொடுத்திருப்போம்.

ஆனால், வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆட்டோ டெபிட் முறையில் சிக்கல் ஏற்படக்கூடும். ஏனெனில், வங்கிகள் மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக ஆர்.பி.ஐ வழங்கியிருந்த காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
புதிய விதிமுறைகள்!
``ஒரு சேவை முடிவடையப்போகிறது என்றால், அதற்கு ஐந்து நாள்கள் முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்ப வேண்டும். அது, இ-மெயில் அல்லது மெசேஜ் என ஏதாவது ஒரு வடிவத்தில் இருக்க வேண்டும். அந்த நோட்டிஃபிகேஷன் மூலம் வாடிக்கையாளர் அனுமதி வழங்கும்பட்சத்தில்தான் அந்த பரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த வேண்டும். இந்த அனுமதி ரூ.5,000-க்கு கீழான பரிவர்த்தனைக்குதான். ஒருவேளை ரூ.5000-க்கு மேல் பரிவர்த்தனை இருக்கும் பட்சத்தில், ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) சேவை பெறும் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். அவர் அதற்கு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில்தான் அந்தப் பரிவர்த்தனை முழுமையடைய வேண்டும்" என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

காலக்கெடு முடிவடைகிறது!
2019-ம் ஆண்டு, வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை முறைகளை நெறிப்படுத்த அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது ரிசர்வ் வங்கி. அதில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பேமென்ட்டுகளுக்கு வங்கிகள் அனைத்தும் `Additional Factor Authentication' அங்கீகாரத்தை 2021-ம் ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்திருந்தது.
ஆனால், ரிசர்வ் வங்கியின் இந்தக் கூடுதல் ஒப்புதலுக்கு ஏற்ப சில வங்கிகள் தொழில்நுட்பத்தை உயர்த்தவில்லை. வங்கிகள் இந்த மாற்றத்தைச் செய்யாததால் கார்டு நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாது என அத்துறை வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதனால். இதற்கான கால வரையறையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கியிருந்தது ஆர்.பி.ஐ.
தற்போது அந்த கால அவகாசம் முடிவடையும் நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை வங்கிகள் மற்றும் கார்டு நிறுவனங்கள் உருவாக்கவில்லை எனும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சாரக் கட்டணம், வாட்டர் போன்ற இதர பயன்பாட்டு பில்கள், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மாதிரியான ஓ.டி.டி இயங்குதள கட்டணங்கள் மற்றும் ஊடக சந்தா கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்த வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆட்டோ டெபிட் ஆப்ஷனைப் பயன்படுத்த முடியாது.
யாருக்கு பாதிப்பு?

பிரம்ஃபோர்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் டெக்னிக்கல் டைரக்டர் ஶ்ரீராமிடம் இது குறித்து பேசியபோது, ``நெட்பேங்கிங் முறையில் ஒவ்வொரு மாதமும் சேவைகளைப் புதுப்பித்துக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் புதிய விதிமுறைகளால் எந்தவொரு பிரச்னையும் இல்லை. அதே போல, தொழில்நுட்பத்தைப் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதைத் தாண்டி, வேறெந்த பிரச்னையும் வங்கிகளுக்குக் கிடையாது. ஆனால், இந்த ஆட்டோடெபிட் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் பணத்தைப் பெற்று வந்த நிறுவனங்கள் புதிய விதிமுறைகளால் பாதிப்படையக் கூடும்.
பொதுவாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் மாதிரியான ஓடிடி வலைதளங்கள் `சப்ஸ்கிரிப்ஷன்’ மெத்தெடுகளில் இயங்கக்கூடியவை. `ஆட்டோ டெபிட்' ஆப்ஷன்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு இடை நிறுத்தமில்லா சேவையை இது மாதிரியான வலைதளங்கள் வழங்கி வருகின்றன. இனி இந்த ஆப்ஷன்கள் இல்லாமல் போகும்போது, ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் அந்தந்த வலைதளங்களுக்கு வந்து, கார்டு விவரங்களை முழுமையாக உள்ளிட்டு, அந்த வலைதளங்கள் வழங்கும் சேவைகளைப் பெற வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சேவைகளைப் பெற வேண்டும் என வாடிக்கையாளர்கள் நினைக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு மாதமும் தாமாகப் பணம் வந்துகொண்டிருக்கும் பட்சத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தற்போது வாடிக்கையாளர்கள் அனுமதி தேவை எனும்போது. அந்த சேவை மீது அதிருப்தியாக இருந்த வாடிக்கையாளர்கள் அதை வேண்டாம் என்று சொல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. `இந்த சேவையை எப்படி நிறுத்துவது என நினைத்துக் கொண்டிருந்தேன்' என்னும் மனநிலையில் இருப்பவர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இதனால் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.
சீராக வருமானம் வந்துகொண்டிருக்கும் சூழலில் ஒரு வாடிக்கையாளர் விலகினால், ஏன் அந்த வாடிக்கையாளர் விலகினார் என்னும் காரணத்தைத் தேடி, அதைச் சரி செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை அவருக்கு பிடிக்கவில்லை நிச்சயம் வரமாட்டார் எனத் தெரிந்துவிட்டால், அவருக்குப் பதிலாக புதிதாக ஒரு வாடிக்கையாளரைத் தேட வேண்டும். ஆட்டோ டெபிட்டில் மாதம் குறைந்தபட்சம் இவ்வளவு வருமானம் நிச்சயம் என்னும் மனநிலையில் இருப்பார்கள். ஆனால், இனி நிரந்தர வருமானத்தை உருவாக்குதில் சிக்கல் ஏற்படும். ஓடிடி சேவையை ஒரு மாதத்துக்குப் பிறகு, புதுப்பித்துக்கொள்கிறேன் என நினைத்தால்கூட அந்த ஒரு மாத வருமானம் அவர்களுக்கு குறையும்" என்றார் தெளிவாக.