Published:Updated:

வாராக்கடன் பிரச்னை... இந்திய வங்கிகளின் பெரும் சோகம்! என்னதான் தீர்வு?

வாராக்கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாராக்கடன்

B A N K N P A

கடந்த 25 வருடங்களாக இந்திய வங்கித் துறையின் செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருபவர்் பிரபல பத்திரிகையாளர் தாமல் பந்தோபாத்யாயா. இவரது இதழியல் செயல்பாட்டுக்கென 2017-ம் ஆண்டுக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றவர். வங்கித்துறை, நிதிப் பொருளாதாரம் குறித்து பல ஆங்கில இதழ்களில் தொடர்ந்து எழுதிவரும் இவர், பிரபல முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஆலோசக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த புத்தகம் `பேண்டிமோனியம் – தி கிரேட் இண்டியன் பேங்கிங் ட்ராஜெடி (Pandemonium – The Great Indian Banking Tragedy)’ ஆகும்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

வங்கித் துறையின் செயல்பாடு குறித்து இதற்குமேல் விரிவாக ஒருவரால் எழுத முடியுமா என்கிற அளவுக்கு வங்கி சார்ந்த பல விஷயங்களை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் தாமல். ஆறு பிரிவுகளைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம், இந்திய வங்கித் துறையைக் கொலை செய்தது யார் என்ற அத்தியாயத்தோடு ஆரம்பித்து வாராக்கடனுக்கு எதிரான போர், பங்குகள், கடன் பத்திரங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களான க்ரைசில், இக்ரா, கேர் போன்றவற்றை மதிப்பீடு செய்வது யார், பொதுத்துறை வங்கிகளைப் பீடித்திருக்கும் நோய், வங்கிகளை ஒருங்கிணைத்துவிட்டால், எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து விடுமா, ஆபத்பாந்தவனாக இருந்த வங்கிகள் இன்று பெரும் சோகத்தில் இருக்கின்றன. இவற்றை மத்திய ரிசர்வ் வங்கி எப்படிக் காப்பாற்ற வேண்டும், இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்க என்ன வழிகள் என 13 அத்தியாயங்களில் இந்திய வங்கித் துறை பற்றி விலாவாரியாக ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார் தாமல்.

தாமல் பந்தோபாத்யாயா
தாமல் பந்தோபாத்யாயா

இந்த நூலின் மிகச் சிறப்பான விஷயம் என்னவெனில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்களான ரங்கராஜன் (1992-97), ஒய்.வி ரெட்டி (2003-08), டி.சுப்பாராவ் (2008-13), ரகுராம் ராஜன் (2013-16) ஆகியோருடைய நேர்காணல்களும் இடம்பெற்றிருப்பதே. இந்திய வங்கித்துறை எதிர்கொண்டிருக்கும் பிரச்னை, அதற்கான தோற்றுவாய், வாராக் கடன் பிரச்னையானது விஸ்வரூபம் எடுக்க யாரெல்லாம் காரணம், அரசின் கொள்கைகள், வங்கிகளில் தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கும், பெருங்குழும நிர்வாகிகளுக்கும் இடையே நிலவும்‘கூடாநட்பு’ என இவர்கள் மூவருமே தங்களது கருத்துகளை விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

வாராக்கடன் பிரச்னையால் வங்கிகள் கடன் கொடுக்கத் தயக்கம் காட்டியபோது, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFC) அதைத் தங்களுக்க்ச் சாதகமாகப் பயன்படுத்தி பல நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்க, இன்றைக்கு அவையும் சிக்கலில் மாட்டி முழித்துக் கொண்டிருக்கின்றன.

நீண்டகால உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கு என்றே 1948-ம் ஆண்டு ஐ.எஃப்.சி.ஐ, 1955-ம் ஆண்டு ஐ.சி.ஐ.சி.ஐ, 1964-ம் ஆண்டு ஐ.டி.பி.ஐ போன்ற அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அவையெல்லாம் காலப்போக்கில் வங்கிகளாக மாறின. இதனால் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் என அனைத்தும் சாலை போடுதல், மின்சாரம், தொலைத் தொடர்பு, கனிமச்சுரங்கள், கட்டுமானத் துறை, உருக்கு உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்குத் தாராளமாகக் கடன் கொடுக்க ஆரம்பித்தன.

ஆனால், நிலம் கையகப்படுத்தல், மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம், நிலுவையிலிருக்கும் உரிமக் கட்டணத்தைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பது, ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் எனப் பல வகைகளில் பெரும்பாலான `கனவு’த் திட்டங்கள் தடைப்பட ஆரம்பிக்க, வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாமல் நிறுவனங்கள் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டன.

வாராக்கடன்
வாராக்கடன்

2019 -ம் ஆண்டு நிலவரப்படி, மின்சக்தி, சாலைபோடுதல், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்ததில் வாராக்கடன் 18%, உள்கட்டமைப்புத்துறை சார்ந்த நிறுவனங்களின் வாராக்கடன் 22.6% ஆகும்.

2019-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பார்வையாளர் ஒருவர், ரகுராம் ராஜன் ப்ரெளன் பல்கலைக் கழகத்தில் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதியைக் (பிரதமர் மோடி ஏன் பொருளாதாரத்தைத் திறம்பட கையாளவில்லையெனில், அரசானது மையப்படுத்தப்பட்டு இருப்பதோடு பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு தொலைதூர பார்வையில்லாமல் செயல்பட்டு வருகிறது) குறிப்பிட்டு, அது குறித்து தங்களது கருத்து என்ன எனக் கேட்டார்.

அதற்கு நிதி அமைச்சர், `மையப் படுத்தப்பட்ட தலைமைத்துவம் இப்போது இருப்பதாக அவர் உணர்ந்தால், இதற்கு முன்பு ஜனநாயக முறையிலான பரந்து விரிந்த தலைமைத்துவம் இருந்தபோது ஊழலும் பரவலாக இருந்தது என நான் சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.

இந்தக் கருத்தரங்கு நடந்து இரண்டு வாரங்கள் ஆனபிறகு சி.என்.பி.சி நேர்காணலின்போது ரகுராம் ராஜனிடம் நிதி அமைச்சரின் மேற்குறிப்பிட்ட கருத்து பற்றி கேட்கப்பட்டபோது, அவர், ‘‘என்னுடைய 34 மாத பணிக் காலத்தில் எட்டு மாதங்கள் மட்டுமே யூ.பி.ஏ II ஆட்சியின்கீழ் நான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தேன். மீதமுள்ள 26 மாதம் என்.டி.ஏ ஆட்சியின்கீழ்தான் பணிபுரிந்தேன்’’ என்றதோடு, ‘‘நான் அரசியல் பேச விரும்ப வில்லை. ஆனால், பிரச்னையைத் தீர்ப்பதற்காக நாங்கள் ஆரம்பித்த வழிமுறைகள்தான் (குறிப்பாக, சொத்து தர ஆய்வு -AQR) இன்றைக்குப் பின்பற்றப்பட்டு வருகிறது’’ என்றார்.

1990-களின் மத்திய காலகட்டத்தில் இந்தியன் வங்கியின் சேர்மனாக ஏழு ஆண்டுகள் கோலோட்சிய எம்.கோபால கிருஷ்ணன், யெஸ் பேங்க் கபூர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சாந்தா கோச்சர் போன்று உச்சத்தில் இருந்த பலரும் எப்படித் தங்களது செயல்பாட்டால் அதள பாதாளத்தில் விழுந்தார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, யு.டி.ஐ ஆகியவை சேர்ந்து ஆரம்பித்த நிறுவனம்தான் சமீபத்தில் பிரச்னைக்குள்ளான ஐ.எல்& எஃப்.எஸ் நிறுவனமாகும். 2014-ம் ஆண்டு ரூ.48,671 கோடியாக இருந்த வாராக்கடன், 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.94,216 கோடியாக உயர்ந்தது.

ஐ.எல்&எஃப்.எஸ் என்ற பெரும் குழுமத்தின்கீழ் சுமார் 347 நிறுவனங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? இதில் 203 நிறுவனங்கள் போக்குவரத்து சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றன.

சமீபத்தில் பத்திரிகைகளில் அடிபட்ட இன்னொரு நிறுவனமான டி.ஹெச்.எஃப்.எல் பற்றியும் சுவராஸ்யமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக் கின்றன.

‘‘இப்போது வங்கித்துறை எதிர் கொண்டிருக்கும் பிரச்னைக்கு அரசாங்கம், கண்காணிப்பாளரான ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள்தான் காரணம்’’ என்கிறார் நூலாசிரியர். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் எனத் தொடர்ந்து சில வங்கிகள் பல நிறுவனங்களுக்குக் தந்து வந்திருக்கின்றன.

வாராக்கடன் என்ற `கட்டி’யை (tumor) அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்த 2015-ம் ஆண்டிலிருந்து ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. இதன் மீது மிகவும் தீர்மானத்துடன் செயல்பட ஆரம்பித்த ரகுராம் தலைமையின்கீழ் இயங்கிவந்த ரிசர்வ் வங்கியின் போக்கை அரசு விரும்பவில்லை. `உண்மை நிலவரத்தை மறைத்து நமது பொதுத்துறை வங்கிகள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. யாரும் எந்த அச்சமும் கொள்ளத் தேவை யில்லை’ என அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி வரும்பட்சத்தில், நமது வங்கிகள் ஜப்பானிய வங்கிகள் போக்கில் சென்றுவிடக்கூடும் என ஆசிரியர் தனது அச்சத்தையும் ஐயப் பாட்டையும் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் வங்கித் துறையானது பெரும்பாலும் அரசு நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது. வங்கிகள் நன்கு செயல்பட அதன் இருப்புநிலைக் குறிப்பேடு (balance sheet) வலுவாக இருக்க வேண்டும். சந்தையிலிருந்து முதலீட்டைக் கவரும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது பொதுத் துறை வங்கிகளிடம் இந்த இரண்டும் இல்லை.

எனவே, அரசானது அதிக முதலீட்டை வங்கித் துறைக்குள் உட்செலுத்த வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பற்றாக்குறை ஏற்கெனவே அதிகமாக இருப்பதால், அவ்வப்போது அறிவிக்கும் மறுமூலதனமாக்கல், மறுசீரமைப்பு ஆகியவை அதிகப் பயனைக் கொடுக்காது என்கிறார் நூலாசிரியர்.

வாராக்கடன் என்ற பூதாகரமான பிரச்னையை வங்கியாளர்கள் அணுகுவது குறித்து வருத்தமடைந்த ரகுராம், ‘‘நீங்கள் பன்றிக்கு லிப்ஸ்டிக் பூசலாம். ஆனால், அதை இளவரசியாக்க முடியாது’’ என்றார். இன்றைக்கு வங்கிகளின் நிலை அப்படித் தான் இருக்கிறது.

நூலின் முடிவில் வங்கித் துறையின் புள்ளிவிவரங்கள் அடங்கிய விளக்கப் படங்கள், வங்கியியல் துறையில் புழங்கும் சொற்றொடர்களுக்கான விளக்கம் என மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருப்பதோடு வங்கியியல் சார்ந்த கடினமான, சிக்கலான, பெரும் சோகமான விஷயத்தை சுமார் 500 பக்கங்களில் அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிதாக விளக்கிச் சொல்லியிருக்கிறார்.

சமகால அரசியல், பொருளாதார சூழலில் வங்கித் துறையின் செயல்பாடு, பிரச்னையைக் கையாள்வதில் பலதரப்பினரிடம் இருக்கும் குழப்பம் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள விரும்புவர்கள் இந்தப் புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும்!

பிட்ஸ்

ஸ்டார்ட்அப் நிறுவனங் களுக்கு ஆரம்பகட்ட மூலதனத்தைக் (Seed Fund) கொடுக்க ரூ.1,000 கோடியில் புதிய நிதித் தொகுப்பை உருவாக்கு வதாக அறிவித்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!