Published:Updated:

ரூ.18,000 கோடி ஜி.எஸ்.டி வரியைக் கேட்கும் ஐ.டி! - நீதிமன்றத்துக்கு சென்ற வங்கிகள்!

தெ.சு.கவுதமன்

ஜி.எஸ்.டி தொகை ரூ.18,000 கோடியைக் கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வங்கிகள் வழக்கு தொடுத்துள்ளன.

வங்கிகள்
வங்கிகள் ( vikatan )

வாடிக்கையாளர்களின் பெரிய அளவிலான டெபாசிட்டுகள், லாக்கர் பயன்பாடு தொடர்பான சேவைகளுக்காக வங்கிகள் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி-யை முறையாகச் செலுத்தவில்லை. பத்துக்கும் மேற்பட்ட வங்கிகள், ஒட்டுமொத்தமாக ரூ.18,000 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி செலுத்தாதது கண்டறியப்பட்டது. அதைச் செலுத்தும்படி கடந்த 2018, ஏப்ரல் மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் அந்த நோட்டீஸுக்குத் தடை பிறப்பிக்கக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வங்கிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சில மாதங்களுக்குப் பின் விரிவான விசாரணை நடத்துவதாகத் தெரிவித்த நீதிமன்றம், முன்னதாக, வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு அடுத்த மாத இறுதிக்குள் பதிலளிக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரி பாக்கியில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதிகபட்சமாக ரூ.6,200 கோடி ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியுள்ளது. அடுத்ததாக ஐசிஐசிஐ வங்கி ரூ.3,500 கோடி, ஆக்சிஸ் வங்கி ரூ.3,300 கோடி, கோடக்/ஐஎன்ஜி வைஸ்யா வங்கி ரூ.1,000 கோடி, எஸ்பிஐ ரூ.970 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.900 கோடி, சிட்டி பேங்க் ரூ.600 கோடி, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்டு ரூ.350 கோடி, யெஸ் பேங்க் ரூ.260 கோடி ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியுள்ளது. இவை தவிர, மேலும் சில வங்கிகளும் ஜி.எஸ்.டி வரி பாக்கி வைத்துள்ளன.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

வங்கிகள் முறைப்படிச் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டியைச் செலுத்தாமல் வரி வசூலிப்பில் குளறுபடி செய்வதாக அரசுதரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கெனவே வாராக்கடன் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் வங்கிகள், தற்போது ஜி.எஸ்.டி வரி பாக்கி பிரச்னையிலும் சிக்கியுள்ளன.