நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சிபில் ஸ்கோர் குறைந்துவிட்டால் மீண்டுவர என்ன வாய்ப்பு..? அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்...

சிபில்
பிரீமியம் ஸ்டோரி
News
சிபில்

FAQ

சிபில் ஸ்கோர் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். அதைப்பற்றி மக்களிடம் பொதுவாக உள்ள கேள்வி களுக்குப் பதில் தேடுவதன் மூலம் சிபிலைப் பற்றி விரிவாக நாம் தெரிந்து கொள்வோம்.

சிபில் என்றால் என்ன? இது எப்போது, யாரால், எதற்காகத் தொடங்கப்பட்டது? இது ஓர் அரசு நிறுவனமா?

“சிபில் என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (Credit Information Bureau) என்பதன் சுருக்க மாகும். இது அரசு சார்பில்லாத நிறுவனம். இந்த நிறுவனம் 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்சி பேங்க், அமெரிக்காவைச் சார்ந்த டிரான்ஸ் யூனியன் இன்டர்நேஷனல், ஐ.சி.ஐ.சி.ஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.எஸ்.பி.சி போன்ற பல வங்கிகள் சிபிலின் பங்கு தாரர்களாக உள்ளன.”

ஷியாம் ராம்பாபு 
ஷியாம் ராம்பாபு 

சிபில் எதற்காகத் தொடங்கப்பட்டது?

“வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தனிநபருக்கும், நிறுவனங் களுக்கும் கடன் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கடன் கொடுக்கும்போது கடன் பெறுபவரின் நம்பகத்தன்மை கணிக்க முடியாததாக இருக்கிறது. கடன் பெறுபவர் கடனை முறையாகத் திரும்பச் செலுத்துவாரா, அவரை நம்பி எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களை முடிவு செய்வது கடினமான விஷயமாக இருக்கிறது. அதனால் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வதற்காக சிபில் தொடங் கப்பட்டது. இதன்மூலம் வங்கிகளின் வாராக்கடன் குறையும்; தகுதிவாய்ந்த நபர்களுக்கு மட்டுமே கடன் தரும் சூழல் உருவாகும்.’’

சிபில் நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது?

“சிபில் நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களிடமிருந்து தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த கடன் விவரங்களைச் சேகரிக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தமது வாடிக்கை யாளர்களின் கடன் விவரங்களை மாதம்தோறும் சிபிலுக்கு தெரிவிக் கின்றன. வாடிக்கையாளரின் பெயர், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு போன்ற பிற அடையாள அட்டைகள், கடன் விவரங்கள் போன்ற பல தகவல்கள் சிபிலின் சேமிப்புக் கிடங்கில் சேகரிக்கப்படும். அவ்வாறு சேமிக்கப்படும் தகவல்களைத் தொகுத்து தனிநபருக்கும், நிறுவனங்களுக்கும் அவர்களின் கடன் விவரங்களின் அடிப் படையில் பொதுவான ஒரு ஸ்கோர் வழங்குவது சிபிலின் பணியாகும். அவ்வாறு கணக்கீடு செய்யப்படும் அந்த எண்தான் கடன் குறியீட்டு எண் (Credit Score) என்று அழைக்கப்படுகிறது.”

சிபில்
சிபில்

கடன் குறியீட்டு எண் மூலம் ஒருவரின் நம்பகத்தன்மையை எப்படி அறிந்துகொள்வது?

“கடன் குறியீட்டு எண் என்பது மூன்று இலக்க எண் ஆகும். கடந்த காலங்களில் தனிநபரோ நிறுவனமோ கடன் தொகையைத் தவறாமல் செலுத்தியுள்ளதா, கடன் தவணைகள் காலம் தாழ்த்தி செலுத்தப்பட்டுள்ளதா, கடனைத் திரும்பச் செலுத்தாமல் விட்டார்களா, காசோலைகள் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப் பட்டதா, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை முறையாகச் செலுத்தப்பட்டதா என்று கடன் குறித்து அனைத்துத் தகவல் களையும் கணக்கீடு செய்து இந்தக் கடன் குறியீட்டு எண் வழங்கப்படும்.

கடனை முறையாகச் செலுத்தும் நபர்களுக்கு பொதுவாக இந்தக் கடன் குறியீட்டு எண் நன்றாக இருக்கும். கடன் தொகையை ஒழுங்காகச் செலுத்தாமல் இருப்பவர்களின் கடன் குறியீட்டு எண் குறைவாக இருக்கும். கடன் குறியீட்டு எண் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு ஒருவரின் நம்பகத்தன்மை நல்ல முறையில் உள்ளதாகக் கருதப்படும்.”

பொதுவாக ஒருவரின் கடன் குறியீட்டு எண் எவ்வளவு இருக்க வேண்டும்?

“பொதுவாக, கடன் குறியீட்டு எண் என்பது 300 முதல் 900 என்ற எண்ணிக் கையில் இருக்கும். ஒருவரின் சிபில் ஸ்கோர் 300 முதல் 500 வரை இருந்தால் அவர் கடந்த காலங்களில் பெற்ற கடனை அடைக்காமல் விட்டுவிட்டார் என்று அர்த்தம். இந்த வகை வாடிக்கையாளர்களுக்குக் கடன் கிடைப்பது சிரமம்தான்.

ஒருவரின் சிபில் ஸ்கோர் 500 முதல் 700 என்ற அளவுக்கு இருந்தால், அந்த வாடிக்கையாளர் கடனைத் திரும்பக் கட்டுவதில் சில தவறுகள் செய்திருக்கிறார் என்று அர்த்தம். அதிகமாகக் கடன் பெற முயற்சி செய்வது, கடனை முழுவதும் அடைக்காமல் ஒன் டைம் செட்டில்மென்ட் மூலம் கடனை அடைத்தது போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக ஒருவரின் சிபில் ஸ்கோர் இந்த படிநிலைகளில் இருக்கலாம். இவருக்குக் கடன் கொடுப்பது சற்று ரிஸ்க் அதிகம் என்று வங்கிகள் நினைக்கும். அதனால் கடன் கொடுக்கும்போது மேலும் பல தகவல்களைக் கேட்டுப் பெற்று தகுந்த பரிசீலனைக்குப் பிறகு மட்டுமே கடன் தொகை அளிக்கப் படும். அவ்வாறு வழங்கப்படும் கடனுக்கான வட்டியும்கூட சற்று அதிகமாக இருக்கலாம்.

ஒருவரின் சிபில் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால், அவருக்குக் கடன் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. 700 முதல் 900 புள்ளிகள் வரை கடன் குறியீட்டு எண்ணை ஒருவர் வைத்திருந்தால், அவர் நம்பத்தகுந்த வாடிக்கையாளர் என்று வங்கியால் கருதப்படுவார். அதுவே அது நல்ல சிபில் ஸ்கோர் ஆகும்.”

நான் எந்த நிறுவனத்திடம் இருந்தும் கடன் பெற்றதில்லை. எனக்கு பான் கார்டுகூட இல்லை. என்னுடைய கடன் குறியீட்டு எண் என்னவாக இருக்கும்? எனக்குக் கடன் கிடைக்குமா?

“கடன் விவரங்கள் இல்லாத வாடிக்கையாளர்களின் கடன் குறியீட்டு எண் பொதுவாக 0 என்றோ -1 என்றோ இருக்கும். 0 என்று இருந்தால், அவரைப் பற்றிய பொதுவான விவரங்கள் இருக் கின்றன. கடன் விவரங்கள் இல்லை என்று அர்த்தம். இதை ஆங்கிலத் தில் No History (NH) என்று அழைப்பார்கள். -1 என்றால் அந்த வாடிக்கையாளர் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அர்த்தம். இதை ஆங்கிலத்தில் Not Available (NA) என்று அழைப்பார்கள்.

அவ்வாறு ஒருவரின் கடன் குறியீட்டு எண் NA என்றோ NH என்றோ வந்தால், நிதி நிறுவனங்கள் அந்த வாடிக்கையாளரின் பிற விவரங்களைக் கொண்டு கடன் வழங்கும் முடிவை எடுக்கும். பொதுவாக, இந்த வகை மக்கள் கடன் தொகையைச் செலுத்த மாட்டார்கள் என்று நிதி நிறுவனங்கள் கருதாது. அதனால் இந்த வகை வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதில் பொதுவாக எந்தச் சிக்கலும் இருக்காது.”

சிபில் நிறுவனம் கணக்கிடும் ஸ்கோரை எப்படிப் பெறுவது?

“தனிநபர் தனது கடன் குறியீட்டு எண்ணை இணையதளத்தின் மூலம் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் இலவசமாகப் பார்க்க முடியும். சிபில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட வலைதளமான www.cibil.com இணையதளத்தில் கேட்கப்படும் சரியான தகவல்களைக் கொடுத்து ஒருவரின் கடன் குறியீட்டு ரிப்போர்ட்டைப் பெற முடியும். ஏற்கெனவே கூறியதுபோல, எந்தக் கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக இந்த சேவையைப் பெறமுடியும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் தகவல் களை இதே முறையில் உடனடி யாகப் பெற முடியும்.”

கடன் பெறுவதில் சிபில் ஸ்கோரின் பங்கு என்ன?

“பொதுவாக, கடன் குறியீட்டு எண் ஆனது 700 என்ற அளவுக்கு அதிகமாக இருந்தால், அவருக்கு கடன் பெறுவதற்கு 90% வாய்ப்பிருக்கிறது. இந்த எண் குறையக் குறைய கடன் கிடைக்கும் வாய்ப்புகளும் குறையும். அதனால் சிபில் ஸ்கோரை சரியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். வங்கிகள் பொதுவாக, 7 சதவிகிதத்துக்குக்கூட கடன் தருகின்றன. குறைந்த சிபில் ஸ்கோர் ஒருவருக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. ரூ.10,000 கடனைத் திரும்ப செலுத்தாத காரணத்தால் பல லட்ச ரூபாய்க்கு அதிக வட்டி கட்டும் நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் கடன் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்து நமது கடன் குறியீட்டு எண்ணை சரியாக வைத்திருப்பது நீண்டகால நோக்கில் நமக்கு லாபம் தரும்.”

என்னுடைய கடன் குறியீட்டு எண் குறைவாக இருக்கிறது. இதை எப்படி சரிசெய்வது, எனக்கு வங்கிகளில் கடன் கிடைக்க வாய்ப்பே இல்லையா?

“கடன் வாங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் பேசி கடனை முறையாகச் செலுத்துவது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவும். மேலும், இந்தக் குறியீட்டு எண் குறைவாக இருந்தாலும் சில வங்கிகள் அடமானக் கடன் வழங்கும். உதாரணத்துக்கு நாம் வாங்கும் அளவுக்கு அதிகமாக நகைகளை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்றால், வங்கியின் ரிஸ்க் குறைகிறது. இதுபோன்ற கடன்கள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. என்றாலும் கடன் குறியீட்டு எண்ணைப் பொறுத்து வசூலிக்கப்படும் வட்டியின் அளவானது அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.”

என்னுடைய கிரெடிட் ஸ்கோர் குறைந்து விட்டது. இந்தப் புள்ளிகள் ஒரே நிலையில்தான் இருக்குமா? குறைந்த இந்த புள்ளிகள் எத்தனை ஆண்டு காலம் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

“சிபில் வாடிக்கையாளரின் எந்தத் தகவலையும் அழித்துவிடாது. என்றாலும் கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரின் ஏழு ஆண்டுகால கடன் விவரங்களின் அடிப்படையில் தொகுக்கப்படுவதாகும். அதனால் பொதுவாக வேறு தவறுகள் செய்யாமல் இருந்தால் கடன் செட்டில் செய்யப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் பழைய நிலைக்கு வரலாம்.”

(அடுத்த வாரம் தொடரும்)

பிட்ஸ்

பிப்ரவரி 1-ம் தேதி அன்று தாக்கலான மத்திய பட்ஜெட் முழுக்கவே காகிதம் இல்லாத பட்ஜெட்டாக வந்தது. தற்போது ராஜஸ்தானும் காகிதம் இல்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டாவது இது நடக்குமா?