Election bannerElection banner
Published:Updated:

ஏன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை பொதுத்துறை வங்கியோடு இணைக்கவில்லை RBI?

Lakshmi Vilas bank ATM
Lakshmi Vilas bank ATM ( Photo: Vikatan / Rajamurugan )

வெறும் 33 கிளைகளுடன் இந்தியாவில் செயல்பட்டு வரும் அந்நிய நாட்டு வங்கியான டி.பி.எஸ் வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி நெருக்கடியை எப்படிச் சரிசெய்யும்?

கரூர் நகரத்தில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் லக்ஷ்மி விலாஸ் வங்கி 1926-ல் உருவாக்கப்பட்டது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் 563 கிளைகளுடன் பல பகுதிகளில் கடந்த 94 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாட்டுக்கு 17.11.2020 முதல் 16.12.2020 வரை நிபந்தனைகளுடன்கூடிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

வங்கியிலுள்ள நிதி நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான சரிவால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் ஒரு மாதத்துக்கு ரூ.25,000-க்கும்மேல் பணம் எடுக்க முடியாது என்றும், இந்த வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் (D.B.S) வங்கியுடன் இணைக்கும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

``யெஸ் பேங்க் என்ற தனியார் வங்கியும், டி.ஹெச்.எஃப்.எல், ஐ.எல்&எஃப்.எஸ் போன்ற வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் சூழ்நிலையில், லக்ஷ்மி விலாஸ் வங்கியை வெளிநாட்டு தனியார் வங்கியுடன் இணைக்கும் ரிசர்வ் வங்கியின் முயற்சி தவறானது. ஏனெனில், இந்தியாவில் 33 கிளைகளுடன் இயங்கிவரும் டி.பி.எஸ் வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் இணைத்தால் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்குப் பாதுகாப்பில்லை.

Lakshmi Vilas Bank ATM
Lakshmi Vilas Bank ATM
Photo: Vikatan / Vijayakumar.M
லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு... இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் சுமார் 60% கிளைகளைக் கிராமப்புறத்திலும் சிறு நகரங்களிலும் கொண்டுள்ள லக்ஷ்மி விலாஸ் வங்கியின் கிளைகள் பெருமளவு மூடப்படும் ஆபத்து உள்ளது. அங்கு பணிபுரியும் 4,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே, லக்ஷ்மி விலாஸ் வங்கியை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்" என லக்ஷ்மி விலாஸ் வங்கி - டி.எஸ்.பி வங்கி இணைப்பு வங்கித்துறை சார்ந்த வட்டாரத்தில் விவாதமாக உருவெடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம்.

திவாலாகும் ஐந்தாவது வங்கி!

``கடந்த இரண்டு வருடங்களில் ஏறக்குறைய திவால் நிலையைச் சந்திக்கும் ஐந்தாவது நிதி நிறுவனம் லக்ஷ்மி விலாஸ் வங்கி. பி.எம்.சி வங்கி இப்படியான நெருக்கடியைச் சந்தித்ததன் விளைவாகப் பத்து வாடிக்கையாளர்கள் உயிரிழந்ததை நம்மால் மறக்க முடியாது. இதில் முக்கியமான ஒரு விஷயம், பி.எம்.சி போன்ற கூட்டுறவு வங்கிகளோ, யெஸ் வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளோ திவாலானால் டெபாசிட் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரைதான் காப்பீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும். ஆனால், ஐ.எல் & எஃப்.எஸ், டி.ஹெச்.எஃப்.எல் போன்ற வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் திவாலானால் வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது.

Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Photo: AP / Rajanish Kakade

பொதுவாக, இந்த ஐந்து நிதி நிறுவனங்களும் சீர்குலையக் காரணம் மூன்று விஷயங்கள்தான். அவை உயர்நிலை ஊழல், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ள கோளாறு, மத்திய அரசு - ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை மற்றும் கடன் வசூல் கொள்கையில் உள்ள குறைபாடுகள்.

தொடர்ந்து பல தனியார் வங்கிகள் திவாலாகிவரும் சூழலில் லக்ஷ்மி விலாஸ் வங்கியை மற்றொரு தனியார் வங்கியான டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான ஆலோசனை மிகவும் தவறானதாகும். வெறும் 33 கிளைகளுடன் இந்தியாவில் செயல்பட்டு வரும் அந்நிய நாட்டு வங்கியான டி.பி.எஸ் வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி நெருக்கடியை எப்படிச் சரிசெய்யும்? இந்த வங்கியைப் பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதுதான் அதிலுள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு உத்தரவாதமாக அமையும்.

கடந்த மூன்று வருடமாகத் தவறான கடன் கொள்கையாலும் அதை வசூலிக்க முறையாகச் செயல்படாததாலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை உரிய நேரத்திலேயே தலையிட்டு சரிசெய்யத் தவறியுள்ள மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அதுமட்டுமல்லாமல், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் சேமிப்புக்கு அரசும், ரிசர்வ் வங்கியும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். லக்ஷ்மி விலாஸ் வங்கியை மற்றுமொரு தனியார் வங்கியுடனோ, பன்னாட்டு வங்கியுடனோ இணைக்கும் ஆலோசனையைக் கைவிட்டு பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும்.

C.P.Krishnan
C.P.Krishnan

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகையைக் கறாராக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்றே கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.வி.பி வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைப்பதால் பொதுத்துறை வங்கிக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை அரசு ஏற்க வேண்டும். எல்.வி.பி வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் செயல்படும் அனைத்து தனியார் வங்கிகளையும் உடனடியாகப் பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும்" என்றார் அவர்.

எல்.வி.பி - டி.பி.எஸ். இணைப்பில் இருக்கும் ஆபத்து!

மேலும், ``தனியார் வங்கி இணைப்புகளில் இருக்கும் முக்கியமான ஆபத்து, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்கள் பலரை, இணைப்புக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்ப வாய்ப்புண்டு. ஐ.சி.ஐ.சி.ஐ - பேங்க் ஆஃப் மதுரா ஆகிய வங்கிகளின் இணைப்பில் இதுதான் நடந்தது. நியூ பேங்க் ஆஃப் இந்தியா - பஞ்சாப் நேஷனல் வங்கி இணைப்பின்போதும் இதுதான் நடந்தது. அதைத் தொடர்ந்து, நியூ பேங்க் ஆஃப் இந்தியாவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் பலர், வேலையிழப்பு காரணமாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீது வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, இந்த வங்கி இணைப்பு என்பது, பரஸ்பரம் இரண்டு வங்கிகளுக்கு மட்டுமே பயன்தரக்கூடியதாக மட்டும் இருக்காமல், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பயன்தரக்கூடியதாகவும் அமைய வேண்டும். உதாரணத்துக்கு, சில வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குவதில் திறமையாகச் செயல்படக் கூடியவையாக இருக்கும்.

சில வங்கிகள், வாகனக் கடன் வழங்குவதில் சிறப்பாகச் செயல்படக்கூடியவையாக இருக்கும். இப்படியான வங்கிகளை இணைக்கும்போது, அவை இரண்டு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமையும். ஆனால், லக்ஷ்மி விலாஸ் வங்கியை, டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதால், இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படாது. ஏனெனில் டி.பி.எஸ் பேங்க் மிக அதிக பணம் வைத்திருக்கும் எலைட் வாடிக்கையாளர்களை மட்டுமே கருத்தில் கொண்டு சேவைகளை வழங்கும். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளைக் கருத்தில் கொண்டு சேவைகளை வழங்காது" என்றார்.

ஆக, இவ்விரு வங்கியை இணைப்பது மட்டுமே தீர்வாகாது. ரிசர்வ் வங்கி தனது கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தி, உயர்நிலை ஊழலில் ஈடுபடுபவர்களைக் கடுமையாகத் தண்டித்து, அவர்களின் சொத்து முழுவதையும் முடக்கி இழப்பை ஈடுகட்ட வேண்டும். வங்கிகளின் கடன் கொள்கை, கடன் வசூல் கொள்கையில் முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்தத் தீர்வாக அமையும். மேலும், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துவதாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு