நடப்பு
Published:Updated:

உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்கும் வைஃபை கார்டு... உஷாரய்யா உஷாரு!

வைஃபை கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
வைஃபை கார்டு

D E B I T & C R E D I T C A R D

ப்யூனி

வங்கிகளில் இருப்பது நம் பணம்தான். சேமிப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, நடப்புக் கணக்கு இப்படி விதம்விதமான பெயர்களில் நம்முடைய பணத்தையெல்லாம் பெரும்பாலும் வங்கிகளில்தான் சேமிக்கிறோம். ஆனால், நம்முடைய பணத்தை வைத்துக்கொண்டு சில வங்கிகள் காட்டும் ஆட்டம் எப்போதுமே தாங்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்த கார்டுகள் வந்த பிறகு, அந்த சார்ஜ், இந்த சார்ஜ் என்று கண்ட காரணங்களையும் சொல்லி, காசைக் கறந்தபடி இருக்கிறார்கள்.

வைஃபை கார்டு
வைஃபை கார்டு

எல்லாமே ஆன்லைன் மயம் என்பதால், நம் கண்ணுக்குத் தெரியாமலே கட்டுக்கட்டாக கரைந்துகொண்டிருக்கிறது கரன்சி. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலைவதால், நாமும் அவற்றை யெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துகொண்டே இருக்கிறோம். நம்முடைய இந்த ‘கண்டுகொள்ளாத மனப்பான்மை’யே வங்கிகள் பலவற்றுக்கும் துருப்புச் சீட்டாக இருக்கிறது. எதையாவது சொல்லி, மிளகாய் அரைத்தபடி இருக்கிறார்கள். இப்படிக் கறக்கும் காசு ஒரு பக்கம் என்றால், கணக்கில் இருக்கும் காசு திருட்டுப்போவதற்கும் வழிசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

வாடிக்கையாளர்களுக்குப் புதுப்புது வசதிகளைச் செய்து தருகிறோம் என்றபடி கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது... வைஃபை கார்டு. இதை ‘கான்டாக்ட்லெஸ் கார்டு’ என்கிறார்கள். இந்த வசதியுள்ள கார்டை, ஸ்வைப்பிங் மெஷினில் தேய்க்கத் தேவையில்லை. அந்த மெஷின் மீது காட்டினாலே போதும்... பணத்தை எடுத்துக்கொண்டுவிடும்.

2015-ம் ஆண்டே இந்த கார்டு வந்துவிட்டாலும், அவ்வளவாக வழக்கத்தில் இல்லாமலிருந்தது. கடந்த ஓராண்டாக இதை அதிகளவில் பிரபலபடுத்தி வருகிறார்கள். வைஃபை கார்டுக்கான லிமிட், கடந்த ஆண்டு வரை ரூ.2,000 என்றிருந்தது, இந்த ஆண்டு முதல் ரூ.5,000 வரை என்று உயர்த்தப்பட்டுள்ளது.

இவை அத்தனையுமே இந்திய ரிசர்வ் வங்கியான ஆர்.பி.ஐ-யின் அனுமதி மற்றும் ஆலோசனையின் பேரில்தான் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த வங்கிகள் ஆர்.பி.ஐ சொன்ன அனைத்து வழிமுறை களையும் கையாளாமல் இருப்பது தான் சிக்கலே.

அனைத்துவிதமான கார்டு களையும் வைஃபை வசதிகொண்ட கார்டுகளாக மாற்றச் சொல்லியுள்ளது ஆர்.பி.ஐ. இதன் அடிப்படையில் புதிதாக வழங்கப்படும் கார்டுகள் அனைத்துமே வைஃபை வசதி கொண்ட கார்டுகளாக மாற்றப்பட்டே வழங்கப்படுகின்றன.

‘ஒருவருக்கு இந்த வசதி தேவை யில்லை என்று சொன்னால், அவருக்கு அந்த வசதியைத் தரத் தேவையில்லை’ என்றும் ஆர்.பி.ஐ தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதாவது, வைஃபை கார்டு என்கிற வகையில் கார்டை மெஷின் மீது காட்டினாலே பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை விருப்பப் பட்டால் பயன்படுத்தலாம். விருப்பம் இல்லை எனில், ஆன்லைன் மூலமாக/ஆப் மூலமாக இந்த வசதியை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், இதைப் பற்றியெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு உரிய வகையில் அறிவிப்புகளை எந்த வங்கியுமே கொடுப்பதில்லை. இது ஆர்.பி.ஐ வழிகாட்டும் நெறிமுறை களுக்கு மாறானது என்பதைவிட, வாடிக்கையாளர்களின் பணத்துக்கு வேட்டுவைக்கும் விஷயமாக இது இருக்கிறது என்பதைத்தான் நாம் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய கார்டைப் பயன்படுத்தி கடைகளில் ஒரு நாளில் ஐந்து முறை நாம் பொருள்களை வாங்க முடியும். அதாவது, அதிகபட்சமாக ஒரு தடவைக்கு 5,000 வீதம் 25,000 ரூபாய் வரைக்கும் இப்படி வைஃபை வசதி மூலமாகவே கடைகள் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

நம்முடைய கார்டைத் தொலைத்து விட்டோம் அல்லது திருடுபோய்விட்டது என்றால், பின்நம்பர் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றிருந்த சூழலில், திருட்டுத்தனமாகக் கார்டைப் பயன்படுத்த முடியாது. ஆனால், வைஃபை என்று வந்துவிட்ட பிறகு, 25,000 ரூபாய்க்கான பொருள் களை ஒருவரால் மின்னல் வேகத்தில் வாங்கிவிட முடியும். இது மிகவும் ஆபத்தான ஒன்றே.

கார்டு தொலைந்தாலோ... மறதியாக எங்காவது வைத்துவிட்டாலோ... உடனடியாக கார்டை பிளாக் செய்து விடலாம்தான். ஆனால், நடைமுறையில் இது எளிதான ஒன்றல்ல. கார்டைத் தொலைத்த பிறகு, நன்கு தேடிப் பார்ப்போம்... அலுவலகம், வீடு, கடைசியாக நாம் பயன்படுத்திய வியாபார நிறுவனம் என்றெல்லாம் செக் செய்வோம். அதன் பிறகுதான் பிளாக் செய்வதைப் பற்றியே யோசிப்போம். பின்நம்பர் இருந்தால் மட்டுமே கார்டைப் பயன்படுத்த முடியும் என்ற சூழலில் இப்படி தைரியமாக நம்மால் தேடவோ, யோசிக்கவோ முடிந்தது. ஆனால், வைஃபை கார்டு எனும்போது நொடியில் நம் பணத்துக்கு வேட்டு வைக்கப்பட்டுவிடும்.

அதுமட்டுமல்ல, இந்த வங்கி களின் கஸ்டமர் கேர் எண்கள் பெரும்பாலும் நம்மைப் படுத்தி எடுப்பவையாகவே இருக்கின்றன. முன்பெல்லாம் அனைத்து மாநில மொழிகளிலும் சேவை தந்தவர்கள், தற்போது கொரோனா வைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கும் வேட்டு வைத்து விட்டனர். ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர்.

தவிர, கொரோனா காரணமாக ஆள்களைக் குறைத்துவிட்டதால், ஆங்கிலம், இந்தி தெரிந்திருந் தாலும்கூட நேரடியாக வாடிக்கையாளர் சேவை மைய அலுவலரிடம் பேசுவது சாத்திய மற்றதாகவே இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளரின் டெபிட் கார்டு அல்லது வங்கிக் கணக்கு எண் மற்றும் பின்நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் ஐ.வி.ஆர் எனப்படும் வாய்ஸ் சிஸ்டம் மூலமாகக் கேட்டுக்கொண்ட பிறகு, ‘தங்களின் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது நன்றி’ என்பதையே ஒவ்வொரு முயற்சியின்போதும் சொல்லி போரடிக்க வைப்பதுதான் பல வங்கிகளின் கஸ்டமர் கேர் செயல்பாடாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் எங்கே போய் நாம் புகார் செய்வது?

எனவே, இணையம் மற்றும் ஆப் செயல்பாடு மூலமாக நாமே களத்தில் இறங்குவதுதான் சரியானது. சம்பந்தபட்ட வங்கியின் நெட்பேங்கிங்/மொபைல் பேங்கிங் ஆப் வசதியைப் பயன்படுத்து பவர்கள், கார்டு தொலைந்தால் உடனடியாகத் தற்காலிகமாக பிளாக் செய்துவிடலாம். தேடிப் பார்த்தும் கார்டு கிடைக்கவில்லை என்றால், நிரந்தரமாக பிளாக் செய்து புதிய கார்டை வாங்கிக் கொள்ளலாம். கார்டில் இருக்கும் வைஃபை வசதி தேவையில்லை என்று நினைப்பவர்களும் இதேபோல, நெட்பேங்கிங்/மொபைல் பேங்கிங் ஆப் மூலமாக நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது அதை ஆன் செய்தும் கொள்ளலாம்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கண்ணும்கருத்துமாகப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையே. வங்கிகளைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ‘கடமையே’ என்று செயல்படாமல், மக்கள் பணத்துக்கு உண்மையாக பாதுகாப்பைத் தர வேண்டும்!

பிரபு கிருஷ்ணா
பிரபு கிருஷ்ணா

வைஃபை கார்டு... பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

வைஃபை சிப் பொருத்தப்பட்ட கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருப்பது. அதை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்ற கேள்வியுடன், தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணாவிடம் பேசினோம்.

“எப்போதுமே ஒரு ஹோட்டல் அல்லது கடையில் பணம் செலுத்தும்போது வைஃபை கார்டை கடைக்காரரிடம் ஒப்படைக்கக் கூடாது. உங்களுக்கு முன்னால் நீங்களே பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்ளவும். அதே நேரத்தில் பரிவர்த்தனைக்குப் பிறகு, மெசேஜை சரிபார்க்கவும். ஏனெனில், ஒன்று அல்லது இரண்டு முறைகூட பணம் எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

உங்களிடம் வைஃபை கார்டு இருந்தால், அலுமினியம் ஃபாயில் (Foil) காகிதத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், என்.எஃப்.சி டிவைஸ் பொருத்தப்பட்ட பி.ஓ.எஸ் இயந்திரங்கள் தற்போது செல்போன் வடிவிலேயே வந்துவிட்டன. நமது கார்டை பர்ஸில் வைத்து பாக்கெட்டில் வைத்திருந்தாலும் நான்கு செ.மீ இடைவெளியில் இந்த பி.ஓ.எஸ் இயந்திரத்தை கொண்டு வந்தாலே போதும், பணத்தை எளிதாக எடுத்துவிடலாம்.

வைஃபை கார்டுகளை வைப்பதற்காக மெல்லிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்ட சிறிய அளவிலான கவர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இதற்கு ‘ஆர்.எஃப்.ஐ.டி (Radio Frequency Identification (RFID)’ கவர் என்று பெயர். 100 ரூபாய் முதல் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெறுமனே பாக்கெட்டுக்குள் கார்டை வைக்காமல், இந்த கவரில் போட்டுவைப்பது பாதுகாப்பானது. மேலும், ஆர்.எஃப்.ஐ.டி பர்ஸ்களும் தற்போது விற்பனைக்கு உள்ளன. ஆன்லைனிலும் கிடைக்கின்றன.

வைஃபை கார்டுகளை மற்ற கார்டுகளைப்போல வெளிப்படையாகப் பயன்படுத்தக் கூடாது. இந்த வகை கார்டுகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதே பிறருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பர்ஸில் பணத்தை வைத்திருந்தால், திருடர்கள் பிட்பாக்கெட் அடித்துக்கொள்வதுபோல, வைஃபை கார்டுகளிலிருந்து ஹேக்கர்கள் ‘நவீன பிட்பாக்கெட்’ அடிக்கிறார்கள். பேருந்திலோ, ஏதாவது ஒரு வரிசையிலோ, ஒரு கூட்டத்திலோ நமக்கு அருகில் இருக்கும் நபர் பி.ஓ.எஸ் இயந்திரம் மூலம் வைஃபை கார்டிலிருந்து பணத்தை எளிதாகத் திருடிவிட முடியும்.

வைஃபை கார்டு பயன்பாட்டு விஷயத்தில், பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்படவில்லை. அதனால், தற்போதைய நிலையில் இந்த ஆப்ஸனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. ‘வைஃபை சிப்’ உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் இருந்தாலும், ‘பிளாக்’ செய்யக்கூடிய ஆப்ஸனை வங்கிகள் வழங்குகின்றன. அதைப் பயன்படுத்தி தற்காலிகமாக பிளாக் செய்து விடுங்கள். வெளிநாடுகளில் இருப்பதுபோல, எதிர்காலத்தில் இந்தியாவில் வைஃபை கார்டு தொழில்நுட்பம் கோலோச்சும்போது அதை பயன்படுத்தினாலே போதும்’’ என்றார் தெளிவாக.

- செ.கார்த்திகேயன்