சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றும் வீட்டுக் கடன்... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை! #LoanVenumaSir 17

நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் கடன், வீட்டுக் கடன்.
கடந்த அத்தியாயத்தில் அடமானக் கடன் குறித்து விரிவாகப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் கடன்களிலேயே மிக முக்கியமான கடனாகக் கருதப்படும் வீட்டுக் கடன் பற்றி பார்ப்போம்.
நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் கடன், வீட்டுக் கடன். வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் (வீட்டுக் கடன் வசதி தரும் நிதி நிறுவனங்கள்) கடன் வளர்ச்சியைப் பொறுத்து, நாட்டின் பொருளாதாரம் ஏறுமுகமாக இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடலாம்.

பொருளாதாரத்தை உயர்த்தும் வீட்டுக்கடன்
வங்கிகள் தரும் வீட்டுக்கடன் வளர்ச்சியைப் பொறுத்து, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைகின்றன என்பதைக் கண்டறிந்து கொள்ளலாம். அதை சார்ந்து இரும்பு, சிமென்ட், பெயின்ட், மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியையும் தீர்மானிக்க முடியும்.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படுகிறது என்றால், இரும்பு, சிமென்ட், பெயின்ட் மற்றும் மின்சார சாதனங்களைப் பயன்படுத்தியே கட்டமுடியும். குடியிருப்பை கட்டி முடித்தவுடன் மின்னணு சாதனங்கள் மற்றும் கார் போன்றவற்றுக்கான தேவை உருவாகும்போது, இந்த நிறுவனங்களின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். அதுபோல், வீட்டுக் கடன் வளர்ச்சி அதிகரிக்கும்போது வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட மொத்த கடன்களின் அளவும் அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும்போது வங்கிகளின் லாபமும் அதிகரிக்கிறது.
நம் நாட்டில் சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்நாள் சாதனையாகவும், மனதுக்கு மற்றும் குடும்பத்துக்கு நெருக்கமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆகவே, வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கியோர் முழுவதுமாக சரியாகத் திருப்பிச் செலுத்தி அந்த வீட்டை தனது பரிபூரணமான, எத்தகைய கடன்களும் இல்லாத சொந்த வீடாக்கிக் கொள்ளும் முயற்சியை எல்லோரும் எடுக்கிறார்கள். தற்போது மத்திய அரசாங்கம் மத்திய தர வர்க்கத்துக்கான வீடுகளை, கட்டுமான நிறுவனங்கள் கட்டவும் மற்றும் அத்தகைய வீடுகளுக்கான வீட்டுக் கடன்களை வங்கிகள் வழங்கவும், அரசாங்கம் உற்சாகம் அளித்து வருகிறது. மேலும், அத்தகைய வீடுகளை வாங்குவோருக்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுக் கடன் வட்டியில் சலுகைகளையும் வழங்குகிறது.

எதற்கெல்லாம் வீட்டுக்கடன்?
1. மனை இருக்கிறது அதன் மீது வீடு கட்ட.
2. மனை வாங்க மற்றும் அதன் மீது வீடுகட்ட.
3. அடுக்குமாடி குடியிருப்பு வீடு வாங்க.
4. தனி வீடு வாங்க.
ஆகியவற்றுக்காக வீட்டுக்கடன் தரப்படுகிறது. அடமானக் கடன் போலவே, வீட்டுக் கடனிலும் தங்களின் வருமானம், சொத்தின் மதிப்பு (Loan to Value) மற்றும் சொத்தில் சட்டச் சிக்கல் ஏதுமில்லாமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும். மேற்கண்ட நான்கு வகைக் கடன் பற்றி இனி பார்ப்போம்.
மனை உண்டு; வீடு கட்ட பணம்
ஏற்கெனவே உங்களிடம் ஒரு காலி மனை இருக்கிறது. இப்போது அதில் வீடு கட்ட திட்டமிடுகிறீர்கள் எனில், நீங்கள் கட்டப்போகும் வீட்டின் மொத்த கட்டுமானத் தொகை எவ்வளவு என்பதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடம் இருந்து அறிக்கை வாங்கி வங்கியில் கொடுத்தால் தங்களின் வருமானம், மனையின் மதிப்பு மற்றும் கட்டுமானத் தொகையின் மதிப்பு, மனை சார்ந்த சொத்து ஆவணங்களில் வில்லங்கம் இல்லாமை ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கான வீட்டுக்கடன் தொகை நிர்ணயிக்கப்படும்.

மனை உண்டு, வீடு கட்டக் கடன்
நீங்கள் மனை புதிதாக வாங்கி அதில் வீடு கட்டப்போகிறீர்கள் எனில், உங்களுக்கு மனை வாங்கவும், வீடு கட்டவும் கடன் வழங்கப்படும். மனையின் மதிப்பில் தோராயமாக 50% கடனாகவும், மனையின் பத்திரப்பதிவு முடிவடைந்து, கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெற்றவுடன், மொத்தக் கட்டுமானத் தொகையில் 80 சதவிகிதமும் கடனாக வழங்கப்படும்.
தனி வீடு வாங்க...
புதிய மற்றும் பழைய வீட்டை வாங்கவும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இதற்கு உங்கள் வருமானம் எவ்வளவு, எவ்வளவு பணத்தை நீங்கள் திரும்பக் கட்ட முடியும் என்பதை வங்கிகள் பார்க்கிற அதே சமயத்தில், நீங்கள் வாங்கவிருக்கும் வீட்டின் மதிப்பையும் வங்கிகள் அவசியம் கணக்கில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கடன் தொகையை நிர்ணயம் செய்யும்.
வீட்டைப் புதுப்பிக்கவும் வங்கிகள் கடன் தருகின்றன. இதற்கான கடன் தொகை நபருக்கு நபர் மாறுபடும் என்பதால், இது குறித்து வங்கியிடம் விளக்கமாக விசாரித்து அறிவது நல்லது.