நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இந்தியாவிலிருந்து வெளியேறும் வெளிநாட்டு வங்கிகள்! என்ன காரணம்..?

வங்கிகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கிகள்...

C I T I B A N K

உலக அளவில் செயல்படும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இந்தியாவை நோக்கி வந்தவண்ணம் இருக்க, கடந்த வாரம் இரு வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த சிட்டி வங்கி மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் ராண்ட் (First Rand) ஆகிய இரு வெளிநாட்டு வங்கிகளும் இந்தியாவிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கின்றன.

சிட்டிபேங்க், இந்தியா மட்டுமல்லாமல் 13 நாடுகளில் இருந்தும் வெளியேற முடிவெடுத்திருக்கிறது. வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு இருக்கும் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள சிட்டி வங்கி, 30-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளுடன் நம் நாட்டில் செயல்பட்டுவந்தது.

100 ஆண்டுகளுக்கு மேலே செயல்படும் சிட்டி பேங்குக்கு நம் நாட்டில் 30 லட்சம் வாடிக்கையாளர்கள், 22 லட்சம் கிரெடிட் கார்டுகள் உள்ளன. இதன் வாராக்கடன் 0.5% என்ற அளவில் உள்ளது.

இந்த வங்கி வெளியேறுவதாக அறிவித்த சில நாள்களி லேயே ஃபர்ஸ்ட் ராண்ட் வங்கி வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டது. பர்ஸ்ட் ராண்ட் வங்கி, 2009-ம் ஆண்டு இந்தியாவில் செயல்படத் தொடங்கியது. இந்தியாவில் மும்பையில் மட்டும் ஒரே ஒரு கிளையுடன் செயல்பட்டுவந்த இந்த வங்கியானது விரிவாக்கத்துக்கான திட்டங்களை உருவாக்கினாலும் அவற்றைச் செயல்படுத்த முடியவில்லை.வளர்ச்சி அடைய முடியாதது, கோவிட் பெருந்தொற்று மற்றும் வாராக்கடன் உயர்ந்தது உள்ளிட்ட பல காரணங்கள் இந்த வங்கி வெளியேறக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வங்கி கொடுத்துள்ள மொத்தக் கடன் ரூ.240 கோடி. இதில் ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்துக்கு ரூ.35 கோடி கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வங்கிகள்...
வங்கிகள்...

வெளியேற என்ன காரணம்?

இந்திய உள்நாட்டு வங்கிகளின் வளர்ச்சியுடன் வெளிநாட்டு வங்கிகளால் போட்டி போட முடியவில்லை என்பது தான் முக்கிய காரணம். 2000-ம் ஆண்டு களின் தொடக்கத்தில் வங்கிகள் கொடுத்துள்ள கடன்களில் 8% அளவுக்கு வெளிநாட்டு வங்கிகள் கொடுத்திருந்தன. ஒரு காலத்தில் 6.5 சதவிகிதமாகக் குறைந்து தற்போது 4 சதவிகிதத்துக்குள் வந்து விட்டன. மாறாக, தனியார் வங்கிகள் தங்களது சந்தையைத் தொடர்ந்து உயர்த் திக்கொண்டே வந்தன. இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாட்டு வங்கிகளால் பங்குபெற முடியவில்லை.

2015-ம் ஆண்டு ஸ்டாண்டர்டு சார்டட் வங்கி, தன்னுடைய பிசினஸைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் செயல்பட்ட மற்றொரு முக்கிய வங்கியான ஹெச்.எஸ்.பி.சி இந்தியாவில் உள்ள கிளைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும் முடிவை எடுத்தது.

இந்திய சந்தை மற்றும் வாடிக்கையாளர் களைப் புரிந்துகொள்ளாதது, சிறு நிறுவனங்கள் மற்றும் சிறு வாடிக்கை யாளர்களைப் புறக்கணித்து பெரிய நிறுவனங்களை மட்டுமே கவனம் செலுத்தியது உள்ளிட்ட காரணங்களை வங்கியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைவிட முக்கியமான காரணம், ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுதான். 2013-ம் ஆண்டு இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய உத்தரவை வெளி யிட்டது. இந்தியாவில் ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கி, அந்த துணை நிறுவனம் மூலமாக வெளிநாட்டு வங்கிகள் தங்களு டைய கிளையை நிர்வகிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஒரே விதிமுறையில் செயல்படும் எனக் கருதியது.

டி.பி.எஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மொரீஷியஸ் தவிர மற்ற பெரிய வங்கிகள் எதுவும் இந்தியாவில் துணை நிறுவனம் உருவாக்கி, அதன் மூலம் இந்தியா வில் செயல்பட வேண்டும் எனக் கருதவில்லை. இந்தியாவில் துணை நிறுவனம் தொடங்கும் பட்சத்தில், கூடுதல் நிதி தேவைப் படும். தவிர, இந்திய விதிமுறைகள் குறிப்பாக, முன்னுரிமைக் கடன் வழங்குவது வெளிநாட்டு வங்கி களுக்கு பெரிய சிக்கலாக உருவாக லாம் என்பதால், வெளிநாட்டு வங்கிகள் ஏற்கெனவே இருக்கும் முறையில் செயல்படவே விரும்பின. இதனால் இந்தியாவில் புதிய கிளைகளைத் தொடங்க வெளிநாட்டு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பெரிய அளவில் அனுமதி வழங்கவில்லை.

அடுத்து என்ன?

இந்த இரு வங்கிகளும் இந்தியாவை விட்டு வெளியேற முடிவெடுத்தாலும், தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தவிர, ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, இந்த வங்கிகள் ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்படும். தற்போது சிட்டி வங்கியை வாங்க ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டி.பி.எஸ். கோட்டக், ஹெச்.டி.எஃப்.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல வங்கிகள் போட்டியிடுவதாகத் தெரிகிறது. பெரிய வாடிக்கையாளர்கள், குறைவான வாராக் கடன் மற்றும் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங் களால் சிட்டி வங்கியை வாங்க பல வங்கிகள் போட்டி போடுகின்றன. தவிர, வங்கி யையும் கிரெடிட் கார்டு பிரிவை யும் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்யவும் சிட்டி பேங்க் திட்டமிட்டிருக்கிறது.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தை யிலும் வெளிநாட்டு நிறுவனங்களால் ஜொலிக்க முடியாத நிலையில், அந்த நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு வெளியேறியதுபோல, இப்போது வங்கித் துறையிலும் நடக்கத் தொடங்கியிருக்கிறது!