Published:Updated:

ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தைக் குறைக்குமா ரிசர்வ் வங்கி?

இந்த ஆண்டில் ஏற்கெனவே, நான்கு முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

RBI
RBI

நாட்டின் பொருளாதார நிலை மேம்படாத காரணத்தால் இந்த ஆண்டிலேயே ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தைக் குறைப்பதற்கு ஆர்.பி.ஐ முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ரெப்போ விகிதம் குறைப்பு நடவடிக்கை, நாளை (4, அக்டோபர், 2019) வெள்ளியன்று நடைமுறைக்கு வருமென்று தெரிகிறது.

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமா? - தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி!

ஒரு நாட்டின் பொருளாதார நிலையை, பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்காக, அந்த நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தைக் குறைப்பது உலகளவில் இருக்கும் வழக்கம். அப்படிக் குறைக்கும்போது, அதைச் சார்ந்துள்ள மற்ற வங்கிகள் அனைத்தும் பலனடையக்கூடும். அந்தப் பலனை, வங்கிக்கடன் வட்டியைக் குறைப்பதன் மூலமாக, மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். அதன் எதிரொலியாகப் பொருளாதாரம் மேம்படும்.

ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?!

இந்தியாவைப் பொறுத்தவரை, வழக்கமாக, ஓர் ஆண்டுக்கு அதிகபட்சம் 4 முறை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கும். இந்த ஆண்டில் ஏற்கெனவே 4 முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது. வங்கிகளையும் வட்டி விகிதத்தைக் குறைக்கும்படி வலியுறுத்தியது. எனினும், நாட்டின் பொருளாதார மந்தநிலையில் எவ்வித மேம்பாடும் காணப்படாததால், மீண்டும் ஒருமுறை ரெப்போ விகிதத்தை மாற்றியமைக்கவுள்ளதாகத் தெரிகிறது.

RBI
RBI

வழக்கமாக, ரெப்போ விகிதத்தை மாற்றியமைக்கும் முடிவை மத்திய நிதிக்கொள்கைக்குழு முடிவெடுக்கும். நாளை, வெள்ளியன்று நிதிக்கொள்கைக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில், தற்போதுள்ள வட்டி விகிதமான 5.40% என்ற அளவிலிருந்து 0.25% குறைத்து 5.15% ஆக நிர்ணயிக்கவுள்ளதாகத் தெரிகிறது. அதன்பின், வங்கிகளும் வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும். அதன் பலனாகப் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.