நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நியோ பேங்க்... முழுக்க முழுக்க ஆன்லைன் சேவை..! எந்த அளவுக்கு பயன்தரும்..?

நியோ பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
News
நியோ பேங்க்

F I N T E C H

கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார உலகில் மட்டும் நாம் கண்ட மாற்றங்கள் எத்தனை, எத்தனை! பாரம்பர்ய வங்கிக் கிளைகளின் முக்கியத்துவம் குறைந்து இன்டர்நெட் பேங்கிங் விரிவடைந்தது. அரசு வங்கிகளும், தனியார் வங்கி களும் கோலோச்சிய இடத்தில் என்.பி.எஃப்.சி, பேமென்ட் வங்கிகள், ஃபின்டெக் கம்பெனிகள் என்று பொருளாதார சேவை நிறுவனங்கள் பல்கிப் பெருகியுள்ளன. அடுத்த பத்து ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியும், மிகுந்த முக்கியத்துவமும் பெற இருக்கும் ஆன்லைன் பிளாட் ஃபார்ம்கள் இரண்டு. அவை, நியோ பேங்க் மற்றும் ரோபோ அட்வைஸர்.

சுந்தரி ஜகதீசன் 
சுந்தரி ஜகதீசன் 

நியோ பேங்க் என்றால்...

அரசு வங்கிகளும், தனியார் வங்கி களும் வழக்கமான வங்கிச் சேவை, ஆன்லைன் சேவை என்று இரண்டு வித சேவைகள் வழங்கும் நிலையில், முழுக்க முழுக்க டிஜிட்டல்மயமாக வருவது நியோ பேங்க் எனப்படும் ஆன்லைன் வங்கிகள். இவற்றை மொபைல் அல்லது இன்டர்நெட் மூலமாக ஆன்லைனில் மட்டுமே அணுக முடியும். 24/7 எனப்படும் இடைவிடாத சேவை இவற்றின் சிறப்பு.

இந்தப் புதுமையான ஸ்டார்ட் அப்களுக்கு ரிசர்வ் பேங்க் கட்டுப் படுத்தப்பட்ட லைசென்ஸ் (Restricted License) மட்டுமே வழங்கியிருப்பதால், இவை புதிய தலைமுறை வங்கி களுடன் கைகோத்திருக்கின்றன. அந்த வங்கிகளால் தர இயலாத சில அபூர்வ சேவைகளை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் உதவியுடன் நியோ பேங்க் வழங்குகிறது.

கூகுள்பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே பணப் பரிமாற்றத்தை டிஜிட்டல் வடிவமாக்கிவிட்ட நிலையில், அவற்றைத்தாண்டிச் சென்று புதுமையான சேவைகள் வழங்க வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனங் களுக்கு இருக்கிறது. ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு இந்தந்த சேவைகள் தேவைப்படும் என்று முன்கூட்டியே யூகித்து அவற்றை வரிசைகட்டுவது இந்த நியோ பேங்கின் சிறப்பம்சம்.

உதாரணமாக, உங்கள் வங்கி அக்கவுன்ட்டில் ரூ.10,000 உபயோகிக்கப்படாமல் நீண்டகாலம் இருக்குமேயானால், நியோ பேங்கின் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்து, முதலீடு செய்யும்படி தூண்டும். இப்படி ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவருக்கேயான ஸ்பெஷல் சேவைகள் தரப்படுகின்றன.

வாடிக்கையாளர் ஒரு மாணவர் என்றால், அவரின் வரவைக் கணக்கெடுத்து, அவருக்கான பட்ஜெட் பற்றியும், வரக்கூடிய செலவுகள் பற்றியும் முன்னறிவிக்கும். ஹாஸ்டலில் தங்கிச் செலவை பிற மாணவர்களுடன் பகிர்பவரானால், செலவுகளில் அவரின் பங்கை பட்டியலிட்டுக் காட்டும். பிசினஸில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களுடைய பிசினஸ் அக்கவுன்ட்டைப் பராமரிப் பதுடன், கம்பெனியின் இன்வாய் ஸைத் தயார் செய்வது, அதில் வந்த வருமானத்தைத் தனியாக வரவு வைப்பது என்று பலவிதப் பொறுப்பு களையும் கையாள்கிறது.

இன்ஸ்டன்ட்பே என்னும் நியோ பேங்க், புதிய தலைமுறை வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவை வழங்குகிறது. வழக்கமான சேவைகளுடன், இன்ஷூரன்ஸ், பயண ஏற்பாடுகள் ஆகியவற்றையும் மேற்கொள்வது இதன் சிறப்பம்சம்.

நியோ பேங்க்... முழுக்க முழுக்க
ஆன்லைன் சேவை..! எந்த அளவுக்கு பயன்தரும்..?

2015-ல் தொடங்கப்பட்ட நியோ என்னும் ஆன்லைன் பேங்க், மிகக் குறைந்த மாதச் சம்பளக்காரர்களுக்கும் வங்கிச் சேவை கிட்டும்படி செய்கிறது. சேவிங்ஸ் அக்கவுன்ட்டுகளுக்கு அதிக வட்டி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு 0% கமிஷன் என வாடிக்கையாளர்களுக்கு லாபகரமாக இருப்பதுடன், நியோ பாடசாலா என்பதை அமைத்து, இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்துக்கு ஆன்லைன் வங்கிச் சேவைகளை உபயோகிக்கும் முறை பற்றியும் கற்பிக்கிறது.

2017-ல் பெங்களூருவில் தொடங்கப் பட்ட ஓப்பன் என்னும் நியோ பேங்க் சிறிய பிசினஸ்களுக்கும், ஸ்டார்ட்அப்களுக்கும் மிக உதவியாக இருக்கிறது. இன்வாய்ஸ்களை உருவாக்கி, அதில் தொகை செலுத்து வதற்கு பேமென்ட் லிங்க்குகளையும் அனுப்புகிறது. இதனால் சிறிய கம்பெனிகளுக்கு வரவேண்டிய தொகைகளை இரண்டே நிமிடங் களில் வசூல் செய்ய முடிகிறது.

ரேசர்பேஎக்ஸ் அநேகமாக அனைவருக்கும் பரிச்சயமான பெயர். பல்லாயிரக்கணக்கான சிறிய பிசினஸ்களுக்கு கரன்ட் அக்கவுன்ட் உட்பட பலவித சேவைகள் தருகிறது. இது உருவாக்கும் தகவல் அறிக்கைகள் (Reports) மிகவும் விரும்பப்படுகின்றன. வங்கிக் கணக்குகளுக்கோ, கிரெடிட் கார்டுகளுக்கோ, யுபிஐ பேமென்ட்டு களுக்கோ உடனடி ரீஃபண்ட் வழங்குவதில் இது கில்லாடி.

நியோ பேங்குகள் வங்கித் துறையில் ஒரு புரட்சியைக் கொண்டு வருகின்றன என்றே கூறலாம்.

நியோ பேங்க்
நியோ பேங்க்

ரோபோ அட்வைஸர்கள்...

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இன்று ஹாட் டாபிக் இந்த ரோபோ அட்வைஸர்கள்தாம். வெல்த் அட்வைஸர்கள் எனப்படும் பொருளாதார ஆலோசகர்கள், நம் வயது, குறிக்கோள்கள், வருமானம், செலவு, சேமிக்கும் தொகை, எதிர்பார்க்கும் வட்டி, ரிஸ்க் எடுக்கக் கூடிய திறன் போன்றவற்றைக் கணித்து நாம் எங்கெங்கு முதலீடு செய்யலாம் என்று அறிவுரை கூறுவார்கள்.

நம் வசதிக்குத் தகுந்தாற்போல் நள்ளிரவுகூட இவற்றின் உதவியை நாடலாம். இந்த பிளாட்ஃபார்ம்களில் காணப்படும் ஃபைனான்ஷியல் கால்குலேட்டர்கள், 30 வருடங்கள் கழித்து ரிட்டையர்ட் ஆக மாதம்தோறும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான கணக்குகளை எளிதாக்குகின்றன. வரிச் சேமிப்பு, செல்வம் சேர்த்தல், எமர்ஜென்சி ஃபண்ட் போன்ற தேவைகளுக்கு ரோபோ அட்வைஸர்கள் தீர்வு அளிக்கின்றன. கட்டுரைகள் மற்றும் வெபினார் மூலம் தங்கள் வாடிக்கை யாளர்களின் பொருளாதார அறிவையும் பெருக்க உதவுகின்றன. இவற்றில் சில எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. இன்னும் சில, மாதம் ரூ.999 வரை வசூலிக்கின்றன.

ரோபோ அட்வைஸர்களிடம் குறைகள் இல்லாமல் இல்லை. ஹ்யூமன் டச் எனப்படும் மனித நேயத்தை இவற்றிடம்எதிர்பார்க்க முடியாது. சில ரோபோ அட்வை ஸர்கள் வாடிக்கையாளரைப் பற்றித் தீர்க்கமாக அறிந்து கொள்ளாமல், எவ்வளவு எஸ்.ஐ.பி போட முடியும், எத்தனை வருடம் போடலாம் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றன. இன்னும் சில ரோபோ அட்வைஸர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் பெறுவதால், எவ்வளவு தூரம் பாரபட்சமற்று செயல்பட இயலும் என்பது தெரியவில்லை.

கல்வி, மருத்துவம், வியாபாரம், சினிமா, டிவி என்று அத்தனையும் மனிதத் தொடர்பின்றி நடைபெறும் கொரோனா யுகத்தில் பொருளா தாரமும் முதலீடுகளும் கூட இயந்திரமயமாக்கப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. மில்லினியல்கள் எனப்படும் இளைய தலைமுறைக்கு இவற்றை இயக்குவது தண்ணீர் பட்டபாடு. ஆனால், இன்னும்கூட ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தெரியாமல் திண்டாடும் பெரு வாரியான மக்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை!