Published:Updated:

வாராக்கடன் வசூலில் பேட் பேங்க்! எந்த அளவுக்குக் கைகொடுக்கும்..?

பேட் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
பேட் பேங்க்

B A D B A N K

வாராக்கடன் வசூலில் பேட் பேங்க்! எந்த அளவுக்குக் கைகொடுக்கும்..?

B A D B A N K

Published:Updated:
பேட் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
பேட் பேங்க்

ஒவ்வொரு தொழிலிலும் ரிஸ்க் இருந்தாலும், வங்கித் தொழிலில் இது மிக அதிகம். ஏனெனில், வாராக் கடன்கள் வங்கிகளின் லாபத்தில் பெரும் பங்கை விழுங்கிவிடுகின்றன. ஏற்கெனவே உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மட்டுப்பட்ட சூழலில் கொரோனாவும் சேர்ந்து வாராக்கடன் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

தொழிலாளர்கள் சொந்த ஊருக்குப் பெருமளவில் சென்றது, மூலப்பொருள்களின் விலை உயர்வு, தொழிற்சாலைகளுக்கு பலவித அனுமதிகளை வாங்குவதில் ஏற்படும் தாமதம், நில ஆர்ஜிதம் செய்வதில் உள்ள தடைகள் - இப்படி திரும்பிய இடங்களில் எல்லாம் பிரச்னைகள் முளைத்ததில் டெலிகாம், ஆடை தயாரிப்பு, ரியல் எஸ்டேட், எரிசக்தி என்று எல்லாத் துறை நிறுவனங்களும் வருமானமின்றி திக்குமுக்காடிப் போயின. விளைவு, கடன் கட்ட இயலாமை. இதைப் புரிந்துகொண்ட அரசாங்கமும் ஆறு மாத காலம் கடன் சலுகைக் காலத்தை அறிவித்தது.

ஆனாலும், பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் தொகை ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ‘‘கோவிட்டுக்கு முன் ரூ.22.2 லட்சம் கோடியாக இருந்த வாராக் கடனுடன், ரூ.15.52 லட்சம் புதிய வாராக் கடனும் சேர்ந்து, மொத்தத் தொழில் துறை கடனில் 72% வாராக் கடன் ஆகும் சாத்தியம் உள்ளது’’ என்று கே.வி.காமத் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் பேட் பேங்க்கைத் (வாராக்கடன்களை நிர்வாகம் செய்யும் வங்கி) தொடங்கும் எண்ணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார், இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks’ Association) இதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. இது உண்மையில் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனம்தான் (Asset Management Company). என்.ஏ.ஆர்.சி.எல். (National Asset Reconstruction Company Ltd.) என்றழைக்கப்படும் இது, முழுக்க முழுக்க துறை வல்லுநர்களால் நடத்தப்படும்.

வாராக்கடன் வசூலில் பேட் பேங்க்! எந்த அளவுக்குக் கைகொடுக்கும்..?

வங்கிகளிடம் இருந்து மிகப்பெரும் வாராக்கடன்களை சலுகை விலை யில் பெறும் என்.ஏ.ஆர்.சி.எல், மொத்தத் தொகையில் 15 சதவிகி தத்தை உடனடியாகப் பணமாக வங்கிகளுக்குத் தரும். மீதி 85 சதவிகிதத்துக்கு எஸ்.ஆர் எனப்படும் செக்யூரிட்டி ரசீதுகளைத் தரும். இந்த ரசீதுகளுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உண்டு.

பழைய கடனாளர்களிடம் இருந்து கடன் வசூல் அல்லது புது முதலீட் டாளர்களுக்கு கடன் விற்பனை போன்ற அதிரடி முறைகள் மூலம் என்.ஏ.ஆர்.சி.எல் ஐந்து வருடங் களுக்கு உள்ளாக இந்தக் கடன்களை வசூலித்து வங்கிகளுக்கு மீதிப் பணத்தைத் தந்தபின் கலைக்கப் பட வேண்டும் என்பதே இந்த பேட் பேங்கின் கருத்தாக்கம் (Concept).

இப்படி வாராக்கடன்களைத் தனிப்படுத்தி, அவற்றை வசூலிப்பது மட்டுமே வேலை என்றாகும்போது பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. அத்துடன் மற்ற வங்கிகளின் பேலன்ஸ்ஷீட்டும் சீர்படும். இதனால், வங்கி முழுகிவிடுமோ என்ற பயம் டெபாசிட்தாரர்களுக்கு இல்லாத அளவுக்கு வங்கிகள் பலப்படும். வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடு செய்யும் அவசியம் இல்லாமல் போவதால், நிதியின்றி தத்தளிக்கும் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர இயலும். அவ்வப்போது வங்கிகளுக்கு மூலதனம் வழங்கும் சிரமும் அரசாங்கத்துக்கு இருக்காது.

இதுபோன்ற நன்மைகளைக் கணக்கிட்டு தொடங்கப்படும் இந்த பேட் பேங்கில் 500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மிகப்பெரும் வாராக் கடன் கணக்குகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். முதற்கட்டமாக, 22 வாராக்கடன் அக்கவுன்ட்டுகள் மட்டுமே என்.ஏ.ஆர்.சி.எல்-க்கு வருகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8,000 கோடி மதிப்புள்ள வாராக் கடனையும், யூனியன் வங்கி ரூ.7,800 கோடி மதிப்புள்ள வாராக்கடனையும் என்.ஏ.ஆர்.சி.எல்லுக்கு விற்க உள்ளன.

என்.ஏ.ஆர்.சி.எல்லுக்கு தற்போது உள்ள சிக்கல், முதலீட்டுக்கான பணம் திரட்டுவதுதான். பெரிய பொதுத்துறை வங்கிகளும், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷனும் (REC) தலா 10% அளவு முதலீடு செய்ய முன்வந்துள்ளன. தனியார் வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது.

நம் நாட்டைப் பொறுத்தளவில், இது புது முயற்சியாக இருந்தாலும், உலக அளவில் பல நாடுகள் இதை முன்பே மேற்கொண்டுள்ளன. 1988-ல் முதன் முறையாக அமெரிக்காவில் மெலான் வங்கியின் வாராக்கடன்களை வசூலிக்க கிராண்ட் ஸ்ட்ரீட் நேஷனல் வங்கி என்ற தனியார் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. ஏழே வருடங்களில் தன் பணியை நிறைவு செய்த அந்த நிறுவனம் வெற்றிகரமாகக் கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்வீடன், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இது போன்ற நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பல வெற்றியையும், சில தோல்வியையும் கண்டன.

மிகப்பெரிய அளவில் தோல்வியைத் தழுவியது சீனாவின் பேட் பேங்குகள்தான். அங்கிருந்த நான்கு பெரிய வங்கிகளுக்கும் தனித்தனியாக நான்கு பேட் பேங்குகளைத் தொடங்கியது. 2012-ல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பேட் பேங்கை நியமித்த சீன அரசு, 2016-ல் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது. 2019 முடிவதற்குள் மொத்தம் 59 பேட் பேங்குகள் உருவாகிவிட்டன.

சீனா ஹுராங் ஏ.எம்.சி என்பது ஹாங்காங்கில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஒரு பேட் பேங்க். இதன் முதன்மைச் செயலாளர் லாய் ஸியவொமின் கையூட்டு, ஊழல், பலதார மணம் போன்ற தீயசெயல்களில் ஈடுபட்டு வங்கியின் அடித்தளத்தையே அசைத்ததால் சமீபத்தில் அவருக்கு சீன அரசாங்கம் மரண தண்டனை விதித்தது. இது போன்ற சில பேட் பேங்குகள் தங்கள் எல்லையை மீறி இன்ஷூரன்ஸ், ரியல் எஸ்டேட், தகுதியற்றவர்களுக்கு கடன் தருதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு நிஜமாகவே பேட் பேங்குகளாக மாறின.

ஆகவே, இந்த பேட் பேங்க் பற்றி மக்கள் நடுவில் பல்வேறு கருத்துகள் உலவுகின்றன. வாராக்கடன்களை பேட் பேங்குக்கு மாற்றிய பின் வங்கிகள் மீண்டும் தங்கள் மெத்தனப் போக்கைத் தொடரலாம் என்ற பயமும் தென்படுகிறது.

ஆனால், வாராக்கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முழு மூச்சாகச் செயல்படுகின்றன. சமீபத்தில் மல்லையா, நிரவ் மோடி, சொக்ஸி போன்றவர் களின் சொத்துகள் அமலாக்க இயக்குநரகத்தால் கையகப் படுத்தப்பட்டு 22,000 கோடி ரூபாய் வங்கிகளுக்கு திரும்பி யுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் துரிதப்படுத்தப்படும் என்று ஸ்டேட் வங்கியின் தலைவர் கூறியுள்ளார்.

ஆகவே, பேட் பேங்க் என்னும் வழியையும் முயன்று பார்ப்பதில் தவறில்லை. ஆனால், சீனா போல் ஆகிவிடாமல், அமெரிக்கா போல் வெற்றிகரமாக நடத்தி பேட் பேங்க் உதவியுடன் நம் வங்கிகளை குட் பேங்காக மாற்ற முடிந்தால் மக்களுக்கு வங்கிகள் மீதிருக்கும் வருத்தம் குறையும்; மரியாதை உயரும். வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கும் பயம் வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism