நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சுலபமாக வங்கிக் கடன் கிடைக்க உங்களிடம் 4C-க்கள் இருக்கிறதா..?

 வங்கிக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கிக் கடன்

வங்கிக் கடன்

எந்தக் கடனாக இருந்தாலும் கடன் வழங்கும் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் நான்கு ‘C’-க்களை முக்கியமாகக் கவனிக்கும். அந்த ‘C’-க்கள் Credit Score, Capacity, Character, Collateral ஆகியவை ஆகும். இவற்றின் முக்கியத்துவம் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர், https://www.wmsplanners.com

கிரெடிட் ஸ்கோர் (Credit Score)

கடன் கிடைப்பதில் கிரெடிட் ஸ்கோர்தான் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒருவருக்குக் கடன் கொடுக்கும்போது, வங்கி அல்லது நிதி நிறுவனம் முதலில் கவனிப்பது கிரெடிட் ஸ்கோரைத்தான். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். அல்லது கடனுக்கான வட்டி அதிகமாக நிர்ணயிக்கப்படும். கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடன் விரைந்து வழங்கப்படுவதுடன் வட்டியும் குறைவாக இருக்கும்.

அனைத்துக் கடன் தகவல் அமைப்புகளும் இலவசக் கடன் அறிக்கையை ஆண்டுக்கு ஒரு முறை அனை வருக்கும் இலவசமாக வழங்க ஆர்.பி.ஐ அறிவுறுத்தி யுள்ளது. அதன்படி, நீங்கள் இலவச கிரெடிட் ஸ்கோர் பார்க்கும் வசதியைப் பயன்படுத்தி, உங்களின் கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு, கடனுக்கு விண்ணப்பம் செய்வது நல்லது. கிரெடிட் ஸ்கோர் என்பது 300-ல் தொடங்கி 900 வரை செல்கிறது. எந்த ஸ்கோருக்கு எப்படிக் கடன் கிடைக்கும் என்கிற விவரம் வருமாறு:

கிரெடிட் ஸ்கோர் 751 - 900: * சிறந்த கிரெடிட் ஸ்கோர் * அனைத்து வங்கிகளும் நிறுவனங்களும் கடன் வழங்கும் * குறைந்த வட்டியில் கடன்களைப் பெற அதிக வாய்ப்பு.

கிரெடிட் ஸ்கோர் 701 - 750: * நல்ல கிரெடிட் ஸ்கோர் * பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். * நியாயமான வட்டியில் கடன் கிடைக்கும்.

கிரெடிட் ஸ்கோர் 550 - 700: * ஓரளவு குறைந்த கிரெடிட் ஸ்கோர் * பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பதைத் தவிர்க்கும். * அப்படியே கிடைத் தாலும் வட்டி அதிகமாக இருக்கும். * கடன் பெறக் கடன் வரலாற்றில் முன்னேற்றம் தேவை.

கிரெடிட் ஸ்கோர் 550-க்கு குறைவு: * கடன் பெறுவது மிகவும் கடினம் * அப்படியே கிடைத்தாலும் மிக அதிக வட்டி நிர்ணயம் செய்வார்கள்.

சுலபமாக வங்கிக் கடன் கிடைக்க
உங்களிடம் 4C-க்கள் இருக்கிறதா..?

கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் (Capacity)

கடன் கொடுக்கப்போகும் வங்கி, நிதி நிறுவனம் அடுத்து கவனிக்கும் விஷயம், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகும். கடன் வாங்குபவருக்கு, கடனுக்குரிய மாதத் தவணையை மாதம்தோறும் சிக்கல் இல்லாமல் செலுத்தும் அளவுக்குச் சம்பளம் / வருமானம் இருக்கிறதா என்று கவனிக்கப்படும். அதற்கான வருமான ஆதாரங்களான சம்பளச் சான்று, வருமான வரி கணக்குத் தாக்கல் விவரம் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கை ஆகியவற்றைக் கேட்டுப் பெறப்படும். இதன் அடிப்படையில் கடன் தொகை நிர்ணயிக்கப்படுவதுடன், கடன் வழங்கப்படும்.

சுலபமாக வங்கிக் கடன் கிடைக்க
உங்களிடம் 4C-க்கள் இருக்கிறதா..?

நடத்தை (Character)

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நீங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மையுள்ளவர் என்பதைக் கடன் வழங்கும் நிறுவனம் உங்கள் நிறுவனத்தில் விசாரிக்கக்கூடும். மேலும், நீங்கள் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் எந்த அளவுக்குச் சேமிக்கிறீர்கள், செலவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கடன் வழங்குவது முடிவு செய்யப்படும்.

உதாரணமாக, இரு நண்பர்கள், ஒரே நிறுவனத்தில் பணிபுரி கிறார்கள். இருவரும் கிட்டத் தட்ட ஒரே அளவில் சம்பளம் வாங்குகிறார்கள் எனில், யார் அதிகமாகச் சேமிக்கிறாரோ, அவருக்குச் சுலபமாகக் கடன் கிடைக்கக்கூடும்.

பிணை (Collateral)

வாங்கும் கடனுக்கு இணை யாகக் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் பிணை / ஜாமீன் ஏதாவது கொடுக்க வலியுறுத்துவது வழக்கம். தனிநபர் கடனைத் தவிர, அனைத்துக் கடன்களுக்கும் ஏதாவது பிணை கேட்கப்படும். வீட்டுக் கடன் என்கிறபோது சொத்துப் பத்திரம் அடமானம் வைக்கப்படுகிறது. கார் கடன் என்கிறபோது காரின் ஆர்.சி புத்தகம், கடனை முழுமையாக அடைக்கப்படும் வரை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் அடமானமாக இருக்கும். தங்க நகைக் கடன் எனில், நகையானது வங்கியின் லாக்கரில் இருக்கும். ஃபிக்ஸட் டெபாசிட் மீது கடன் வாங்கினால், அதற்கான ஆவணமானது வங்கி அல்லது நிதி நிறுவனம் வசம் இருக்கும்.

இந்த நான்கு ‘C’-க்களும் ஒருவர் வசம் இருக்கும்பட்சத்தில், வீட்டுக் கடன் உள்ளிட்ட எந்தக் கடனும் சுலபமாகக் கிடைக்கும்.