பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பர்சனல் லோன் வாங்கப் போகிறீர்களா..? கைகொடுக்கும் எச்சரிக்கை டிப்ஸ்...

பர்சனல் லோன்
பிரீமியம் ஸ்டோரி
News
பர்சனல் லோன்

பர்சனல் லோன்

இன்றைக்கு நம் எல்லோருக்கும் ‘பர்சனல் லோன் வேண்டுமா..?’ என எஸ்.எம்.எஸ் வருகின்றன; போன் மூலமும் வங்கி ஊழியர்கள் நம்மைத் தொடர்புகொண்டு கேட்பது மிகச் சாதாரணமாகிவிட்டது.

அனைத்துத் தேவைகளுக்கும் உடனடியாக உதவுகிற ஒரு வகை கடன் எனில், அது தனிநபர் கடன் தான் (Personal loan). ஒருவர் திருமணம் செய்துகொள்ள விரும்பினாலும், விடுமுறைக்குச் செல்ல விரும்பினா லும், பண்டிகையைக் கொண்டாடத் திட்டமிட்டாலும் இந்தத் தனிநபர் கடன் கைகொடுத்து வருகிறது.

த.ராஜன் 
நிதி ஆலோசகர் 
Holisticinvestment.in
த.ராஜன் நிதி ஆலோசகர் Holisticinvestment.in

இந்தக் கடன் பலரையும் கவர்ந்த கடனாக இருக்கக் காரணம், இது சுலபமாகவும், விரைவாகவும் கிடைப்பதுதான். அசையும் அல்லது அசையா சொத்து ஜாமீன் இல்லாமல் கிடைப்பது, எந்தக் காரணத்துக்கும் இந்தக் கடனை வாங்கிக்கொள்ளலாம் என்கிற காரணங்களும் இதற்கு முக்கியமானதாக இருக்கின்றன.

மிகக் குறைவான ஆவணங்கள் இருந்தாலே போதும், இந்தக் கடனை வாங்கிவிடலாம். உங்களுக்கு ஏற்கெனவே வங்கி சேமிப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு இருந்தால், கூடுதல் ஆவணங்கள் இல்லாமலேயே தனிநபர் கடன் கிடைத்துவிடும்.

இந்தக் கடனானது அதிகபட்சம் ஓரிரு வாரங்களுக்குள் கடன் வழங்கப்பட்டுவிடும். கடனைத் திருப்பிச் செலுத்த பொதுவாக, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை கால அவகாசம் கிடைக்கும்.

எந்த ஜாமீனும் இல்லாமல் அதிக ஆவணங்கள் இல்லாமல் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஏன் இந்தக் கடனைத் தருகின்றன, இந்தக் கடனில் அதிக ரிஸ்க் இருந்தாலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏன் கடன் தருகின்றன..?

தேவையான ஆவணங்கள்...

முதலில், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் எவை என்று பார்ப்போம்.

* புகைப்பட அடையாளச் சான்றுக்காக ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டி வரும்.

* முகவரிக்கான ஆதாரமாக ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, மின்சாரம் / தொலைபேசி ரசீது, சமையல் எரிவாயு ரசீது, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகவரி பக்கம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

* நீங்கள் பணிபுரிகிறீர்கள் எனில், உங்கள் சம்பளச் சீட்டு, படிவம் 16 அல்லது வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரம் மற்றும் ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கையை வழங்க வேண்டும். சுயதொழில் செய்பவர் மூன்று வருடக் கணக்கு அறிக்கை / வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தற்கான ஆதாரம் ஆகியவற்றை வருமானச் சான்றாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, மேலே கண்ட சான்றுகளை வழங்கும்போது உண்மையில் உங்கள் செல்வநிலையின் புளூபிரின்ட்டை வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு வழங்குகிறீர்கள். அதே நேரத்தில், உங்களுக்குக் சம்பளக் கணக்கு இருக்கும் வங்கியில் தனிநபர் கடன் வாங்கு கிறீர்கள் எனில், மேற்கண்ட ஆவணங்கள் எதையும் கேட்பதில்லை. காரணம், உங்களைப் பற்றி அனைத்து விவரமும் அவர்களிடம் ஏற்கெனவே இருக்கும். இதனால், நாம்தான் ஜாமீன் எதுவும் கொடுக்கவில்லையே என நீங்கள் கடன் வாங்கிவிட்டு, கடனைக் கட்டாமல் இருக்க முடியாது. கடனை சரியாகக் கட்டவில்லை எனில், அதிக இழப்பு உங்களுக்குத்தான். காரணம், பான் எண் அடிப்படையில் கடன் தரப்படுவதால், உங்களில் கிரெடிட் ஸ்கோர் குறைந்து அடுத்து வேறு கடன் எதுவும் வாங்க முடியாத நிலை உருவாகி விடும்.

பர்சனல் லோன் வாங்கப் போகிறீர்களா..? கைகொடுக்கும் எச்சரிக்கை டிப்ஸ்...

வட்டி விகிதத்தைக் கவனியுங்கள்...

எந்தத் தேவைக்கும் தனிநபர் கடனை வாங்கிக்கொள்ளலாம்; ஜாமீன் எதுவும் கொடுக்கத் தேவையில்லாத கடன். ஆனால், இந்தக் கடனுக்கு வசூலிக்கப்படும் வட்டி மிக அதிகம். அதாவது, ஆண்டுக்கு சுமார் 16% - 28% வரை வட்டி இருக்கும். இந்த வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.

சம்பளத்தாரரைவிட சுயதொழில் செய்பவர்களுக்கு வட்டி 1% அல்லது 2% கூடுதலாக இருக்கும். காரணம், அவர்கள் கடனைக் கட்டாமல் போக அதிக வாய்ப்பிருப்பதே. மற்றவர் களைவிட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைவான வட்டியில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. அவர்களின் திரும்பச் செலுத்தும் திறன், கிரெடிட் ஸ்கோர் போன்றவை அதிகம் இருப்பதே இதற்குக் காரணம்.

ஒருவர் அவரின் பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் எண்டோவ் மென்ட் பாலிசி ஆகியவற்றை அடமானமாகத் தந்து, உங்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதுடன், வட்டியையும் குறைக்க முடியும்.

இதர கட்டணங்கள் எவ்வளவு..?

தனிநபர் கடன் வாங்கும்போது முக்கியமான செலவுகளில் வட்டி மிக முக்கியமானது. ஆனால், இதர செலவுகளின் விவரம் வருமாறு...

தனிநபர் கடன் பரிசீலனை மற்றும் நடைமுறைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். இது கடன் தொகையில் 0.5% முதல் 3% வரை இருக்கலாம். கடன் வழங்கப் பட்டால் இந்தக் கட்டணம் திரும்பத் தர மாட்டார்கள். உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டால், பகுதி கட்டணம் திருப்பித் தரப்படும். எனவே, உங்களுக்கு முழுத் தகுதி இருக்கிறதா, அவர்கள் கேட்கும் ஆவணங்களை எல்லாம் தர முடியுமா, அவர்களின் நிபந்தனைகளை எல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்தப் பிறகு பரிசீலனைக் கட்டணத்தைக் கட்டுவது நல்லது.

தனிநபர் கடனை முன்கூட்டியே செலுத்தினால், அபராதம் விதிக்கப்படும். இது பாக்கி உள்ள கடன் தொகையில் 5% வரை இருக்கும்.

ஆவணக் கட்டணம், தாமத கட்டணம், நகல் அறிக்கை கட்டணம், சேவை வரி போன்ற பல கட்டணங்களை வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களிடம் வசூலிக்கக்கூடும்.

தனிநபர் கடன் சில சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும். எப்படி தெரியுமா?

அதிக வட்டிக் கடனை அடைத்தல்

ஒருவர் தன் தங்கையின் திருமணத்துக்குத் தனிநபர் ஒருவரிடமிருந்து ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு மாதத்துக்கு 25% வட்டி எனில், மாதம் ரூ.2,500 வீதம் ஆண்டுக்கு ரூ.30,000 வட்டி செலுத்த வேண்டும். இந்த நிலையில், 18% வட்டியில் ரூ.1 லட்சம் தனிநபர் கடன் வாங்கி, அதை இரண்டு ஆண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக இருந்தால், மாதத் தவணை ரூ.4,992 ஆகும். இரண்டு ஆண்டுகளில் கடனை அடைத்திருப்பதுடன், வட்டியாக ரூ.19,818 மட்டுமே கட்டியிருப்பார். தனியார் கடனுக்கு ஓராண்டு கட்டிய வட்டி 30,000 ரூபாயுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும்.

அதிக வட்டி மற்றும் அதிக கிரெடிட் கார்டு கடனை அடைத்தல்

கிரெடிட் கார்டு கடன் பெரிய தொகையாக இருந்தால் அதை அடைக்க தனிநபர் கடனைப் பயன்படுத்துவது லாபமாக இருக்கும். கிரெடிட் கார்டு கடனில் குறைந்தபட்சத் தொகையை நீண்ட நாள்களுக்குக் கட்டிவரும் பட்சத்தில், மீதித் தொகைக்கு அதிக வட்டி கட்டி வர வேண்டும்.

கிரெடிட் கார்டுக்கான வட்டி மாதத் துக்கு சுமார் 3 - 3.5 சதவிகிதமாக அதாவது, ஆண்டுக்கு 36 - 42 சத விகிதமாக இருக்கும். இதற்குப் பதில், தனிநபர் கடனை வாங்கி, கிரெடிட் கார்டு கடனை அடைக்கும்பட்சத்தில் சுமார் 15 - 25% வட்டியை மிச்சப்படுத்த முடியும்.

அதே நேரத்தில், தேவையில்லாமல் தனிநபர் கடன் வாங்கக் கூடாது. அது உங்கள் நிதி ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்பதை எப்போதும் மறக்கக் கூடாது!