Published:Updated:

ஆன்லைனில் தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் சென்றுவிட்டால், திரும்பப் பெறுவது எப்படி?

வங்கிப் பணப் பரிமாற்றம்

பிரீமியம் ஸ்டோரி

சமீப நாள்களில் வங்கி பணப் பரிமாற்றத்தில் சில பேருடைய வங்கிக் கணக்குகளில் தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்ட செய்திகளைப் படித்திருப்போம். இப்படி, நாம் வேறு ஒருவரின் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பினாலோ, வேறொருவர் நம் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பினாலோ, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வி.தியாகராஜன் 
ஆடிட்டர்,  
www.bizlane.in
வி.தியாகராஜன் ஆடிட்டர், www.bizlane.in

மின்னணு முறையில் வங்கிப் பண பரிமாற்ற வழிமுறைகள்..!

மின்னணு முறையில் வங்கிப் பணப் பரிமாற்றத்துக்கு NEFT, RTGS, IMPS, UPI போன்ற வழிகளில் செய்யலாம். இதில் எந்த வழிகளில் பணப் பரிமாற்றம் செய்தாலும் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. ஆகவே, ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்குப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது, பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கில் உள்ள அவரது பெயர், வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், ஐ.எஃப்.எஸ்.சி கோட் (IFSC Code), யு.பி.ஐ ஐடி (UPI ID) போன்ற விவரங்களை ஒருமுறைக்கு இரண்டுமுறை சரிபார்த்து அதற்குப் பிறகு, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

மற்றவருடைய வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால்...

ஆன்லைன்மூலம் நாம் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது அந்தப் பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கு தொடர்பான மேலே சொல்லப்பட்ட விஷயங்களைத் தவறுதலாகக் குறிப்பிட்டு டிரான்ஸ்ஃபர் செய்கிறீர்கள். உடனே உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்படுகிறது.ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி, ஒரு வங்கிக் கணக்கு எண்ணோ, யு.பி.ஐ ஐடியோ இல்லவே இல்லை எனில், நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்த பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கே ஒன்றிலிருந்து மூன்று நாள்களுக்குள் மீண்டும் தானாகவே கிரெடிட் ஆகிவிடும். அப்படி ஆகவில்லை எனில், நீங்கள் உங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று புகார் அளித்தால், அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் திரும்ப கிரெடிட் செய்துவிடுவார்கள்.

ஒரு வேளை, நீங்கள் பணம் அனுப்ப விரும்புபவர் தொடர்பான எல்லா விவரங் களையும் சரியாகக் குறிப்பிட்டு, உங்கள் வங்கி தவறுதலாக வேறு ஒருவருடைய வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பினால், அது முழுக்க முழுக்க வங்கியினுடைய தவறு என்றாகிவிடுகிறது. அவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று தகுந்த ஆதாரங்களுடன் எழுத்துபூர்வமான புகார் அளித்தால், உங்களுடைய வங்கி உடனே நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றும்.

இதற்கான ஆதாரமாக, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ததற்கான ஸ்க்ரீன் ஷாட், நீங்கள் ஏற்கெனவே உங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ள பணத்தைப் பெறுபவரின் வங்கி விவரங்கள் (Beneficiary Details), அந்தத் தவறு நடந்த குறிப்பிட்ட நாளுக்கான வங்கிக் கணக்குப் புத்தகம் அல்லது அறிக்கையின் நகல், இத்துடன் என்ன தவறு நடந்தது என்பதற்கான விளக்கக் கடிதம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

ஒரே வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் தவறு நடந்தால்..?

நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியும், நீங்கள் தவறுதலாகப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தவரின் வங்கிக் கணக்கும் ஒரே வங்கியாக இருந்தால், நீங்கள் உங்கள் புகாரைத் தகுந்த ஆதாரங்களுடன் வங்கியில் கொடுத்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மீண்டும் கிரெடிட் செய்துவிடுவார்கள். இதில் சில சமயம், தவறுதலாகப் பணம் கிரெடிட் செய்யப்பட்டவரின் ஒப்புதலைப் பெற்று, பிறகு, உங்கள் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணத்தை மாற்றம் செய்து கொடுப்பார்கள். அதற்கு ஒரு சில நாள்கள் ஆகலாம். அதுவரை பொறுமை காப்பது தவிர வேறு வழியில்லை.

ஆன்லைனில் தவறுதலாக வேறு ஒருவருக்கு பணம் சென்றுவிட்டால், திரும்பப் பெறுவது எப்படி?

வேறு வேறு வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் தவறு நடந்தால்..?

உங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியும், நீங்கள் தவறுதலாகப் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தவரின் வங்கிக் கணக்கும் வேறுவேறு வங்கியாக இருந்தால், விஷயம் கொஞ்சம் சிக்கலாகிவிடுகிறது. இதில் இரு வங்கிகள் சம்பந்தப்படுவதால், நீங்கள் உங்கள் வங்கிக்குச் சென்று, தவறான வங்கிக் கணக்குக்குப் பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்து புகார் அளித்தவுடன், தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்ட நபருடைய வங்கியிடம் பேசி, தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். இந்தச் சூழ்நிலையில், தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டவரின் ஒப்புதலைப் பெறாமல், அவருடைய வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஆகவே, இதனால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற இத்தனை நாள்கள் ஆகும் எனத் துல்லியமாகச் சொல்ல முடியாது. சில நாள்கள் முதல் சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

தவறுதலாகப் பணம் பெற்றவர், ஒப்புக்கொள்ள மறுத்தால்..?

தவறுதலாகப் பணம் பெற்ற ஒருவர், வங்கிக் கணக்கிலிருந்து அந்தப் பணத்தைத் திரும்ப எடுக்க ஒப்புக்கொள்ளைவில்லை என்றாலோ, அந்தப் பணத்தை எடுத்து செலவழித்து விட்டாலோ அவர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கையை எடுப்பதைத் தவிர, வேறு வழி யில்லை. இதற்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியும், அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருமே தவிர, சட்டபூர்வ நடவடிக்கையை நீங்கள்தான் எடுக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில், பணத்தைத் திரும்பப் பெற சில நாள்கள் முதல் சில மாதங்கள்கூட ஆகலாம்.

பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை...

* ஏற்கெனவே குறிப்பிட்டபடி, பணத்தைப் பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரங்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின், உங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து, பிறகு, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

* பெரிய தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் முதலில் ஒரு சிறுதொகையை ரூ.50, ரூ.100 என்று டிரான்ஸ்ஃபர் செய்து சம்பந்தப்பட்டவர் களிடம் உறுதி செய்துகொண்டு விட்டு, பிறகு மீதியுள்ள பெரும் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

பணம் டிரான்ஸ்ஃபர் செய்த பிறகு, அந்த ஸ்க்ரீன் ஷாட்டையோ, உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியையோ சம்பந்தப் பட்டவருக்கு அனுப்பி உறுதி செய்துகொள்வது நல்லது.

* நமது வங்கிக் கணக்கில் நடைபெறும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையின்போதும் நமக்கு நம்முடைய மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி வருவதுபோல், வங்கிக் கணக்கில் கண்டிப்பாகப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* தவறுதலாக பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விட்டால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, முதலில் அந்தத் தவறு நடந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் அளித்தும் பலனில்லை எனில், ஆர்.பி.ஐ ஆம்புட்ஸ்மேன் (RBI Ombudsman) பிரிவுக்கு புகார் அளிக்கலாம். இந்தப் புகாரை ஆன்லைன் மூலமாகக்கூட செய்யலாம்.

தவறுதலாக வந்த ‘திடீர்’ பணத்தைச் செலவு செய்யலாமா..?

நம் வங்கிக் கணக்குக்கு வேறு ஒருவர் பணத்தைத் தவறுதலாக டிரான்ஸ்ஃபர் செய்து அது நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால், பலரும் அதை எடுத்துச் செலவு செய்துவிட நினைக்கிறார்கள். ‘இந்தப் பணம் அனாமத்தாக வந்த பணம்தானே... வங்கியில் கண்டுபிடிக்கும் முன், உடனே அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்துவிடுவோம். பணத்தை அனுப்பியவரோ, வங்கியோ கண்டுபிடித்துக் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக் கிறார்கள். இது தவறான எண்ணம். காரணம், யாரோ ஒரு அப்பாவி உங்கள் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாக அனுப்பி, அதைச் செலவழித்திருந்தாலும், அதைத் திரும்பத் தந்து சரிசெய்துவிடலாம். ஆனால், உங்கள் வங்கிக் கணக்குக்கு, சட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்தோ, சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் வருமானம் ஈட்டுகிறவரின் வங்கிக் கணக்கிலிருந்தோ, குற்றவாளிகளின் கணக்கிலிருந்தோகூட பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கலாம். அந்தப் பணம் உங்களைச் சிக்கலில் மாட்டிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால், சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஆகவே, உங்கள் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகப் பணம் வந்த விவரத்தை உங்கள் வங்கியில் புகார் தந்து, அதற்கான ஒப்புகைச் சீட்டை அவசியம் பெற்றுக்கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் நீங்கள் எந்த விதமான சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை மிக மிகக் கவனமாகச் செய்தால், எந்தச் சிக்கலும் வராது என்பது மட்டும் நிச்சயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு