Published:Updated:

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அறிவிப்பால் பதறிய வாடிக்கையாளர்கள்!- நடந்தது என்ன?

ஒரு வங்கி திவாலாகும் சூழலில் அதன் டெபாசிட்தாரர்களில், எவ்வளவு தொகை டெபாசிட் செய்திருந்தாலும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை மட்டுமே எடுக்க முடியும்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி விளக்கம்
ஹெச்.டி.எஃப்.சி வங்கி விளக்கம் ( vikatan )

கடந்த சில நாள்களாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி பாஸ்புக் பக்கத்தின் நகல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகச் சுற்றியது. அதில் அச்சிடப்பட்டிருந்த ரப்பர் ஸ்டாம்ப் வாசகம்தான் வைரலுக்கு காரணமே. வங்கி பாஸ்புக் நகலில் ரப்பர் ஸ்டாம்பிடப்பட்ட வாசகத்தில், `இந்த வங்கியின் டெபாசிட்டுகள் அனைத்தும் டி.ஐ.சி.ஜி.சி (Deposit Insurance and Credit Guarantee Corporation) நிறுவனத்தின் காப்பீட்டில் உள்ளன. இந்த வங்கியில் ஏதேனும் நிதிச்சிக்கல் ஏற்பட்டால், அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் டி.ஐ.சி.ஜி.சி நிறுவனமே செட்டில்மென்ட் செய்யும். நிதிச்சிக்கல் ஏற்பட்டதிலிருந்து இரண்டு மாத காலத்துக்குள் ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்' என்றிருந்தது.

pass book
pass book
vikatan

ஏற்கெனவே வங்கிகள்மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ள சூழலில் இந்த வாசகம் அடங்கிய நகல் பெரிய அளவில் வைரலானது. இதுகுறித்து ஹெச்.டி.எஃப்.சி வங்கி அதிகாரிகளுக்கும் தெரியவந்ததால் தற்போது ஹெச்.டி.எஃப்.சி வங்கி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

டெபாசிட்டுக்கான இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து, 2017, ஜூன் 22-ம் தேதி ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அந்த சுற்றறிக்கையில், அனைத்து வணிக வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், பேமன்ட் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான டெபாசிட் இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து பாஸ்புக்கின் முதல் பக்கத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, டெபாசிட்டுகளுக்கான பாஸ்புக்கிலேயே இன்ஷூரன்ஸ் கவரேஜ் குறித்து பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. அப்படி பிரின்ட் செய்யப்படாத பாஸ்புக்குகளில் மட்டும் ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கப்பட்டுள்ளதாக வங்கி விளக்கமளித்துள்ளது.

circular
circular
vikatan

ஒரு வங்கி திவாலாகும்சூழலில் அதன் டெபாசிட்தாரர்களில், எவ்வளவு தொகை டெபாசிட் செய்திருந்தாலும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்வரை மட்டுமே எடுக்க முடியும். இது முன்பே உள்ள விதிமுறைதான் என்றாலும், அதை பாஸ்புக்கில் வெளிப்படையாக பிரின்ட் செய்திருப்பது ஏன் என்ற சந்தேகம்தான் வாடிக்கையாளர்களைப் பீதியுறச் செய்துள்ளது.