Published:Updated:

வீட்டுக் கடன்... கணவன், மனைவி இணைந்து வாங்கலாமா..? வாங்கினால் என்னென்ன நன்மைகள்..?

H O M E L O A N

பிரீமியம் ஸ்டோரி

இன்றைய தேதியில் சொந்த வீட்டுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த கொரோனா இரண்டாம் அலை பரவல் நேரத்தில் வசிப்பது சொந்த வீடாக இருந்தால் நன்றாக இருக்கும் எனப் பலரும் நினைக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். காரணம், கொரோனா பாசிட்டிவ் என்றாலும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. வாடகை வீடு என்கிறபோது, வீட்டு உரிமை யாளர் வீட்டைக் காலி செய்யச் சொல்லும் நிலை உருவாகலாம். இதைத் தவிர்க்க சொந்த வீடு அவசியமாகிறது.

வீடு வாங்க முடிவு செய்த பிறகு, பணிபுரியும் கணவன், மனைவி தம்பதிகளாக இணைந்து வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.

வீட்டுக் கடன்... கணவன், மனைவி 
இணைந்து வாங்கலாமா..? வாங்கினால் என்னென்ன நன்மைகள்..?

வட்டியில் சலுகை...

பெண்கள் பெயரில் அல்லது கணவருடன் சேர்ந்து மனைவி வீட்டுக் கடன் வாங்கினால், வட்டியில் சிறிய தள்ளுபடி கிடைக்கிறது. பொதுவாக, 0.05% வட்டி குறைவாக இருக்கிறது. நீண்டகாலத்தில் இது ஒரு பெரிய தொகையாக இருக்கும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் புரியும்.

ஆண் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் தற்போதைய நிலையில், வீட்டுக் கடன் வட்டி 6.70% என்று வைத்துக்கொள்வோம். பணிபுரியும் மனைவியே இணைக் கடன்தாரராகச் சேர்த்துக்கொண்டால் வட்டி 6.65 சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

கணவன் - மனைவி இணைந்து ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கு வதாக வைத்துக்கொள்வோம். இந்தக் கடனை 25 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக வைத்துக்கொள்வோம். இந்த 25 ஆண்டுகளில் சுமார் ரூ.45,000 வட்டி மிச்சமாகி இருக்கும்.

வீட்டுக் கடன் தவணையில் கணவன் - மனைவி 50/50 என பிரித்துக் கொள்ளாமல், கணவன் 75% - மனைவி 25% என்பது போலக்கூட பிரித்துக் கொள்ளலாம். அந்த வகையில் சிறிய அளவு சம்பாதிக்கும் மனைவியை வீட்டுக் கடன் வாங்கும் போது சேர்த்துக்கொண்டால் வட்டியை மிச்சப்படுத்த முடியும்.

சிவகுமார் 
நிறுவனர், 
www.
bestservicerealty.in
சிவகுமார் நிறுவனர், www. bestservicerealty.in

கடன் தகுதி அதிகரிப்பு

பணிபுரியும் கணவன், மனைவி இணைந்து வீட்டுக் கடன் வாங்கும் போது, கடனைத் திரும்பக் கட்டுவதற் கான தகுதி அதிகரித்துவிடுகிறது. இருவரின் சம்பளம் இணையும் போதுதானே வீட்டுக் கடன் வாங்கு வதற்கான கடன் தொகை தகுதி கூடி வீட்டுக் கடன் கிடைப்பது எளிதாகிறது.

பெரிய வீடு...

கணவன் - மனைவி இருவர் இணைந்து வீட்டுக் கடன் வாங்கும்போது, தகுதி கூடுவதால், அதிக தொகை கடன் வாங்க முடியும். இந்த அதிகத் தொகையைக் கொண்டு பெரிய வீடாக வாங்க முடியும். அதனால், பிள்ளைகள் வளர்ந்து குடும்பம் பெரிதாகும்போது வேறு வீடு வாங்க தேவை இருக்காது. வாழ்க்கையில் சொந்த வீடு என்பதை ஒரு முறை வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கும். அந்த வகையில் வேலை பார்க்கும் அல்லது வருமானம் ஈட்டும் கணவன், மனைவி இருவரும் இணைந்து முதலிலேயே இரண்டு படுக்கை அறை கொண்ட பெரிய வீடாக வாங்கிவிடுவது பல வகையில் நல்லதாக இருக்கும். அதுவும் கோவிட் பரவல் போன்ற கால கட்டங் களில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

வீட்டுக் கடன்... கணவன், மனைவி 
இணைந்து வாங்கலாமா..? வாங்கினால் என்னென்ன நன்மைகள்..?

அதிக வருமான வரிச் சலுகை...

வீட்டுக் கடன் வாங்கி அதைத் திரும்பச் செலுத்தும்போது வருமான வரிச் சலுகை அசல் மற்றும் வட்டிக்கு இருக்கிறது. நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச்) திரும்பக் கட்டும் அசலில் 80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. இதே போல், திரும்பக் கட்டும் வட்டியில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு.

வீட்டுக் கடனை ஒருவர் தனியே வாங்கியிருக்கும்பட்சத்தில் திரும்பக் கட்டும் அசல், வட்டியில் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.3.5 லட்சம் வரிச் சலுகை பெற முடியும். இதுவே கணவன் - மனைவி இணைந்து வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில் தனித்தனியே ரூ.3.5 லட்சமாக அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும்.

மாதத் தவணையில் யாருடைய பங்கு எவ்வளவு சதவிகிதம் என்பதை சம்பள விகிதாசார அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். அல்லது யார் எந்த வரிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதிகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, தம்பதி ஒருவருக்கு ஒரு மகன் இருக்கிறான். அந்த மகனின் கல்விச் செலவுக்கு மனைவி வரிச் சலுகை கோரு கிறார் எனில், மனைவிக்கு 80சி பிரிவின் கீழ் வீட்டுக் கடன் வரிச் சலுகை கிடைக்கும் தொகை குறையும். அது போன்ற நேரத்தில் அவர் வீட்டுக் கடன் வாங்கும் போதே தன் பங்காகக் குறைவான தொகையைக் கட்டுவதாக முடிவு செய்து ஆவணப்படுத்தினால் லாபமாக இருக்கும். இப்படி அதிகமாக வரிச் சலுகை பெறுவது மூலம் வீடு வாங்கியதற்கான செலவில் கணிசமாகக் குறைக்க முடியும் என்பது கூடுதல் லாபம்!

வீட்டுக் கடன் வாங்க நீங்க ரெடியா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு