பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட மானியம் பெறுவது எப்படி? #LoanVenumaSir - 18

இந்த தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், நகர்ப்புற ஏழை மக்களுக்காக இரண்டு கோடி வீடுகளை மார்ச் 2022-க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு கூறுகள் உள்ளன.
முதலாவதாக, நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம்.
மற்றொன்று, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.
இந்தத் திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை (கழிவறை, குடிநீர், மின்சாரம்) வழங்கும் வேறு சில திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இப்போது வரை 88 லட்சம் வீடுகளுக்கான ஒப்புதல்கள் வந்துள்ளன.
வீடு பெறுவதற்கான தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் பெறலாம்?

ரூ.12 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள், ரூ.9 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம். மேலும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெறுவோர் ரூ.12 லட்சம் வரை வீடு கட்டுவதற்கான கடன் உதவியைப் பெறலாம்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சேர்ந்து வீடு பெற, முக்கியத் தகுதியாகக் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சொந்த வீடு வைத்திருத்தல் கூடாது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய (EWS) மக்களில் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு ஊதியம் பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தக்க சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் அவசியம்.
மேற்சொன்ன தகுதிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க pmaymis.gov.in என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். பின்னர், சிட்டிசன் அசெஸ்மென்டை (Citizen Assessment) க்ளிக் செய்து, குடிசை வாழ் மக்களாக இருந்தால் குடிசைவாசிகள் அல்லது இதர மூன்றாம் கூறின் பயனாளர்கள் (benefits under other 3 components) என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர், ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளித்த தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அடுத்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அந்தப் பக்கத்தில் உங்களுடைய பெயர், ஊதியம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது வசிக்கும் வீட்டின் எண், குடும்பத் தலைவரின் பெயர் ஆகிய இதர விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லா தகவல்களையும் அளித்த பின்னர், வலைதளத்தின் கடைசி பக்கத்துக்குச் சென்று, `கேப்சாவை’ (Captcha) சரியாகக் குறிப்பிட வேண்டும்.

2022 வரை வாங்கலாம்...
நீங்கள் நேரடியாக வங்கியையோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிறுவனத்தையோ அணுகி கடன் வாங்கும்போது, நீங்கள் பெறுகின்ற கடன் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் விதிமுறைகளுக்குப் பொருந்தி வரும் என்றால், அந்த வங்கியோ, வீட்டுக் கடன் வசதி தரும் நிதி நிறுவனமோ, நேரடியாக வீட்டு வசதி அமைச்சகத்திடம் அல்லது தேசிய வீட்டு வங்கியிடமோ, தகவல்களை அளித்து அந்த மானியத் தொகையை உங்களின் கடன் கணக்கில் வரவு வைத்துவிடும். அவர்கள் அவ்வாறு செய்கிறார்களா என்பதை நீங்கள் பார்க்க வேண்டியது அவசியம்.
பிரதமர் வீடு கட்டும் திட்டம் தற்போது மார்ச் 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்படி மானியம் பெற தகுதி உள்ளவர்களாக இருப்பின், வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கும் போது அந்த வங்கியில் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்று கேட்டுத்தெரிந்து கொண்டு கடன் பெற ஆவன செய்யலாம்.
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...
இந்தத் திட்டம் கட்டுமான நிறுவனத்திடமிருந்து புது வீடு வாங்குவோருக்கும், தங்களின் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு மட்டுமே பொருந்தும். பழைய கட்டப்பட்ட வீட்டை வாங்குபவர்களுக்குப் பொருந்தாது.
ஒரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து, மற்றொரு வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனத்துக்கு மாற்றும் கடனுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
இந்தத் திட்டத்தின் மூலம் மானியத்தொகை பெற்றாலும் கடனை முன்கூட்டியே செலுத்தி முடிக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்களுக்குக் கிடைக்கும் மானியத்தொகை, தங்களின் கடன் கணக்கில் வரவு வைத்து, தங்களின் கடன் அளவைக் குறைத்து, மீதமுள்ள கடன் தொகைக்கு மட்டுமே மாதாந்தரத் தவணை செலுத்துமாறு கணக்கிடப்படும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்...
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள், உரிய காலத்துக்குள் பதில் வராவிட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், `பிரதமர் வீட்டுக்கான விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது?’ என விண்ணப்பித்து அறிந்துகொள்ளலாம். இதற்கு, அவர் விண்ணப்பித்ததற்கான சான்று அவரிடம் இருக்க வேண்டியது அவசியம். பின்னர், விண்ணப்பித்த தேதியிலிருந்து இதுவரை விண்ணப்பம் செய்தவர்களில் எத்தனை நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது எனவும், எவ்வளவு நபர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை என்கிற விவரத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், எதனால் குறிப்பிட்ட நபர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை, எவ்வளவு காலத்துக்குள் வீட்டுக்கான ஒப்புதல் கிடைக்கும் ஆகிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ஏன் வீடு வழங்கப்படவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
- வாங்குவோம்