Published:Updated:

`அச்சப்படத் தேவையில்லை'- விலைச்சரிவுக்கு ஆர்பிஐ விளக்கம்!

இந்திய வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்ததால், இன்றைய தினம் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக, பேங்க் நிஃப்டி இண்டெக்ஸில் வர்த்தக நாளின் இடையே 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி ( vikatan )

இந்தியாவின் மிகப் பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (PMC Bank) நடைபெற்ற ஊழல் தொடர்பாக, வாடிக்கையாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது. அது, இன்றைய தினம் பங்குச்சந்தையில் எதிரொலித்ததால் வங்கித்துறை சார்ந்த பங்குகள், ஒரே நாளில் பெரிய சரிவைச் சந்தித்தன.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
vikatan

மும்பையைத் தலைமையிடமாகக்கொண்ட பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியானது, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்பட பல மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக்கொண்டு இயங்கிய கூட்டுறவு வங்கியாகும். அந்த வங்கியின் வாராக்கடன் குறித்து, விசாரணை நடத்தியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடத்திருப்பதாகத் தெரியவந்ததால், ரிசர்வ் வங்கி மிகக்கடுமையான கட்டுப்பாடுகளைப் பிறப்பித்தது. அதன்படி, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், 1,000 ரூபாய்க்குமேல் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்கத் தடை விதித்தது. புதிய டெபாசிட்டுகளைத் தொடங்கவோ கடன் வழங்கவோ தடை விதிக்கப்பட்டது. பின்னர், 1,000 ரூபாய் என்ற கெடு, 10,000 ரூபாயாகத் தளர்த்தப்பட்டது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப்போல் வாடிக்கையாளர்கள் உணர்ந்ததால் அவர்களிடையே அச்ச உணர்வு அதிகரித்தது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய வங்கிகள் மீதான நம்பிக்கை தகர்ந்ததால், இன்றைய (1, அக்டோபர், 2019) தினம் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக, பேங்க் நிஃப்டி இண்டெக்ஸில் வர்த்தக நாளின் இடையே 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டு 28,077.35 புள்ளிகளை எட்டியது. யெஸ் பேங்க் பங்குகள் வர்த்தக நாளின் இடையே 27.77% வரை இறக்கத்தைச் சந்தித்தன. அடுத்ததாக, ஆர்பிஎல் பேங்க் பங்குகள், வர்த்தக நாளின் இடையே 11.59% இறக்கத்தைச் சந்தித்தன. மேலும், இண்டஸ்இண்ட் பேங்க், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஃபெடரல் பேங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் இன்றைய தினம் இழப்பைச் சந்தித்தன.

உடனடியாக, வங்கி டெபாசிட்டுகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ரிசர்வ் வங்கியின் சார்பாக ட்விட்டர் மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், 'கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட சில வங்கிகள் குறித்து பரப்பப்பட்ட வதந்திகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது. இந்திய வங்கித்துறை மிகவும் பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை' என்று குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விளக்கம், முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்கியுள்ளதா என்பது அடுத்த வர்த்தக நாளில்தான் தெரியவரும்.