Election bannerElection banner
Published:Updated:

`வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது!' - கடன் தவணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் 
உச்ச நீதிமன்றம் 

இந்த கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் அரசுக்கும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, தொழில்கள் நசிவுற்ற நிலையில், பல லட்சம் வேலை இழந்தனர். தொழில் கடன் வாங்கியவர்கள் பலரும் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதிக்கு இடையில், கடன்களுக்கான தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியிருந்தது. பின்னர், இது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

இந்தச் சலுகைக் காலத்தில் கடன் தவணையைச் செலுத்தாமல், ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. அதனால் வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்யக்கோரியும், கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கால அவகாசத்தை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அன்று இந்த வழக்கின் தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். ஏறக்குறைய மூன்று மாதம் கழித்து இன்று காலை அதற்கான தீர்ப்பு வெளியானது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "கொரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் அரசுக்கும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. வட்டியை முழுவதுமாகத் தள்ளுபடி செய்தால் அது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கொரோனா ஊரடங்கு காலத்துக்குரிய கடன்களுக்கு வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய இயலாது.

வட்டி
வட்டி
லாக்டௌனுக்குப் பிறகு கடன் வாங்கி அதிக அளவில் செலவழிக்கும் மக்கள்... உஷாரய்யா உஷாரு!

மேலும், கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தையும் நீட்டிக்க முடியாது. கடன் தவணை சலுகைக் காலத்தில் வாடிக்கையாளரகள் கடன் தவணை செலுத்த சலுகை பெற்றிருந்து, அவர்களிடம் இருந்து கூடுதல் வட்டி அல்லது அபராத வட்டி வசூலித்திருந்தால், அதை வங்கிகள் உரிய வாடிக்கை யாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி நிலவரப்படி, வங்கிகளில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு கொரோனா காலத்தில் ஒத்திவைப்புச் சலுகையைப் பெற்றிருந்தால், அவர்கள் செலுத்தும் வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே சொல்லி இருந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் சலுகை பெறும் வங்கிக் கணக்கு உடையவர்களின் கணக்கு 2020 பிப்ரவரி 29-ம் தேதிவரை வாராக்கடனாக இருந்திருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு