பிரீமியம் ஸ்டோரி

கரூர் மாவட்டத்தின் தெற்குத் திசையில் இருக்கும் கடைக்கோடி கிராமமான ஈசநத்தத்தில் இயங்கிவரும், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை வாடிக்கையாளர்கள், ‘5 நிமிட பேங்க்’ என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு, வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட், நகைக் கடன் வாங்க, வங்கிக் கணக்கு தொடங்க, லோன் கேட்க என்று எந்த விஷயத்துக்காகப் போனாலும், வங்கியில் ஐந்து நிமிடத்தில் அவர்களின் தேவையை நிறைவேற்றி, அனுப்பிவிடுகிறார்கள். அதனால்தான், இந்த பெயர். அதோடு, நகைக் கடன், இதர கடன்கள் குறித்த விவரங்கள் அடங்கிய போஸ்டர்களை இந்த வங்கியின் மேலாளரே நேரடியாகச் சென்று கிராமங்களில் ஒட்டிவருவது, மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘இது 5 நிமிட பேங்க்...’ அசத்தும் மத்தியக் கூட்டுறவு வங்கி..!

ஈசநத்தம் என்பது, மிகவும் வறட்சியான பகுதி. மழை அதிகம் பெய்யாத, வானம் பார்த்த பூமியைக் கொண்டது. இதனால், இங்கு அதிகம் வசிக்கும் விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாத சூழல். அதனால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து, அதில் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பின்தங்கிய பகுதியில், இப்படிப்பட்ட வங்கி இயங்கிவருவது, தங்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது என்று இங்குள்ள விவசாயிகள் சொல்கிறார்கள். மற்ற வங்கிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த வங்கியின் சிறந்த சேவை குறித்து கேள்விப்பட்ட நாம், அந்த வங்கிக்குச் சென்றோம். அங்கிருந்த வங்கி மேலாளரும், சக ஊழியரும் பேங்குக்கு வந்திருந்த கஸ்டமர்களின் சொந்த விஷயங்கள், அவர்களின் குடும்ப சுபநிகழ்வுகள் எனப் பல விஷயங்கள் குறித்து, ‘அன்னியோன்யமாக’ பேசிக்கொண்டிருந்தனர். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், நம்மை வரவேற்ற அந்த வங்கியின் மேலாளர் சரவணன், ஆர்வமாகப் பேசினார்.

சரவணன்
சரவணன்

“1998-ம் ஆண்டு இதே வங்கியில் வேற பகுதி கிளையில் உதவியாளராகப் பணிபுரிந்தேன். அதன்பிறகு, அரவக்குறிச்சியில் 16 வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, பள்ளப்பட்டியில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் உதவி மேலாளராக மூணு ஆண்டுகள் பணியில் இருந்தேன். நான் அந்த வங்கிக்குப் போகும் வரை, அந்த வங்கியின் மொத்தக் கடன் இலக்கு ரூ.1 கோடி தான். ஆனால், நான் வாடிக்கையாளர்களிடம் எளிமையாகப் பழகியதால், அதை ரூ.11 கோடியாக உயர்த்தினேன். இந்த நிலையில்தான், கடந்த ஒன்பது மாசத்துக்கு முன்னாடி, ஈசநத்தத்தில் எங்க வங்கியின் சார்பில், கடந்த 16.12.2020 அன்று 75-வது புதுக் கிளையைத் திறந்தாங்க. அதில் மேலாளராக பதவி உயர்வு பெற்று வந்தேன். இங்க வந்ததும், பொதுவாக வாடிக்கையாளர்களுக்கும், வங்கிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைத்தோம். அதற்கு, இங்கு பணியாற்றிய கேஷியர் பிரேம்குமார், தற்காலிகமாகப் பணியாற்றுகிற உதவியாளர், வாட்ச்மேன்னு எல்லோரும் சப்போர்ட் பண்ணினாங்க. நாங்களே வீடு வீடாகப் போய், இந்தப் பேங்கைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

‘இது 5 நிமிட பேங்க்...’ அசத்தும் மத்தியக் கூட்டுறவு வங்கி..!

அதோடு, காலை 7 டு 9 மணி வரை, மாலை நேரங்கள், விடுமுறை தினங்களில் ஈசநத்தத்தை சுற்றியுள்ள 28 கிராமங்களுக்குப் போய், நாங்களே வங்கி சேவைகள் குறித்த போஸ்டர்களை ஒட்டினோம். அப்போது, அங்கு வரும் மக்களிடம் வங்கியின் சிறப்பு பற்றி எடுத்துச் சொன்னோம். இதனால், மளமளனு எங்க வங்கிக்கு கஸ்டமர்கள் கிடைச்சாங்க” என்றவர், “போஸ்டர் கொஞ்சம் ஒட்ட வேண்டியிருக்கு. வாங்களேன், போஸ்டரை ஒட்டிக்கிட்டே பேசுவோம்” என்றபடி, ஈசநத்தம் கடைவீதிக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

அவரது கையில் கத்தையாகப் போஸ்டர்கள். அதை, மற்றோர் ஊழியர் கையில் இருந்த பசை வாளியில் இருந்த பசையைத் தொட்டுத் தடவி, சுவர்களில் ஒட்டினார். அதோடு, அங்கிருந்த மக்கள், சிறு சிறு கடை முதலாளிகள் என அனைவரிடமும், வங்கி குறித்து விவரிக்க ஆரம்பித்தார். பிறகு நம்மிடம் பேசினார்.

‘இது 5 நிமிட பேங்க்...’ அசத்தும் மத்தியக் கூட்டுறவு வங்கி..!

“இப்படி அன்னியோன்யமாக எல்லோரிடமும் பேசுவதால், இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் வங்கிக்குக் கிடைச்சுருக்காங்க. அதேபோல், வங்கிக் கிளை தொடங்கப்பட்ட இந்த ஒன்பது மாசத்துல ரூ.2 கோடி வரை டெபாசிட் வாங்கியிருக்கோம். அதேபோல், ரூ.3 கோடி வரை கடன் தந்திருக்கிறோம். எங்க வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் எதற்காகவும் அலைய விடுவதில்லை. அதேபோல், வங்கியில் யாரையும் காக்க வைக்கவும் மாட்டோம். லோன், நகைக்கடன், டெபாசிட், கணக்கு ஓப்பன் பண்ண என்று எந்த விஷயத்துக்காக வந்தாலும், ஐந்து நிமிடத்தில் அவர்களின் அலுவலை முடித்து, அவர்களை அனுப்பி வைத்துவிடுவோம். இதனாலேயே, எங்க வங்கி மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆயிட்டு. அவங்களை வெறும் கஸ்டமர் களாகப் பார்க்காம, குடும்பத்துல ஒருத்தரா நாங்க நினைச்சு பேசிப்பழகுவதால்தான் இந்த வளர்ச்சி.

அதேபோல், டெபாசிட் பண்ண வர்றவங்களுக்கு பொன் னாடை போத்தி கௌரவிப்பது, டீ, ஸ்நாக்ஸ்னு உபசரிப்பதுனு அவர்களை மிகவும் மரியாதை யுடன் நடத்துகிறோம். ‘இந்த வங்கியை உங்க வீடு மாதிரி நினைச்சுக்குங்க. இங்கே டெபாசிட் பண்றதை உங்க வீட்டு பீரோவுல வைக்குறாப்புல நெனச்சுக்குங்க’னு சொல்றது, வாடிக்கையாளர்களைக் கவருது. அதேபோல், டெபாசிட் தொகையை வங்கிக்கு அழைத்து வர முடியாத சூழல் இருப்பவர் களின் வீடுகளுக்கே சென்று, நாங்க அவர்கள் டெபாசிட் செய்ற பணத்தை வாங்கி வருகிறோம்.

‘இது 5 நிமிட பேங்க்...’ அசத்தும் மத்தியக் கூட்டுறவு வங்கி..!

இப்படி, எங்க வங்கி சேவையைப் பார்த்துட்டு, சென்னை, சீர்காழி, திருவையாறு, பாண்டிச்சேரி, குடந்தையில் இருந்தெல்லாம் பலரும் எங்க வங்கி கஸ்டமராகி, பணத்தை இங்க டெபாசிட் பண்றாங்க. அதேபோல், பள்ளி மாணவர் களைச் சந்தித்து, அவர்கள் சேமிப்பதை ஊக்குவிக்கிறோம்.

சாதாரண வாடிக்கையாளர் களுக்கு வங்கியில் பணம் சேமிச்சா, 3.5%-தான் வட்டி கிடைக்கும். ஆனால், மாணவர்களுக்கு 4.5 சதவிகிதமும், பெண்களுக்கு 5% நாங்க வட்டி தருகிறோம். அதேபோல், பூக்கடை, சலூன் கடை, பெட்டிக்கடைனு சிறு அளவில் தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு, வெறும் 2 நபர்கள் ஜாமின் கையெழுத்துப் போட்டா போதும். 10,000 ரூபாயில இருந்து 50,000 ரூபாய் வரை 90 பைசா வட்டிக்கு உடனே கடன் தருகிறோம். இப்படித் தருவதால், அவர்கள் கந்துவட்டிகாரர்களிடம் சிக்கி அல்லாடுவது குறைந்திருக்கிறது.

எங்க வங்கியில யாரையும் லோனுக்காக அலையவிடாமல், தகுதி இருப்பின் உடனே லோன் தருகிறோம். அதனால், அதை உணர்ந்து, எல்லோரும் லோனை சரியாகக் கட்டவும் செய்கிறார்கள். அதேபோல், பணம் எடுக்க, வங்கியில் பணம் செலுத்த என்று படிவங்களை ஃபில் பண்ண தெரியாமல் நிற்பவர்களுக்கு, வங்கி ஊழியர்கள் நாங்களே ஃபில் பண்ணித் தருகிறோம். எல்லாவற்றையும்விட, மக்களிடம் பொதுவா, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில்தான் சேவை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கு. மத்திய கூட்டுறவு வங்கியிலும் சேவை சிறப்பாக இருக்கும் என்பதையும் வாடிக்கை யாளர்களிடம் புரிய வைக்கிறோம்” என்றார்.

திருமூர்த்தி
திருமூர்த்தி

வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர் திருமூர்த்தி என்ற பெரிய வரிடம் பேசினோம். “நான் அருகில் உள்ள சின்னகரியாப் பட்டியைச் சேர்ந்தவன். மழை பெய்யாததால், விவசாயம் செய்ய முடியலை. அதனால், ஆடு, மாடுகளை நம்பி குடித்தனம் நடத்துறோம். ஆனா, அதுல போதிய வருமானம் இல்லை.

இந்தச் சூழல்லதான், இன்னொரு கறவை மாடு வாங்கி, வளர்த்து வருமானத்தைப் பெருக்கலாம்னு முயற்சி பண்ணினேன். சில வங்கிகளை அணுகினேன். எங்கேயும் லோன் கிடைக்கலை. அப்பதான், இந்த வங்கியைப் பத்தி கேள்விப்பட்டு, இங்க வந்தேன். எனக்கு கடன் வழங்க தகுதி இருக்குதுனு வங்கியில சொன்னதோட, அலைய விடாம உடனே கடனைக் கொடுத்தாங்க. எனக்கு இதை வச்சு குடும்பத்தை சிக்கலில்லாமல் நகர்த்திடலாம்னு மனசுல நம்பிக்கை வந்திருக்கு’’ என்றார்.

பொன்னுத்தாயி
பொன்னுத்தாயி

கோயில்நாயக்கர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாயி என்பவர், “நான் எழுத, படிக்க தெரியாத கைநாட்டு. என் நிலைமையெல்லாம் அப்புறம் எப்படினு நினைச்சுக்குங்க. ஆனால், இந்த வங்கிக்கு முதல்முறை வந்தப்போ, அவ்வளவு உரிமையா பேசி, என்னோட பயத்தை போக்குனாங்க. என்னோட தேவைகளை உடனே பூர்த்தி பண்ணினாங்க. கடனும் கொடுத்தாங்க” என்றார்.

இந்த மத்தியக் கூட்டுறவு வங்கியைப்போல மற்ற வங்கிகளும் செயல்படத் தொடங்கினால், வாடிக்கையாளர்களின் கஷ்டம் நிச்சயம் தீரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு