Published:Updated:

`இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தனியார்மயமாக்குவதா?' - எதிர்க்கும் கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 2021-22ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை விற்று ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளின் பங்குகளை விற்று தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் கடந்த வாரம் பரிந்துரைத்திருந்த நிலையில், ``இந்தியன் ஓவர்சீஸ் வங்கி'யைத் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்'' எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2021-22-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை விற்று ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

ஐ.ஓ.பி வங்கி
ஐ.ஓ.பி வங்கி
கொரோனா சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் SBI வங்கி; யாரெல்லாம் பெற முடியும்?

இதன் முதற்கட்டமாகத் தனியார்மயமாக்க இரு வங்கிகள், காப்பீடு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும், நிதி ஆயோக் அமைப்பிடம் வழங்கப்பட்டது. அந்த அமைப்பு வழங்கிய பட்டியலில், பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற வங்கிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தாலும், இவற்றில் இருந்து சென்ட்ரல் வங்கி, ஐ.ஓ.பி-யை முதற்கட்டமாக மத்திய அரசு தேர்வு செய்து, அதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறது.

மத்திய அரசின் இந்தச் செயல்பாடு குறித்து அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஐ.ஓ.பி வங்கியானது தமிழக நலம் கருதி, தமிழக மக்களின் நலன் கருதி செயல்பட்டு வரும் வங்கியாகும். பிற கிளைகளுக்குப் பணம் செலுத்தும் போதும், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகளுக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கட்டணம் வசூலிப்பதில்லை.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
`தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்!' - நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி

தமிழ்நாட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், இந்தியாவின் எந்த வங்கிக் கிளையிலும் சேவைக் கட்டணம் இன்றிப் பணம் எடுக்கலாம். மற்ற வங்கிகளில் இந்த சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆற்றி வரும் சேவை மகத்தானது.

இதுவரை ஒரு வங்கியைக்கூட உருவாக்காத மோடி அரசு, மக்களுக்கு சேவை செய்து கொண்டும், அதேசமயம் லாபத்திலும் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் போன்ற வங்கிகளை விற்க முயல்வது தவறான போக்காகும். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த 85 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் வங்கிகளைத் தனியார் மயமாக்குவது குறித்து பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பங்கு  விலை உயர்வு...

இது ஒரு பக்கமிருக்க, ஐ.ஒ.பி-யைத் தனியார்மயமாக்கப்படும் என்கிற செய்தி அவ்வப்போது வெளியாகி வருவதால் அந்த நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வாக்கில் இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.10.95-ஆக இருந்தது. ஆனால், இந்த வங்கி தனியார்மயம் செய்தி வரத் தொடங்கிய பிறகு தொடர்ந்து உயர்ந்து, தற்போது ரூ.19.70-ஆக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு