Published:Updated:

வணிக நிறுவனங்கள் வங்கிக்கடன் வாங்குவது 88% குறைந்துள்ளது! - காரணம் என்ன?

வணிக நிறுவனங்கள் வங்கிக்கடன் வாங்குவது குறைந்திருப்பதற்கு முக்கியக் காரணமாக, நிறுவன உற்பத்திப்பொருள்களின் விற்பனை குறைவைச் சுட்டிக்காட்டுகிறார்கள். விற்பனை குறைவு காரணமாக உற்பத்தி செய்வதும் குறைந்துவிட்டது. எனவே, வங்கிக்கடன் வாங்குவதும் குறைந்துள்ளது.

வங்கிக்கடன்
வங்கிக்கடன் ( vikatan )

பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் முதல், இரண்டாம் காலாண்டில் வணிக நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் அளவு மிகவும் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிக்கடன் அளவை கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 88 சதவிகிதம் குறைந்திருப்பது ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்திலிருந்து தெரியவந்துள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் அளவு குறைந்துள்ளது.
வணிக நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் அளவு குறைந்துள்ளது.

வணிகப்பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட வங்கிக்கடன்களின் அளவு, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.85 லட்சம் கோடியாக இருந்துள்ளது. அதே வங்கிக்கடன், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், எதிர்மறையாக -1.28 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் கடன் அளவும்கூட கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 41,200 கோடியாக வளர்ச்சியடைந்திருந்த வங்கிக்கடன் அளவு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எதிர்மறையாக -1.25 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

வங்கிக்கடன் வாங்குவது குறைந்திருப்பதற்கு முக்கியக் காரணமாக, நிறுவன உற்பத்திப்பொருள்களின் விற்பனை குறைவைச் சுட்டிக்காட்டுகிறார்கள். விற்பனை குறைவு காரணமாக, உற்பத்தி செய்வதும் குறைந்துவிட்டது. எனவே, வங்கிக்கடன் வாங்குவதற்கான அவசியம் அதிகமில்லாததால் வங்கிக்கடன் வாங்குவதும் குறைந்துள்ளது. மேலும், வாராக்கடன் பிரச்னை காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் தயக்கம் காட்டுவதும்கூட வங்கிக்கடன் வழங்கும் அளவு குறைந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலுள்ள வங்கிகளிடம் கடன்வாங்குவதைவிட வெளிநாடுவாழ் முதலீட்டாளர்களிடமிருந்து வெளிநாட்டுப்பண மதிப்பில் கடன் பெற்று நிறுவனத்தின் தேவையை நிறைவேற்றுவதில் ஆர்வம்காட்டுவதும்கூட இன்னொரு காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கிக்கடன்
வங்கிக்கடன்
vikatan

பொருளாதார மந்தநிலையைச் சரிக்கட்டி, மக்களின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மட்டும் 1.35% ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால், இந்த வட்டி விகிதக்குறைப்பின் பலன் இதுவரை பெரிதாக இல்லை. இந்த நிதியாண்டில் மூன்றாம், நான்காம் காலாண்டில்தான் இதன் தாக்கம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பண்டிகைக்கால விற்பனை தற்போது தொடங்கியுள்ளதால் இனிமேல் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தேவைப்பாடு அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.