Published:Updated:

வங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி?

Loan Management
Loan Management

அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் தொடக்கப்புள்ளி.

கடன் வாங்குவது சுமையில்லை; மாறாக, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் கடன் உதவுகிறது என்று இந்தியர்களில் 50% பேர் குறிப்பிடுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களின் வசிக்கும் 2,571 பேரிடம், கடன் சார்ந்த பல கேள்விகள் கேட்டதில், பாதிப் பேர் மேலே சொன்ன விஷயங்களைச் சொன்னதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் விரும்பும் கடன்களில் இரு சக்கர வாகனக் கடன், தனிநபர் கடன் முறையே 23.3, 20.3 சதவிகிதத்துடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.

இதற்கு அடுத்ததாக 12.5 சதவிகிதத்துடன் கார் கடனும், 12 சதவிகிதத்துடன் வீட்டுக்கடனும், 10.5 சதவிகிதத்துடன் நகைக்கடனும் இடம்பிடித்திருக்கின்றன. டிராவல் லோன், விவசாயக் கடன், கிரெடிட் கார்டு கடன், மெடிக்கல் லோன் ஆகியவை குறைந்த அளவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடன் மேலாண்மை அவசியம்!

இப்படி, அலுவலக நண்பர்களிடம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் எனக் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கக் கடன், அவசியத் தேவைகளான சொந்த வீடு, வாகனம் வாங்கக் கடன் என நம் அனைத்துத் தேவைகளை கடன் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்கிறோம். கடன் வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துதான் வாங்குகிறோம். ஆனால், அந்தக் கடன்களிலிருந்து வெளியே வரமுடியாதபடி மாட்டிக்கொள்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் கடன் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்யாததுதான்.

வங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி?

கடன் எங்கே தொடங்குகிறது?

நம் வாழ்க்கையில் கடன் என்கிற சமாசாரம் எங்கே தொடங்குகிறது என்பதை அறிவது முக்கியமான விஷயம். அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.  

உயர் பதவியிலிருக்கும் நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் போதும். ஆனால், உங்கள் வருமான எல்லையைத் தாண்டி சொகுசு கார் வாங்குவது அநாவசியம். 

நம்மூரில் இருக்கும் டாப் கல்வி நிறுவனத்தில் உங்கள் பிள்ளைகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அவசியம் கடன் வாங்கலாம். ஆனால், வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்தப்போகிறோம்,  படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் எக்கச்சக்கமாகக் கல்விக் கடன் வாங்கி வெளிநாட்டுக் கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அநாவசியம். இதற்காக, கடன் வாங்குவதே தவறு என்று சொல்ல வரவில்லை. கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காகப் பெருகி வளரும் என்கிற பட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவது தவறே இல்லை.

Vikatan

பஸ்ஸில் ஏறி ஆபீஸுக்குப் போய் வர முடியவில்லை. அலுவலகத்தில் பெட்ரோல் செலவுக்குப் பணம் தருகிறார்கள். எனவே, வங்கியில் கடன் வாங்கி, அதை அடுத்த சில வருடங்களில் பெரிய கஷ்டம் ஏதும் இல்லாமல் திரும்பக் கட்ட முடியும் என்கிற நம்பிக்கையும் தெளிவான திட்டமும் இருக்கிறபோது, கார் அல்லது இருசக்கர வாகனக் கடனை வாங்குவது தவறே இல்லை.

யோசித்து கிரெடிட்கார்டு வாங்குங்கள்!

இன்றையத் தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டித் தவிக்கிறார்கள். ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் கிரெடிட் கார்டு கடனைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இந்தக் கடனை வாங்கிவிடுகின்றனர்.

தவிர, கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதும் இன்றைக்குச் சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் திடீர் ஆசையை நிறைவேற்ற கிரெடிட் கார்டை தேய்ப்பதுதான் மிடில் கிளாஸ்வாசிகளின் ஒரே வழியாக இருக்கிறது. ஆனால், இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான். கிரெடிட் கார்டு தரும் கெடு நாள்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம். அப்படிச் செலுத்த முடியாது என உங்களுக்கு நன்கு தெரியும்பட்சத்தில் கிரெடிட் கார்டு கடனை வாங்காமல் தவிர்த்துவிடுவதே புத்திசாலித்தனம்.

வங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி?

கடனை முன்கூட்டியே கட்டி முடியுங்கள்!

ஜாமீன், அடமானம் எதுவும் இல்லாமல் இருப்பதால் நம்மவர்கள் கல்யாணம் தொடங்கிக் காதுகுத்து வரை எதற்கெடுத்தாலும் தனிநபர் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள். பொதுவாக, தனிநபர் கடன் பெறுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ‘எதிர்பார்க்கும் ஒரு தொகை வந்துவிடும். அந்தப் பணத்தைக் கட்டி, பர்சனல் லோனிலிருந்து வெளியே வந்துவிடலாம்’ என்கிற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் அசல்கூட கட்ட முடியாமல் போகும்போது, வட்டி குட்டி போட்டு ‘நாணயம் தவறிய கடன்தாரர்’ என நம் போட்டோ போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.

கடன் பெறுவதில் சில சலுகைகளை அரசாங்கம் நமக்கு வழங்குகிறது. உதாரணத்துக்கு வீட்டுக்கடனுக்கு வரிச்சலுகை பெற முடியும். இப்படி நமக்குச் சலுகைகள் தரக்கூடிய கடன்களைத் தவிர, இதர கடன்களை போனஸ் தொகை சேமிப்புத்தொகையைக் கொண்டு முன்கூட்டியே முடிப்பது நல்லது. கடனைக் கட்டி முடிப்பது சேமிப்புக்கு ஈடான ஒரு விஷயம்.

வங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி?

தேவையான கடனை மட்டுமே பெறுங்கள்!

தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும். எந்தக் காரணத்துக்காக நீங்கள் கடனை வாங்கப்போவதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வகை கடன் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அந்தக் கடனையே வாங்குவது அவசியம். காரணம், கடன் வகைக்கேற்ப வட்டி விகிதமும் மாறுபடும். மேலும் கடன் எதற்காக வாங்குகிறோம், வட்டி எத்தனை சதவிகிதம், எவ்வளவு காலத்துக்குள் திரும்பக் கட்ட முடியும் ஆகியவற்றையெல்லாம் யோசித்து வாங்கினால், கடன் சிக்கலில் நாம் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

அடுத்த கட்டுரைக்கு