Published:Updated:

என்.யு.இ லைசென்ஸ்... தரும்முன் ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன? ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

ரிசர்வ் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
ரிசர்வ் வங்கி

B A N K I N G

என்.யு.இ லைசென்ஸ்... தரும்முன் ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன? ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

B A N K I N G

Published:Updated:
ரிசர்வ் வங்கி
பிரீமியம் ஸ்டோரி
ரிசர்வ் வங்கி

இந்த டிஜிட்டல் யுகத்தில் சிங்கிள் டீ குடித்து விட்டு காசு தருவதில் இருந்து, ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது வரை எல்லாமே ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்கிற காலம் இது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

நாம் இப்படி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவும் பெறவும் பெரும் உதவியாக இருக்கும் அரசு அமைப்புதான், இந்திய தேசிய செலுத்து வாரியம் எனப்படும் என்.பி.சி.ஐ (National Payments Corporation of India). இந்த அமைப்பை 50 வங்கிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் நடக்கும் 41 பில்லியன் பணப் பரிமாற்றத்தில் பெருமளவு என்.பி.சி.ஐ மூலம் நடைபெறுகிறது.

ஆனால், சமீப காலமாக இதன் செயல்பாடுகளில் தடுமாற்றம் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. என்.பி. சி.ஐ-யின் குளறுபடிகளால் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் போன்ற பெரிய வங்கிகளில்கூட பல பரிமாற்றங்கள் ரிவர்ஸ் ஆகியுள்ளதாகச் செய்தி வெளியானது. இதனால், ரிசர்வ் வங்கி ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்குக் கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல், மியூச்சுவல் ஃபண்ட் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்.

என்.யு.இ லைசென்ஸ்... தரும்முன் ரிசர்வ் வங்கி செய்ய வேண்டியது என்ன?  ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஆனால், 50 வங்கிகள் பின்புலத்தில் இருந்தும் தடுமாறும் என்.பி.சி.ஐ-யை இன்னும் பலப்படுத்துவதை விடுத்து, ரிசர்வ் வங்கியானது என்.யு.இ (New Umbrella Entities) என்ற பெயரில் பணப் பரிபரிவத்தனை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முனைந்திருக்கிறது. இது அதிக லாபம் கொழிக்கும் இடம் என்பதால், அம்பானி முதல் டாடா வரை, அமேசான் முதல் பேடிஎம் வரை ஆறு நிறுவனங்கள் இந்த லைசென்ஸுக்கு விண்ணப்பித்துள்ளன. அவர்களுடன் முதலீட்டில் கைகோக்க அயல்நாட்டு நிறுவனங்களும் வரிசை கட்டி நிற்கின்றன.

அரசு நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தினாலே போதும், எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்கிற சிந்தனைப் போக்கு இன்று அதிகார வர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பார்க்க முடிகிறது. விளைவு, என்.பி.சி.ஐ அமைப்புக்கு மாற்றாக தனியார் நிறுவனங்களை உருவாக்க அரசு முனைகிறது.

இப்படி உருவாக்க நினைக்கும்போது நம் நாட்டில் பாரம்பர்யமாக இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு என்.யு.இ எனப்படும் ‘நியூ அம்பர்லா என்டிட்டி’க் கான அனுமதியைத் தந்தாலும் தவறில்லை; ஆனால், ஆரம்பித்து 10, 20 ஆண்டுகள்கூட ஆகாத நிறுவனங்களுக்கு எல்லாம் இந்த அனுமதியைத் தந்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை நம் மத்திய ரிசர்வ் வங்கி கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

2016-ம் ஆண்டில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா டிஜிட்டல் மயமாகி வருவது நல்ல விஷயம்தான் என்றாலும், அதிகரித்து வரும் இன்டர்நெட் மோசடிகளும், சைபர் குற்றங்களும் கவலை ஏற்படுத்து கின்றன. சமீபத்தில் பேடிஎம் நிறுவன ஆள் என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கே வந்த ஒருவர், பேடிஎம் நிறுவனத்துக்கான கே.ஒய்.சி-யை ஆன்லைனிலேயே முடிப்பதற்காக அந்த நிறுவனம் தன்னை நியமித்திருப்பதாகக் கூறி, அடையாள அட்டையையும் காட்டியிருக்கிறார். தன்னிடம் அதற்கான ஆப் இருப்பதாகக் கூறி, தன்னிடமிருந்த ஃபோனில் வாடிக்கையாளரின் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். அவரை நம்பாத வாடிக்கையாளர் பல கேள்விகளை எழுப்பியதும் போலி நபர் நழுவி ஓடியிருக்கிறார்.

சென்னையில் உள்ள தன் வீட்டை வாடகைக்குத் தருவதற்காக 99 ஏக்கர்ஸில் விளம்பரம் செய்தவருக்கு அடுத்த நாளே ஒரு போன் வந்திருக்கிறது. பேசிய பெண், தான் டேராடூனில் இருப்பதாகவும், அரசு வேலையில் இருக்கும் கணவர் பப்லூ குமாருக்கு இடமாற்றம் வந்ததால், சென்னையில் வீடு தேடுவதாகக் கூறியுள்ளார். ஆதாரமாக கணவரின் ஐ.டி கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றின் நகலை வாட்ஸ்அப்பில் அனுப்பி இருக்கிறார். வீட்டு உரிமையாளர் தன் பேடிஎம் அக்கவுன்ட் நம்பரை அனுப்பி வைத்தால் அட்வான்ஸ் பணத்தை உடனடியாக அக்கவுன்ட்டில் செலுத்திவிடுவதாகவும் கூறியுள்ளார்.

ஏதோ பொறி தட்டியதில், வீட்டு உரிமையாளர் நெட்டில் தேடியபோது, வட இந்தியர் ஒருவர், க்விக்கர்.டாட் காமில் பப்லூ குமார் என்பவரால் ஏமாற்றப்பட்டதைப் பதிவு செய்த விவரம் கிடைத்துள்ளது. அவர் பகிர்ந்திருந்த ஐ.டி கார்டு, ஆதார் கார்டு அனைத்தும் இவருக்கு வந்த அதே ஆதாரங்கள்தான். இடைப்பட்ட அரை மணி நேரத்தில் பேடிஎம் அக்கவுன்ட் நம்பரை உடனே அனுப்பும்படி பல வாட்ஸ்அப் செய்திகள் அந்தப் பெண்ணிடம் இருந்து வந்திருக்கின்றன.

இப்படி ஆன்லைன் நிறுவனங் கள் பெயரில் நடக்கும் மோசடிகள் பலப்பலவாக இருக்கிறது. இந்த மோசடிகளுக்கு எல்லாம் தகுந்த பதிலடி தருகிற மாதிரியோ, இது மாதிரியான மோசடிகள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்கிற மாதியோ இந்த நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக் கின்றன என்று தெரியவில்லை. ஆனால், என்.யு.இ-க்கான அனுமதியைக் கேட்டு இது மாதிரியான நிறுவனங்களும் விண்ணப்பம் செய்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

என்.யு.இ நிறுவனங்களுக்கான அனுமதியைத் தனியார் நிறுவனங்களுக்குத் தர ரிசர்வ் வங்கி முனைப்புக் காட்டுவதில் தவறில்லை. ஏனெனில், ரிசர்வ் வங்கி கூறுவதுபோல் “இவை தனியார் நிறுவனங்கள் என்ப தால், ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவும்; இதனால், இ-காமர்ஸ் விரிவடையும்; ஆன்லைன் வியாபாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் பல திட்டங்கள் வரும்; அதன் மூலம் பயனாளர்களும் பலனடைவர்” என்பதில் எல்லாம் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், எப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த அனுமதி தரப்பட வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். இந்தத் துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட பொதுத்துறை வங்கிகளும், புதிய தலைமுறை வங்கிகளுமே ஆன்லைன் மோசடிப் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது, தொடங்கி சில பத்தாண்டுகளே ஆன நிறுவனங்களுக்கு இந்த அனுமதியைத் தரத்தான் வேண்டுமா? அப்படித் தந்து, மக்கள் பணத்தை இழக்கும்பட்சத்தில், அவர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்?

நல்ல கட்டமைப்பு வாய்ந்த நிறுவனங்கள் தவிர, மற்ற நிதி நிறுவனங்கள் பிரச்னை என்று வந்துவிட்டால் பாதிப்படைந்தவர்களை அலைக்கழித்து ஏய்க்கும் செயல்பாடுகளையே மேற் கொள்கின்றன. அவற்றுடன் போராடிப் பணத்தை மீட்கும் திறன் நம்மில் பலரிடமும் இல்லை என்பதே உண்மை.

என்.யு.இ போன்ற புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது பாரம்பர்யமான நிறுவனங்களுக்கு முன்னுரிமை தருவதே நல்லது. சில சமயங்களில் முயலாக இல்லாமல், ஆமையாக இருப்பதும் நன்மைதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism