Published:Updated:

`வங்கிகள் இணைப்பால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமாகும்!‘ - தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்

தெ.சு.கவுதமன்

இந்தியாவில் ஏற்கெனவே வங்கிகள் இணைப்பு பலமுறை நடந்துள்ளது. ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைத்தபோது அந்த வங்கியின் 207 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக நஷ்டம் ஏற்பட்டது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( vikatan )

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாகி, ஜி.டி.பி அளவு, 5.8% என்பதிலிருந்து 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக சில முக்கிய அறிவிப்புகளைக் கடந்த இரண்டு வாரங்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவிலுள்ள 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைத்து 4 வங்கிகளாகக் குறைக்கும் முடிவு அதில் முக்கியமான ஒன்று.

வங்கி
வங்கி

மோடி தலைமையிலான அரசு ஏற்கெனவே எஸ்.பி.ஐ வங்கிகளின் துணை வங்கிகளை ஒன்றாக இணைத்தது. அடுத்தடுத்து இதே போல வங்கிகளை இணைத்ததால் 2017-ம் ஆண்டில் 27 என்றிருந்த வங்கிகளின் எண்ணிக்கை, தற்போது 12 எனக் குறைந்துள்ளது. வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் வங்கிக்கடன் கொடுப்பது அதிகரிக்குமென்றும், வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கிப் பணியாளர்கள் என இரண்டு தரப்புக்கும் சாதகமாக இருக்குமென்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியதுபோல் வங்கிகள் இணைப்பால் நன்மை கிடைக்குமா என்பது ஆய்வுக்குரியதே. வங்கிகள் இணைக்கப்படும்போது வங்கி மூலதனம் அதிகரிப்பதுபோல தெரிந்தாலும், வங்கிக்கிளைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் அதற்கேற்ப பராமரிப்புச்செலவு, பணியாளர்கள் ஊதியம் போன்றவையும் அதிகரிக்கக்கூடும். இந்த இணைப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக வருமானம் குறைவாக உள்ள வங்கிக்கிளைகளை மூடுவதற்கும் வாய்ப்புள்ளது. அதனால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம், ரிசர்வ் வங்கிக்கு பொதுத்துறை வங்கிகளைக் கண்காணிப்பது எளிமையாகும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

ஆனால், பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் மறைமுகமாக தனியார் வங்கிகளை மத்திய அரசு ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இப்படிக் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைத்து, ஒரு கட்டத்தில் வங்கித்துறை மொத்தமாகத் தனியார்மயமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை குறையும்போது சிறுகுறு தொழில்களில் ஈடுபடுவோர்களுக்கும், விவசாயிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பது பெரிய சிக்கலாகக்கூடும். சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டால் அதுவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய தடையாக அமையக்கூடும்.

`வங்கிகள் இணைப்பால் வங்கிகளின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்’ என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ் கூறுகையில், "இந்தியாவில் ஏற்கெனவே வங்கிகள் இணைப்பு பலமுறை நடந்துள்ளது. ஆனால், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன் துணை வங்கிகளை இணைத்தபோது அந்த வங்கியின் 207 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக நஷ்டம் ஏற்பட்டது. இப்போதுவரை அந்த வங்கி தடுமாற்றத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. தற்போது ஏப்ரல் ஒன்றாம் தேதி மூன்று வங்கிகளை இணைத்தார்கள். அதன்பிறகும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்
தாமஸ் ஃப்ரான்கோ ராஜேந்திர தேவ்
vikatan

பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இந்தச் சூழலில், பத்து வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை, பொருளாதாரத்தை இன்னும் கடுமையாகப் பாதிக்கும். இணைப்பு நடைபெறக்கூடிய வங்கிகளில் கடன் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். இணைப்புக்கான பணிகள் நடந்துமுடிய, குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும் என்று கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே கிடைத்த அனுபவத்திலிருந்து பார்க்கையில், இந்த இணைப்பு நடவடிக்கை முடியும்வரை புதிதாக வங்கிக்கடன் எதுவும் கிடைக்காது. சில வங்கிகளின் கிளைகளை இணைப்பார்கள், சில கிளைகளை மூடுவார்கள். இதற்கேற்ப வங்கிப்பணியாளர்களை பணிமாறுதல் செய்வார்கள். அனைத்து ஆவணங்களையும் மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொரு வங்கியின் இயக்குநர் குழுவிலும் வங்கிகள் இணைப்புக்கான ஒப்புதலை தனித்தனியாகப் பெற வேண்டும். அதன்பின் இணைக்கப்படவுள்ள வங்கிகள் இணைந்து ஒரு இயக்குநர் குழுக்கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட வேண்டும். இவையனைத்தையும் செயல்படுத்தும் காலகட்டத்தில் வங்கிகளில் வேறெந்தப் பணிகளும் நடைபெறாது.

ஏற்கெனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் புதிதாகக் கடன் கொடுப்பது குறையும்போது அது தொழில்முனைவோர்களையும், பெரிய தொழில் நிறுவனங்களையும் மேலும் பாதிப்படையச் செய்யும். இதன் விளைவாக இந்தியப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்பதே எதார்த்தமான உண்மை.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
vikatan

எனவே, வங்கிகள் இணைப்பின்மூலம் வங்கிகள் பெரிய வங்கிகளாக உருவெடுக்கக்கூடும் என்றும், அதனால் மேலும் நன்முறையில் செயல்பட முடியும் என்றும் கூறுவது வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது சரியான வாதமாக இல்லை. 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அமெரிக்காவிலுள்ள பெரிய வங்கிகள்தான் முதலில் பாதிப்படைந்தன. எனவே வங்கிகளைப் பெரிதாக்கினால் நல்லநிலையில் இயங்கும் என்பதற்கு வரலாற்றுரீதியாக எவ்வித ஆதாரமும் இல்லை. வங்கிகள் பின்னடைவைத்தான் சந்தித்திருக்கின்றன. எனவே இப்போது கொண்டுவரப்பட்டுள்ள வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் மேலும் சிக்கலைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றார்.