இனி 24 மணி நேரமும் இயங்கும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை... நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? #RTGS

ஆர்.டி.ஜி.எஸ் சேவையானது வங்கியின் வேலை நாள்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இனி 24 மணி நேரமும் இந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (Real Time Gross Settlement System) சேவை கிடைக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி, இந்த சேவை டிசம்பர் 14, 2020 முதல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஆண்டு முழுவதும் ஆர்.டி.ஜி.எஸ் சேவைகளை வழங்கும் வெகு சில நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இது இந்திய வங்கித் துறைக்கே பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஆர்.டி.ஜி.எஸ் சேவை என்பது..?
இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குப் பணம் அனுப்பப் பயன்படும் வங்கி சேவைதான் ஆர்.டி.ஜி.எஸ். இந்தச் சேவையானது வங்கியின் வேலை நாள்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இனி 24 மணி நேரமும் இந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த ஆர்.டி.ஜி.எஸ் சேவை மூலம் ஒரே வங்கியின் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பணம் அனுப்பிக்கொள்ளலாம். அதேநேரத்தில் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பிற வங்கிக் கணக்குக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப ரூ.24.50 கட்டணமாகவும், 5 லட்சம் ரூபாய்க்குமேல் பணம் அனுப்பினால் ரூ.49.50 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஜி.எஸ் கடந்து வந்த பாதை!
முன்பெல்லாம் வங்கிகளுக்கிடையே பெரிய பணப்பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் என்றால் வங்கி அதிகாரி காசோலையை கிளியரிங் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் கிளியரிங் செய்யாவிட்டால், பணம் வாங்கும் வங்கிக்கு அதனால் ஏற்படும் நஷ்டத்தை, பணம் செலுத்தும் வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பல வங்கிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்த முடியாமல் அவதிப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறியது.
2000-ல் வந்த தகவல் தொழில்நுட்பச் சட்டத்தால், வங்கித்துறை பெரும் புரட்சியைச் சந்தித்தது. இந்தச் சட்டத்தின் மூலம் மின்னணு தரவுகள், பரிவர்த்தனை நடந்ததற்குச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இது நேரடியாகச் சென்று பரிவர்தனை செய்யும் தேவையை நீக்கியது. பரிவர்த்தனையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், மின்னணு தரவுகளை நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்பிக்கலாம்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் ரிசர்வ் வங்கியின் அங்கமான வங்கி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (The Institute for Development & Research In Banking ) மின்னணு பணப் பரிவர்த்தனைகளில் உள்ள சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய்ந்தது. 2002-ல் ஆர்.டி.ஜி.எஸ் சேவையைக் கட்டமைக்கும் பொறுப்பை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த லாஜிகா நிறுவனத்திடம் ரிசர்வ் வங்கி வழங்கியது.

நான்கு வங்கிகளின் பங்களிப்புடன் ஆர்.டி.ஜி.எஸ் அமைப்பின் சோதனை ஓட்டம் சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில், ஏராளமான எச்சரிக்கையுடன், ஆர்.டி.ஜி.எஸ் சிஸ்டம், கொள்கைகள், நடைமுறைகள், பாதுகாப்பு மற்றும் பிற அம்சங்களும் வெளிப்புற நிபுணர்களின் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
2004-ல் அறிமுகம்!
பல கட்ட மதிப்பாய்வுக்குப் பிறகு, 71 உறுப்பினர்களுடன் 2004-ல் அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் வொய்.வி.ரெட்டியால் ஆர்.டி.ஜி.எஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்தச் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் நடந்தன. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆர்.டி.ஜி.எஸ்-ம், அதற்கு குறைவான தொகைக்கு என்.இ.எஃப்.டி (National Electronic Fund Transfer (NEFT) மற்றும் ஐ.எம்.பி.எஸ் (Immediate Payment Service (IMPS) போன்றவற்றையும் பயன்படுத்த 2010-ல் அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி.

இதனால் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஆகும் செலவுகள் பெருமளவில் குறைந்தன. சிறு, குறு நிறுவனங்களின் நலனுக்காக கடந்த 2019-ல் ஆர்.டி.ஜி.எஸ் சேவை இலவசமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டு, நவம்பர் மாதத்தில் மட்டும், ஆர்.டி.ஜி.எஸ் சேவையின் வாயிலாகக் கிட்டத்தட்ட ரூ.80 லட்சம் கோடி மதிப்புள்ள 1.38 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!