₹1.46 லட்சம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத 1,913 நிறுவனங்கள்... ஆர்.டி.ஐ அதிர்ச்சி!

நடப்பு ஆண்டின் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 1,913 பேர் வேண்டுமென்றே கடனைத் திரும்பத் தராத வில்ஃபுல் டிஃபால்டர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயிகள், சிறு, குறு தொழிலாளர்கள், வீட்டுக்கடன் அல்லது கார் கடன் வாங்கும் சம்பளதாரர்கள் யாரேனும் ஒரு மாதக் கடன் தவணையைக் கட்டாமல்போனால், வங்கிகள் அவர்களிடன் கறாராகப் பேசி, அந்தத் தவணையை வாங்குகின்றன. கடன் வாங்கியவருடைய சூழ்நிலை கருதி, ஓரிரு மாதங்கள்கூட கால அவகாசம் வழங்குவதில்லை.
ஆனால், பிரபல நிறுவனங்களின் தொழிலதிபர்களில் பலர் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு, அதைக் கட்டமுடியாமல் போகும்போது, அவர்களை மட்டும் 'வில்ஃபுல் டிஃபால்டர்' என அறிவித்துவிடுகிறார்கள். அவர்கள் செலுத்த வேண்டிய பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில்கூட வங்கிகள் இறங்குவதில்லை என்பது வங்கித் துறையின் மீது மக்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டாகவே இருந்துவருகிறது.

புனே நகரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் வேலன்கர், இந்தியாவில் இருக்கும் 'வில்ஃபுல் டிஃபால்டர்கள்' எத்தனை பேர் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அவர்களின் விவரங்களைக் கேட்டு ஆர்.டி.ஐ பதிவு செய்திருந்தார். அவருக்கான பதிலையும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.
அந்த விவரங்களின்படி, நடப்பு ஆண்டின் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 1,913 பேர் வில்ஃபுல் டிஃபால்டர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வங்கி வாயிலாக வாங்கி, திரும்பச் செலுத்தாமல் இருக்கும் தொகையின் மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடி.
இவர்களில் 264 பேர் 100 கோடி ரூபாய்க்குமேல் கடன் வாங்கியிருக்கிறார்கள். மற்ற 1,649 பேர் 100 கோடி ரூபாய்க்கும் குறைவான கடன்களை வாங்கியிருக்கிறார்கள். அந்த 264 பேரில் 23 பேர் வாங்கியிருக்கும் கடன் 1,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இவர்களின் மொத்தக் கடன் மதிப்பு மட்டும் 43,324 கோடி ரூபாய்.
அது போக, 500 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 324 பேர். இவர்கள் வாங்கியிருக்கும் கடன் மதிப்பு 22,105 கோடி ரூபாய்.

100 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 207 பேர். இவர்கள் வாங்கியிருக்கும் கடன் மதிப்பு 43,095 கோடி ரூபாய். இந்த 264 பேர் வாங்கியிருக்கும் மொத்த கடன் மதிப்பு மட்டும் 1.08 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சியின் நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் (ரூ.5,747 கோடி), ரெய் அக்ரோ லிமிடெட் (3,516.56 கோடி) மற்றும் ஃப்ராஸ்ட் ( Frost) இன்டர்நேஷனல் லிமிடெட் (ரூ.3,097 கோடி) ஆகிய இந்த மூன்று நிறுவனங்களும், இந்தப் பட்டியலில் டாப் 3 இடத்தில் இருக்கின்றன.