Published:Updated:

`முற்பட்ட பிரிவினருக்கு 28.5!'‍- கட்-ஆஃப் சர்ச்சைக்கு ஸ்டேட் வங்கி சொல்வது என்ன?

தெ.சு.கவுதமன்

``முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரில் தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்துள்ளோம் என எஸ்பிஐ வங்கி சொல்கிறது'' என்கிறார் ஃபிராங்கோ.

எஸ்பிஐ
எஸ்பிஐ ( vikatan )

எஸ்பிஐ வங்கியில் 2019-ம் ஆண்டுக்கான கிளார்க் பதவிக்கான முதற்கட்டத் தேர்வில் இட ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பிலுள்ள கட்-ஆஃப் மார்க் விவரங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்திலும் பகிரப்பட்டு வருகின்றது.

எஸ்பிஐ தேர்ச்சிக்கடிதம்
எஸ்பிஐ தேர்ச்சிக்கடிதம்
vikatan

அதில் முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் 28.5 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தேர்வில் மேற்கு வங்கத்தில் தேர்வுபெற்றவருக்கான சான்றிதழில் இந்த பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி இத்தகைய கட்-ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்பட்டதாகவும், இது சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறையையே கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தே.தாமஸ் ஃப்ராங்கோ ராஜேந்திர தேவிடம் பேசினேன். ``இந்தப் பிரச்னையிலுள்ள உண்மைத்தன்மை குறித்து மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் தலைமையகத்தோடு தொடர்புகொண்டு பேசினேன். முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரில் தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களையும் குறைத்துள்ளோம் என்று தெரிவித்தார்கள். இது தவறான அணுகுமுறை. இந்த இட ஒதுக்கீடு விகிதமும்கூட மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த விகிதத்தை பூஜ்ஜியம் என்றெல்லாம் வைத்திருப்பது ஏற்க முடியாததாக உள்ளது. தேர்வில் எதுவுமே எழுதாவிட்டாலும்கூட தேர்ந்தெடுக்கப்படுவது முரணான ஒன்று. தேர்வெழுதிய மற்ற பிரிவினருக்கும் இவர்களுக்குமான விகிதாசார வேறுபாடு ஏற்கக்கூடியதல்ல.

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ

இதில் இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அனைத்துத் துறையிலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் முழுமையாகத் தேர்ந்தெடுக்கப்படாததற்கு காரணமாக அவர்கள் தங்கள் கட்- ஆஃப் மார்க்கைக்கூட எட்டுவதில்லை. அதனால்தான் அந்த இடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படவில்லை என்று சொல்லிவந்தார்கள். ஆனால், தற்போது முற்பட்ட வகுப்பில் நலிவடைந்த பிரிவில் தேர்வெழுதியவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக்கூறி கட்-ஆஃப் மார்க்கையும் குறைத்துள்ளார்கள். இந்தப் புதிய நடைமுறை தவறான ஒன்று.

இன்னொன்று, எஸ்.சி/எஸ்.டி பிரிவைச்சேர்ந்த ஒருவர், பொதுப்பிரிவினருக்கான கட்-ஆஃப் மார்க்கைவிட அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும்கூட அவரை எஸ்.சி/எஸ்.டி பிரிவின்கீழ் தான் கணக்கில்கொள்வார்கள். இதன்காரணமாக பொதுப்பிரிவில் பெரும்பாலும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே தேர்வாகிவருவார்கள். தற்போது முற்பட்ட வகுப்பில் நலிவடைந்த பிரிவுக்காக மட்டும் இந்த மதிப்பெண் விகிதத்தை அனைத்துப் பிரிவினரையும்விடக் குறைத்திருப்பது, மற்ற அனைத்துப்பிரிவினருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எஸ்பிஐ
எஸ்பிஐ
vikatan

மொத்தத்தில் இந்த இட ஒதுக்கீடு விகிதாசாரம் தவறான அணுகுமுறை. உடனடியாக எஸ்பிஐ வங்கி இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.